ராஜபக்ஷக்கள் தமது இரண்டாவது யுத்தத்திலும் வெற்றி பெறத் தொடங்கி விட்டார்களா? கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறையத் தொடங்கி விட்டது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத்தீவில் இறப்பு விகிதம் குறைவானதே. நோய் பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. பொதுவாகச் சொன்னால் நாட்டில் மக்கள் மத்தியில் வைரஸைப் பற்றிய பயம் தெளிந்து விட்டது.

ராஜபக்ஷகளைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய வெற்றி. தமிழ்த் தரப்பினால் போர்க் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தளபதியின் தலைமையில் பெருமளவிற்கு படைத்தரப்பு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நின்றது. அது காரணமாக நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமானவர்கள் படைத்தரப்பே.

இவ்வாறு ஒரு வைரசுக்கு எதிராக படைத்தரப்பு ரிஸ்க் எடுத்து வெற்றியைக் காட்டி இருக்கிறது என்பது படைத்தரப்பை அதன்மீது வைக்கப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதற்கு உதவுமா?

எனவே இது விடயத்தில் ராஜபக்ஷக்களுக்கு பலமுனைகளில் வெற்றி கிடைத்திருக்கிறது. முதலாவது வெற்றி- படைத்தரப்பை இதில் ஈடுபடுத்தி அதன்மூலம் அவர்களைப் புனிதப்படுத்த இது உதவியது.

இரண்டாவது- படை தரப்பை புனிதப்படுத்தினால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக யுத்தத்தில் படைத் தரப்பிற்கு உத்தரவிட்ட அரசியல் தலைமையான ராஜபக்ஷ சகோதரர்களையும் அது புனிதப்படுத்தும்.

மூன்றாவது வெற்றி- ஒரு நோய்த்தொற்றை எதிர்கொள்ள படையினரை முன்னணிப் படையாக நிறுத்தியதன் மூலம் படையினர் மீது அனுதாபமும் பரிவும் அதிகரித்திருந்த அரசியல் மற்றும் மருத்துவ சூழலில் படை அதிகாரிகளையே சிவில் பொறுப்புகளுக்கு நியமித்ததன் மூலம் யுத்தகாலத்தில் இருந்ததை விடவும் அதிகரித்த அளவில் சிவில் கட்டமைப்புகளை படைமயப்படுத்த முடிந்தது.

நான்காவது வெற்றி வைரசுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றி. இதன்மூலம் யுத்தத்தை வெல்லவும் ராஜபக்ஷக்களே தேவை, வைரஸை வெல்லவும் ராஜபக்ஷக்களே தேவை, ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தவும் ராஜபக்ஷக்களே தேவை, எனவே ராஜபக்ஷர்களை போன்ற இரும்பு மனிதர்களை தெரிந்து எடுத்தால் நாடு அச்சப்படாமல் முன்னேறும் என்று சாதாரண சிங்கள மக்கள் நம்பக் கூடிய ஒரு சூழல் கொரோனாவுக்குப்பின் ஏற்படப்போகிறதா?

தேர்தலை விரைவாக நடத்தும்போது இந்த வெற்றி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் ஒருவர் மற்றவருக்கு எதிராக காணப்படும் வரை யு.என்.பி இப்போதைக்கு ஒற்றுமைப்படப் போவதில்லை. எனவே பிரதான எதிர்க்கட்சி உடைந்து போயிருக்கும் ஓர் அரசியல் சூழலில் தேர்தலை வைத்தால் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகமாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு போதுமோ இல்லையோ தெரியாது ஆனால் தனிச் சிங்கள வாக்குகளால் வெல்ல வேண்டும் என்று திட்டமிடும் ராஜபக்ஷக்களுக்கு இது அனுகூலமான காலம்.

ஓகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடக்குமாக இருந்தால் அது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட வாக்கு வங்கியைக் கொண்ட கட்சிகளுக்கு சாதகமானது. இப்படிப் பார்த்தால் ராஜபக்ஷக்களுக்கு சாதகமானது. தமிழரசுக் கட்சிக்கும் சாதகமானது. தமிழரசுக் கட்சிக்கு என்று நிலையான பாரம்பரிய வாக்கு வங்கி ஒன்று உண்டு. அது இப்பொழுது ஈடாடத் தொடங்கி விட்டது.

குறிப்பாக சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே அணி திரட்சிகள் நடந்து வருகின்றன. கட்சியின் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சட்டவாளர் தவராசாவை முன்னுக்கு தள்ள முயற்சிக்கிறார்கள். தவராசாவோடு தமிழ் மாறனையும் துணைக்கு அழைக்க முயற்சிக்கிறார்கள். இந்த அணிக்குள்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் காணப்படுகிறார்.

