இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலம் முடக்க நிலைமை அறிவிக்கப்பட்ட போதிலும், நாளைய தினம் (20) முதல் அந்த முடக்க நிலைமை கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் தளர்த்தப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய பகுதிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.

மீண்டும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் எதிர்வரும் நாட்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் இராணுவ தளபதியும், கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலைமை மிகவும் சிறந்ததாக உள்ளதென லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

தாம் திட்டமிட்ட வகையில் நாட்டை சிறந்ததொரு நிலைமைக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது தற்போது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கே கடந்த காலங்களில் கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சர்வதேசத்திற்கு இடையிலான நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என இராணுவ தளபதியிடம் வினவப்பட்டது.

இலங்கைக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை ஆரம்பிப்பது குறித்து தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றை இலங்கை எதிர்கொள்ளும் ஐந்தாவது வாரம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தற்போது காணப்படுகின்ற நிலையில், சர்வதேச எல்லையை திறக்கின்றமை குறித்து எதிர்பார்க்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் ஷவேந்திர சில்வா கூறினார்.

முதலில் இலங்கையின் நிலைமையை ஸ்திரப்படுத்தியதன் பின்னரே, சர்வதேச எல்லையை திறந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் நிலைமை அவதானிக்கின்ற விதத்தில் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 வைரஸ் ஒழிப்பிற்காக நாட்டு மக்கள் பாரிய அர்ப்பணிப்புக்களை செய்துள்ளதாகவும், 95 சதவீதமானோர் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மதித்து செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் அர்ப்பணிப்பு காரணமாகவே வெகுவிரைவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும் ஷவேந்திர சில்வா கூறினார்.

கோவிட் 19 தொற்றை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒரே எதிர்பார்ப்பதாக இருந்தது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், கோவிட் – 19 வைரஸ் ஒழிப்பை மேற்கொள்வதற்கான பாரிய பொறுப்பு தம்வசம் காணப்படுவதாகவும், அதனை சரிவர நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் தமக்குள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பின்னணியில், வெளிநாடுகளுக்கு செல்வது, வெளிநாட்டு தொடர்புகளை பேணுவதற்கு அவசரப்பட தேவையில்லை என கூறிய ஷவேந்திர சில்வா, சர்வதேச தொடர்புகள் தற்போதைய நிலைமைக்கு முக்கியம் அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தர 59,000திற்கும் அதிகமான இலங்கையர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களை அழைத்து வர எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அவர்கள் தங்கியுள்ள நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அவர்கள் இலங்கைக்குள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டே தமது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.

அந்த எந்த காலமாக இருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருகைத் தருகின்ற இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார்.

இலங்கைக்குள் 50,000 கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக கூறப்படும் கருத்து உண்மை எனவும் அவரிடம் வினவப்பட்டது.

இலங்கையில் கோவிட் – 19 அடையாளம் காணப்பட்ட மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளிநாடுகளிலிருந்து அவ்வாறான தொகை பயணிகள் நாட்டிற்குள் வருகைத் தந்த போதிலும், அந்தளவிலான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கே உண்மை நிலவரம் தெரியும் என இராணுவ தளபதியும், இராணுவ தளபதியும், கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் ஒழிப்பின் பின்னர் புதியதொரு இலங்கையை கட்டியெழுப்புவது நிச்சயம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பிரச்சினைகள் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கைக்குள் முடியுமானளவு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு உள்நாட்டு உற்பத்தியிலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னிறைவுடனான திட்டத்தை நோக்கி இலங்கை எதிர்காலத்தில் நகரும் என்ற எதிர்பார்ப்புடன் தாம் கடமையாற்றி வருவதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இலங்கையிடம் அனைத்து விதமான வளங்களும் காணப்படுகின்ற போதிலும், இலங்கை இதுவரை வெளிநாடுகளை அதிகளவில் நம்பியிருந்ததாக அவர் கூறினார்.

எனினும், இனிவரும் காலங்களில் இலங்கை புதியதொரு கோணத்தை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக இராணுவ தளபதியும், கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.

Share.
Leave A Reply