முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட வற்றாப்பளை மகாவித்தியாலயம்,  விடுமுறையில் வீடுகளுக்கு  சென்று வந்த இராணுவத்தினரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக மக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று (28.04.2020) கையகப்படுத்தப்பட்டுள்ளது.

 

நேற்றையதினம் மாலை பாடசாலை அதிபரை அழைத்த  இராணுவத்தினர் , பாடசாலை வளாகத்தின் வசதிகளை பார்வையிட்டு அங்கே விடுமுறை முடித்து முகாம்களுக்கு திரும்பும் படையினரை 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தி கண்காணிப்பதற்காக பாடசாலை வளாகத்தை பெற நடவடிக்கை மேற்கொள்வதை அறிந்து கிராம மக்கள் பாடசாலை வாயில் கதவை மறித்து படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதன்போது குறித்த பகுதிக்கு இராணுவத்தினர் பொலிஸார் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவழைக்கப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்கள் அதற்கு சம்மதிக்காத நிலையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று கொண்டிருந்த சமயத்தில் இராணுவத்தினர் சிலர் அந்த பாடசாலை வளாகத்தில் துப்புரவு செய்வதற்குரிய பொருட்களுடன் வருகை தந்து வளாகத்திற்குள் சென்று துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர் .

இந்த செயற்பாடுகளுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்ட  போதும் இராணுவத்தினர் 15 நாட்களுக்குள் இந்த செயற்பாடு நிறைவு பெறும் என்றும் இந்த பதினைந்து நாட்களுக்கு மாத்திரம் இந்த பாடசாலையை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தனர்.  அதன் விளைவாக மக்கள் எதிர்ப்புக்களையும் மீறி குறித்த பாடசாலை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply