இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 2,154 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச நோய்த்தொற்று எண்ணிக்கை இதுவே ஆகும்.
நேற்றிரவு 9 மணி வரையிலான தரவின்படி, இந்தியாவில் இதுவரை 3,54,969 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 16,365 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் குறித்த இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) எண்ணிக்கையும் வேறுபடுகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இடையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யு) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிப்ரவரி 27 முதல் மாா்ச் 22 வரை பெண்கள் தொடா்புடைய 396 குற்றங்கள் குறித்து தேசிய மகளிா் ஆணையத்திற்கு புகாா் செய்யப்பட்டுள்ளன. மாா்ச் 23 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை இதுபோன்று 587 புகாா்கள் வரப்பெற்றன.
குடும்ப வன்முறை தொடா்பாக கடந்த 25 நாள்களில் 239 புகாா்கள் ஆணையத்திற்கு வந்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டெல்லியில் நோய் அறிகுறியே இல்லாத 186 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி”
“டெல்லியில் மக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்ய முடிவெடுத்துள்ளோம். முடக்க நிலை அமலில் இருக்கும் வரை கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் இருக்காது” என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 1,893 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. “டெல்லியில் நேற்று கோவிட்-19 நோய்த்தொற்று உறுதியான 186 பேரும் கொரோனா வைரஸூக்கான அறிகுறியே தென்படாதவர்கள். இது மிகவும் கவலைக்குரியது. டெல்லியில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், இன்னும் கட்டுக்குள்தான் இருக்கிறது என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை” என்று கேஜ்ரிவால் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.