இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் பலரும் பல்வேறு வகையிலான பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாத சம்பளத்திற்கு பணிப் புரிவோரும் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள போதிலும், அவர்களை விடவும் நாளாந்த மற்றும் சுயதொழிலில் ஈடுபடுவோர் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

அவ்வாறான ஒரு தரப்பினர் குறித்து பிபிசி தமிழ் இன்று ஆராய்கின்றது.

இலங்கையின் மலையக பகுதிகளில் இயற்கை வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என வர்ணிக்கப்படுகின்ற மலையகத்திலேயே தேயிலை, ரப்பர், மரக்கறி உள்ளிட்ட செய்கைகள் செய்யப்படுகின்றன.

இதையும் தவிர்ந்த மற்றுமொரு செய்கையாக பூ வளர்ப்பை மலையக மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும், பதுளை மாவட்டத்திலேயே இந்த பூ வளர்ப்பு அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பதுளை மாவட்டத்தின் தியதலாவை – பாலமதுறுகம பகுதியில் இந்த வியாபாரம் மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றது.

பல வகையிலான பூக்களை வளர்த்து, அதனை பறிந்து இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

திருமண மாலைகள், ஆலயத்திற்கான மாலைகள், நிகழ்வுகளுக்கான மாலைகள், பூக்களை கொண்டு வடிவமைக்கும் அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு அழகிய தேவைப்பாடுகளுக்காக இந்த பூக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தியதலாவை பகுதியிலிருந்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த தொழிலில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் இந்த பகுதி மக்கள் பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியாத நிலைமையினால், பூ மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

பூக்கள் பூத்து குலுங்கினாலும், அந்த பூக்களின் ஊடாக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிர்கதி நிலைக்கு அந்த பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கை என்ன?

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் தமது வியாபாரத்தை செய்ய முடியாத நிர்கதி நிலைக்கு அந்த பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமது வாழ்வாதார தொழிலாக பூக்களை விற்பனை செய்யும் தமக்கான வறுமையை போக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் தீர்வு தான் என்ன என்பதே இந்த பகுதி மக்களின் ஒரே கோரிக்கை.

பூக்களை மாத்திரமே செய்கை செய்து விற்பனை செய்யும் தமக்கு வேறு வருமானங்கள் கிடையாது எனவும், மாற்று தொழில் வாய்ப்புக்களும் தமது பிரதேசத்தில் கிடையாது எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக 5000 ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறிவருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக வருமானத்தை இழந்துள்ள அனைத்து தரப்பிற்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மரக்கறி விற்பனையாளர்களும் தற்போது பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் ராணுவம்

மரக்கறி உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்கள் உற்பத்திகளை கொள்வனவு செய்கின்ற போதிலும், உரிய விலையில் விற்பனை செய்ய முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அங்கலாய்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை ராணுவம் கொள்வனவு செய்து வருவதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தின விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

விவசாயிகளிடமிருந்து ராணுவம் அனைத்து மரக்கறிகளையும் கொள்வனவு செய்து, அவற்றை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு பகிர்ந்தளித்து வருவதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று 12 மில்லியனுக்கும் அதிகமான மரக்கறி வகைகளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ராணுவத்திற்கு சொந்தமான 43 லாரிகளில் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு பகுதி விவசாயிகளிடமிருந்தே இந்த மரக்கறி வகைகளை ராணுவம் கொள்வனவு செய்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய பகுதிகளுக்கு பகிர்ந்து வருகின்றது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பிற்கும் தாம் தொடர்ந்தும் அனைத்து உதவிகளையும் செய்யவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். உலகத்தை அச்சுறுத்திவரும் கொரொனா தொற்று காரணமாக அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு நாடும் தமது பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டு வருகின்றது.

Share.
Leave A Reply