2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.

சரி. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும்.

சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் இது வயது, பாலினம் மற்றும் ஒருவரது உடல்நலப் பிரச்சனைகளையும் சார்ந்ததாகும்.

நீங்கள் எந்தளவிற்கு எவ்வளவு காலம் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்களோ, அதையும் பொறுத்தே நீங்கள் எப்போது குணமடைவீர்கள் என்பது இருக்கிறது.

லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தால் என்ன செய்வது?

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இரண்டு முக்கிய அறிகுறிகளே தென்படும். ஒன்று இருமல். மற்றொன்று காய்ச்சல்.

ஆனால் சிலருக்கு இந்த அறிகுறிகளோடு, உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும்.

ஆரம்பத்தில் வறட்டு இருமலே இருந்தாலும், போகப்போக சிலருக்கு சளி வரத்தொடங்கும்.

அதிக நீராகாரங்களை எடுத்துக் கொள்வது, நல்ல ஓய்வு மற்றும் பாராசிடமால் போன்ற வலி நிவாரணிகளை கொடு இதனை சரிசெய்ய முடியும்.

லேசான அறிகுறிகள் இருப்பவர்கள், விரைவாக குணமடைந்துவிடுவார்கள்.

இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவார்கள் என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தீவிர அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?

சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் தீவிரமாக இருக்கலாம். இத்தொற்று தாக்கிய 7 – 10 நாட்களுக்கு இது நடக்கலாம்.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரல் வீக்கமடையும்.

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, இந்த வைரஸை எதிர்த்து போராடுவதே இதற்கு காரணம்.

ஆக்ஸிஜன் சிகிச்சைக்காக சிலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படும்.

இந்தப் பிரச்சனை சரியாக இரண்டில் இருந்து எட்டு வாரங்கள் ஆகலாம்.

தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் என்ன செய்வது?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிடுகிறது. அவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகள் தேவைப்படலாம்.

எந்த நோயாக இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து குணமடைந்து திரும்ப சில நாட்கள் ஆகும். வழக்கமாக அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பாக, பொது அறைக்கு மாற்றப்படுவது வழக்கம்.

தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து மீண்டு வந்த எவரும் மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப 12 – 18 மாதங்கள் ஆகலாம் என்கிறார் தீவிர சிகிச்சை மருத்துவப்பிரிவின் பேராசிரியர் தலைவரான மருத்துவர் ஆலிசன் பிட்டார்ட்.

நீண்ட நாட்கள் மருத்துவமனையில் படுக்கையில் இருந்ததால் அவர்களுக்கு தசைகள் வலுவிழக்கும் வாய்ப்புள்ளது. தசைகள் மீண்டும் வளர்வதற்குச் சற்று காலம் பிடிக்கும்.

தீவிர சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்த சிலருக்கு பிரம்மை அல்லது மனஅழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் கூட வரலாம்.

கொரோனா வைரஸால் நீண்ட கால உடல்நல பாதிக்கப்படுமா?

இதுகுறித்து சரியான தகவல் மற்றும் தரவுகள் இல்லையென்றால், இதுதொடர்பான மற்ற நிலைகளை பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக இயங்கினால், நுறையீரல் வீக்கம் அடைந்து அந்த நோயாளிக்கு மோசமான சுவாசக் கோளாறு நோய்க்குறி ஏற்படலாம்.

இதனால், உடல்நல மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சனைகைள் ஏற்படலாம் என கார்டிப் மற்றும் வேள் பல்கலைக்கழகத்தின் சுகாதார அமைப்பில் பிசியோதெரபிஸ்ட் பால் ட்வோஸ்.

இதுவரை எத்தனை பேர் குணமடைந்திருக்கிறார்கள்?

ஏப்ரல் 19ஆம் தேதி நிலவரப்படி, உலகளவில் கொரோனா தொற்றால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,55,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

ஆனால், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பரிசோதனை முறை, மற்றும் மரணங்களை பதிவு செய்யும் முறை வேறுபடுவதால், இந்தத் தரவுகளில் மாற்றம் இருக்கலாம்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவருக்கும் மீண்டும் இந்த பாதிப்பு ஏற்படுமா?

இதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

ஒருவர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டார் என்றால், அவரின் உடல் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி, சரியான பரிசோதனை செய்யாததால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.

Share.
Leave A Reply