விழுப்புரம்: “அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே?” என்று 15 வயது சிறுமி கேட்டு அழும் வீடியோ வெளியாகி, தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியை சேர்ந்த தம்பதி ஜெயபால் – ராஜி.. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்..

இதில் மூத்த மகள்தான் ஜெயஸ்ரீ.. 10-ம் வகுப்பு படித்து வந்தார்.. 15 வயதாகிறது. விவசாயி கூலி செய்து வரும் ஜெயபால், வீட்டிலேயே ஒரு சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று தம்பதி இருவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்தார்

காலை 11 மணி இருக்கும்.. திடீரென வீட்டிற்குள் இருந்து புகை வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு ஜெயபால் வீட்டிற்குள் சென்றனர்..

அங்கே ஜெயஸ்ரீ நெருப்பில் வெந்து கொண்டிருந்தார்.. உடம்பெல்லாம் தீ பற்றி எரிய அலறி துடித்தார்.. அதை பார்த்து பதறிய அவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அப்போதே ஜெயஸ்ரீக்கு 95 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.. தீவிர சிகிச்சையும் நடந்தது.. அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்..

ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர். அவர்களிடம் ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தில் “அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே? என்று அழுதார்.

இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாகவே நடந்துள்ளது.. முருகனும், கலியபெருமாளும் வீட்டிற்குள் நுழைந்து, ஜெயஸ்ரீயின் கை, காலை கட்டிப்போட்டுவிட்டு, வாயில் துணியையும் அழுத்திவிட்டு கெட்ட வார்த்தைகளில் திட்டி உள்ளனர்..

 

அதன்பிறகு 2 பேரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.. இறுதியாகதான் அங்கிருந்த பெட்ரோலை எடுத்து ஜெயஸ்ரீ மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, கடைசியில் வீட்டையும் வெளிப்பக்கமாகவும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர் என்கிறார்கள்.

ஜெயஸ்ரீயின் இந்த வாக்குமூலம் வீடியோவாகவும் எடுக்கப்பட்டது.. அப்போது கண்களை கூட ஜெயஸ்ரீயால் திறக்க முடியவில்லை.. முகமெல்லாம் வெந்து காணப்பட்டது.. முழுதுமாக கருகி உள்ளது.

 

. வாக்குமூல வரிகளையே கஷ்டப்பட்டுதான் சொன்னார்.. இந்த உருக்கமான காட்சி சோஷியல் மீடியாவிலும் பரவி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பதற வைத்தும் வருகிறது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனையும், கலியபெருமாளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தாலும், ஜெயஸ்ரீ கேட்ட கடைசி கேள்வி இன்னமும் ஒலித்து கொண்டே… மனதை துளைத்தெடுத்தும் வருகிறது “என் அப்பன் எங்கே?”

Share.
Leave A Reply