ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 பள்ளிகளில் பணியாற்றி ஒரு.1 கோடி வரை ஊதியம் பெற்ற கில்லாடி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாநில மேற்குப்பகுதியில் உள்ள காஸ்கன்ச் பொலிஸார் வரை கைது செய்து விசாரணை துவக்கி உள்ளனர்.

உ.பி.யின் அரசு பள்ளிகளில் பல்வேறு வகை ஊழல் புகார்கள் அவ்வப்போது வருவது உண்டு. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது வெளியாகியுள்ள புகார், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது.

இம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஸ்தூரிபா காந்தி சிறுமிகள் பள்ளி(கேஜிபிவி) எனும் பெயரில் நடுநிலைப்பள்ளிகள் நடைபெறுகின்றன.

தங்கிப் பயிலும் வசதிகளுடனான அதில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர்.

இவர்களில், பெரும்பாலானவர்கள் ஒப்பந்த ஊதியமாக ரூ.30,000 பெறுபவர்கள். இவர்களை பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்க உ.பி. மாநில அடிப்படை கல்வித்துறை முடிவு செய்தது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் பணியில், அனாமிகா சுக்லா எனும் பெயரில் ஒர் ஆசிரியை 25 பள்ளிகளின் பதிவேடுகளில் இருப்பது தெரிந்துள்ளது.

இவை அமேதி, அம்பேத்கர் நகர், அலிகர், ராய்பரேலி, சஹரான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அமைந்துள்ளன.

ஒப்பந்த பணியிலான அவர் பெப்ரவரி வரை 13 மாதங்களாக 25 பள்ளிகளிலும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உபி மாநில அடிப்படை கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் அனாமிகா சுக்லா காஸ்கன்ச் நகரக் காவல்நிலையப் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கு அவர் தம் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ய வந்த போது சிக்கியதாகக் கூறப்படுகிறது.

மெயின்புரியை சேர்ந்த ராஜேஷ் சுக்லா என்பவரின் மகளான அனாமிகாவுக்கு அதே மாவட்டத்தை சேர்ந்தவர் உதவியால் இந்த ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.

இதற்கு உரிய தகுதி இல்லாத நிலையில் அவருக்கு ஒப்பந்த முறையிலான பணி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதியை பெறவேண்டி அனாமிகா, கோண்டாவின் ஒரு கல்லூரியில் பி.எட் கல்வி பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிந்துள்ளது.

இவரை வேறு எவராவது ஒரே சமயத்தில் பல பள்ளிகளில் ஊதியம் பெறுகிறார்களா எனவும் விசாரணை நடைபெறுகிறது.

மெயின்புரியை சேர்ந்த அந்த ஆசிரியையான அனாமிகா சுக்லாவிற்கு ஏப்ரல் இறுதியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்காதவருக்கு நினைவூட்டல் கடிதம் மே 26 இல் அதன் அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.

அவரை போனிலும் தொடர்புகொள்ள முடியாதமையால், அவர் தலைமறைவாகி விட்டதாகக் கருதப்பட்டு வழக்கு பதிவானது. இந்த செய்தி நேற்றுமுன்தினம் பரவலாக வெளியான நிலையில் நேற்று அனாமிகா கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின் அரசு பள்ளி ஆசிரியர்கள் தம் கைப்பேசிகளில் ‘செல்பி’ படம் எடுத்து வருகையை பதிவு செய்யும் முறை அமலாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழல் ஒருவர் ஒரு பள்ளிக்கும் அதிகமாக பணியாற்றும் வாய்ப்புகள் இல்லை. எனவே, உ.பி. மாநில அடிப்படை கல்வித்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த மோசடி நடந்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய அரசின் நிதி உதவியுடன் கேஜிவிபி வகை பள்ளிகள் 2004 ஆம் வருடம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஏழை பெண் குழந்தைகளுக்காக துவக்கப்பட்டன.

எனினும், எதிர்பார்த்த பலன் இப்பள்ளிகளால் உ.பி.யில் கிடைக்கவில்லை எனக் கருதப்படுகிறது.

இதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அதிக ஒதுக்கீடு பெற்று பயின்று வருகின்றனர். இதுபோன்ற பள்ளிகள் நாடு முழுவதிலும் சுமார் 3800 செயல்படுகின்றன.

Share.
Leave A Reply