ஜெர்மனியில் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நிகழ்ந்த குண்டு வீச்சில் தப்பித்த முதலை ஒன்று தற்போது இறந்துவிட்டது.

இந்த முதலை நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று ஒரு காலத்தில் புரளி பரவியது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நேற்று இந்த முதலை உயிரிழந்தது.

சேட்டர்ன் என்று பெயரிடப்பட்ட அந்த முதலைக்கு 84 வயது.

அமெரிக்காவில் பிறந்த இந்த முதலை, 1936ல் பெர்லினில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் 1943ல் நிகழ்ந்த குண்டு வீச்சு சம்பவத்தில் சேட்டர்ன் அங்கிருந்து தப்பியது.

பின்னர் 3 ஆண்டுகள் கழித்து இந்த முதலையை கண்டுபிடித்த பிரிட்டன் ராணுவ வீரர்கள் இதனை சோவியத் யூனியனிடம் ஒப்படைத்தனர்.

1946ல் இருந்து பல்வேறு நாடுகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் இந்த முதலையை பார்த்து சென்றுள்ளனர்.

“சேட்டர்னை 74 ஆண்டுகளாக வளர்த்த பெருமை எங்களுக்கு உண்டு” என அந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகத்திலேயே மிகவும் வயதான முதலையாக சேட்டர்ன் இருந்திருக்கலாம். செர்பியாவில் பெல்கிரேட் உயிரியல் பூங்காவில் இருக்கும் மற்றொரு ஆண் முதலையும் தனது 80களில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

புரளி

ஹிட்லருக்கு சொந்தமான முதலைகளில் சேட்டர்னும் ஒன்று என ஒரு காலத்தில் புரளி பரவியது. ஆனால், அது உண்மையல்ல.

இந்தப் புரளி எவ்வாறு தொடங்கியது என்பது தெரியவில்லை.

இந்தப் புரளியை மறுத்துள்ள மாஸ்கோ உயிரியல் பூங்கா, “விலங்குகள் அரசியலுக்கானவை அல்ல. மனிதர்கள் செய்த குற்றங்களுக்கு விலங்குகளை பொறுப்பாக்க கூடாது” என்று தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போர்

1943ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போர் குண்டு வீ்ச்சில் இந்த முதலை எப்படி தப்பித்தது என்றும் தெளிவாகத் தெரியவில்லை.

நாஜி ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில், 1945ல் இரண்டாம் உலகப்போர் முடியும் முன்பு நேச நாடுகளால் அங்கு தொடர்ந்து குண்டு வீசப்பட்டுவந்தது.

1943 நவம்பர் மாதம் நடந்த இந்த குண்டு வீச்சில், பல்வேறு இடங்கள் சிதைந்து போயின. அவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் உயிரியல் பூங்கா இருந்த டைர்கார்டன் மாவட்டமும் ஒன்று

இந்த குண்டு வீச்சுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். அதே நேரத்தில் உயிரியல் பூங்காவில் இருந்த பல விலங்குகளும் கொல்லப்பட்டன.

உயிரியல் பூங்காவில் இருந்த மீன் அருங்காட்சியம் குண்டு வீச்சில் நேரடியாக சேதமடைந்தது.

தெருக்களில் நான்கு முதலைகள் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

ஆனால், எப்படியோ தப்பித்த சேட்டர்ன், போரினால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தது.

Share.
Leave A Reply