புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று கூறப்படுவதால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் மத்திய சீன நகரான வூஹானில் அமைந்திருக்கும் முக்கியமான நோய்நுண்மவியல் ஆய்வுகூடம் (Chinese Virology Laboratory) இந்த ஆட்கொல்லி வைரஸ்  அங்கிருந்து தோன்றி உலகம்பூராவும் பரவி பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முதற்தடவையாக மறுத்திருக்கிறது. புதிய  கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று இந்த ஆய்வுகூடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பலர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவைரஸ் தொற்றுநோயை கையாண்ட முறையில் ஔிவுமறைவின்றி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக சீனா உலகளாவிய நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இதுவரையில் இந்த நோய் உலகில் 2,333,160 பேருக்கு தொற்றியிருப்பதுடன் 160,790 பேரை பலியெடுத்திருக்கிறது.

உலகெங்கும் பரவுமுன்னதாக புதிய கொரோனாவைரஸ் வூஹான் ஆய்வுகூடத்தில் இருந்து “தப்பிச்சென்றதாக” வெளியாகின்ற செய்திகளை தனது நிருவாகம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சனிக்கிழமை ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.” அந்த அறிக்கைகளை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். பலர் ஆராய்கிறார்கள். அதில் நியாயம் இருக்கிறது போலத்தெரிகிறது” என்று செய்தியாளர் மகாநாட்டில் அவர் சொன்னார். கொவிட் — 19 வைரஸின் தொடக்கப்புள்ளியாக விளங்குகின்ற சீனாவின்  வூஹான் நகரில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில்  இருந்து கொரோனாவைரஸ் தப்பிச்சென்றதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள விசாரணை எதுவும் நடைபெறுகின்றதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாகவே அவர் அதைச் சொன்னார்.

கடந்த வருடம் டிசம்பரில் வூஹானில் இந்த வைரஸ் வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து அதன் மரபுக்கூறு வூஹான் நோய்நுண்மவியல் நிறுவனத்தில் இருந்து அல்லது அதற்கு அருகாமையில் உள்ள ஹுவானான் கடலுணவு சந்தையில் இருந்து தோன்றியதா இல்லையா என்பது தொடர்பில் ஊகங்கள் பரவலாக இருந்துவருகின்றன. இந்த நிறுவனத்தின் பி.4 ஆய்வுகூடம் பயங்கரமான வைரஸ்களைக் கையாளுவதற்கான வசதிகளைக்கொண்டதாக இருக்கிறது.

இந்த ஆய்வுகூடம் வதந்திகளை பெப்ரவரியில் அறிக்கையொன்றின் மூலம் ஏற்கெனவே நிராகரித்திருந்த போதிலும், அதன் பணிப்பாளர் யுவான் ஷிமிங் முதன்முதலாக அளித்திருக்கும் நேர்காணலொன்றில் கொவிட் — 19 வைரஸின் தோற்றுவாய் தனது நிறுவனம் என்று வருகின்ற வதந்திகளை நிராகரித்திருக்கிறார்.

” எமது நிறுவனத்தில் எத்தகைய ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன என்பதையும் வைரஸ்களும் மாதிரிகளும் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நாம் அறிவோம். இந்த வைரஸ் எம்மிடமிருந்து வருவதற்கு வாய்ப்பே கிடையாது. எம்மிட் கண்டிப்பான ஒழுங்குவிதி முறைகள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்கான ஒழுக்கக்கோவையையும் நாம் பின்பற்றியே செயற்படுகின்றோம். அதனால் நாம் இதை நம்பிக்கையுடன் கூறுகின்றோம் ” என்று ஷிமிங் தெரிவித்தார்.

“நோய்நுண்மவியல் நிறுவனமும் பி.4 ஆய்வுகூடமும் வூஹானில் அமைந்திருப்பதால், மக்கள் எங்களுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வது தவிர்க்கமுடியாதது. எந்தவொரு சான்றும் அறிவும் இல்லாத மக்களை சிலர் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று அமெரிக்கக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துச் சொன்னார்.

” இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாமே முற்றிலும் ஊகங்களை அடிப்படையாகக்கொண்டவை. மக்களைக் குழப்பத்திற்குள்ளாக்குவதும் தொற்றுநோய்க்கு எதிரான எமது நடவடிக்கைகளிலும்  விஞ்ஞான செயற்பாடுகளிலும்  தலையீடு செய்வதுமே அவற்றின்  நோக்கமாகும். சிலவழிகளில் அவர்கள் தங்களது இலக்குகளைச் சாதித்திருக்கலாம். ஆனால், ஒரு விஞ்ஞானி என்றவகையிலும் விஞ்ஞான, தொழில்நுட்ப முகாமையாளர் என்றவகையில் அது சாத்தியமில்லாதது என்பதை நான் அறிவேன் ”  என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட் — 19 செயற்கையானது என்பதை நிரூபிப்பதற்கு எந்த சான்றும் கிடையாது எனறு குறிப்பிட்ட ஷிமிங், வைரஸ் மனிதனால் உருவாக்கப்படமுடியாதது என்றார். “

தவிரவும்,பல்வேறு கூறுகளைச் சேர்த்து  வைரஸ் ஒன்றை உருவாக்குவதற்கு அதிவிசேடமான விவேகமும் கடும் உழைப்பும் தேவை.எனவே, இன்றைய கட்டத்தில் வைரஸ் இத்தகைய  ஒன்றை உருவாக்குவதற்கான ஆற்றல் மனிதர்களிடம் இருப்பதாக ஒருபோதும் நம்பப்படவில்லை ” என்றும் அவர் கூறினார்.

வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தனது நிறுவனம் கொவிட் — 19 இன் மரபணுத்தொடரை உலக சுகாதார நிறுவனத்துடனும் உணவு, விவசாய நிறுவனத்துடனும் பகிர்ந்துகொண்டதாகவும் நோய்நுண்மவியல் நிறுவனம் மற்றும் மிருகவிஞ்ஞான ஆய்வுகூட நிறுவனம் என்ற வகையி்ல் உலகில் மிருக வகைமாதிரிகளை உலகில் முதன்முதலில் உருவாக்கியவர்கள் தாங்களே என்றும் என்னதான் இருந்தாலும் சதிக்கோட்பாடுகள் பரவலானவையாக இல்லை என்றும் ஷிமிங் கூறினார்.

Share.
Leave A Reply