இது தவிர மன்னாரில் சார்ள்ஸ் நிமலநாதனும் செல்வம் அடைக்கலநாதநும் சுமந்திரனுக்கு எதிரானவர்கள் போல தோன்றுகிறார்கள். இது ஒரு தோற்றமாக இருக்கலாம். கட்சியின் வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கான ஓர் உத்தியாக இருக்கலாம். ஏனெனில் மன்னாரில் கத்தோலிக்கர்கள் மத்தியில் சுமந்திரனை குறித்து நல்ல அபிப்பிராயம் இல்லை.

திருக்கேதீஸ்வரம் வளைவு தொடர்பான வழக்கில் இந்துக்கள் சார்பாக சுமந்திரனே வழக்காடுகிறார். இதனால் கத்தோலிக்கர்கள் அவருக்கு ஆதரவாக இல்லை. எனவே சுமந்திரனை எதிர்த்தால் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்கலாம் என்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சார்ள்ஸும் செல்வமும் சிந்திக்க வாய்ப்பு உண்டு.

அதனால்தான் சிங்கள ஊடகமொன்றுக்கு சுமந்திரன் வழங்கிய பேட்டிக்கு எதிராக அவர்கள் அறிக்கை விட்டார்கள். ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் அந்த எதிர்ப்பை அவர்கள் வெளிக் காட்டவில்லை. பம்மிக் கொண்டு இருந்து விட்டார்கள்.

அப்படித்தான் மற்றொரு வேட்பாளரான ஆர்னோல்டும்.இவரும் சுமந்திரனின் அணிக்குள் அடையாளம் காணப்பட்டவர். வடமாகாண சபைக்குள் விக்னேஸ்வரனைச் சுற்றிவளைத்தவர்களில் இவரும் ஒருவர்.

ஆனால் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அவர் தனக்கும் சுமந்திரனுக்கும் நெருக்கம் குறைவு என்று காட்ட முற்படுவதாக ஓர் அவதானிப்பு உண்டு. இதுவும் ஒரு தோற்றமே. உண்மையல்ல. வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கான ஒரு உத்தி. ஏனெனில் ஆர்னோல்ட்டின் வாக்கு வங்கி கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுடையது. கத்தோலிக்கர்களின் அரசியல் நிலைப்பாட்டை கத்தோலிக்க திருச்சபையே ஓரளவுக்கு தீர்மானிக்கின்றது.

சுமந்திரனின் ஆயுதப் போராட்டம் தொடர்பான கருத்துக்களை பெரும்பாலான கத்தோலிக்க மதகுருக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை. எனவே அவர்கள் சுமந்திரனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தால் அது கத்தோலிக்கர்களின் வாக்குகள் செலுத்தப்படும் திசையைப் பெருமளவுக்குத் தீர்மானிக்கும். இது ஆர்னோல்டுக்கும் தெரியும். எனவே சுமந்திரனோடு நெருங்கி அடையாளம் காணப்படுவதைத் தவிர்த்தால் தனது வாக்கு வங்கியை பாதுகாக்கலாம் என்று அவர் சிந்திக்கக் கூடும்.

இவ்வாறு சுமந்திரனோடு சேர்ந்து நிற்பதன் மூலம் தமது வாக்கு வங்கியை இழப்பதற்கு விரும்பாத கூட்டமைப்புப் பிரமுகர்கள் சுமந்திரனிடமிருந்து விலகி நிற்பது போல ஓரு தோற்றத்தையாவது காட்டவேண்டிய ஓர் அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கிறதா?

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த உட்கட்சி முரண்பாடுகளை வெற்றிகரமாக கையாண்டு கட்சிக்குள் இருந்து உடைந்து வரக்கூடியவர்களைத் தம் வசப்படுத்தி கூட்டமைப்பை தேர்தல் களத்தில் தோற்கடிக்கத் தக்க வியூகங்கள் எதிரணியிடம் உண்டா? என்பதே இங்கு முக்கியமான கேள்வியாகும்

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலான நோய்த் தொற்று காலத்தில் தமிழ் கட்சிகள் பெருமளவுக்கு நிவாரணம் வழங்குவதிலேயே தனது கவனத்தைக் குவித்திருந்தன. ஒருவர் மற்றவருக்கு எதிராக விமர்சனங்களை தெரிவிக்கும் போக்கு பெருமளவிற்கு குறைவாக காணப்பட்டது.

எனினும் சில கிழமைகளுக்கு முன் சுமந்திரன் ஒரு சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியோடு கொரோனாவிலிருந்து தமிழ் மக்களின் கவனம் சடுதியாக அரசியல் கொரோனாக்களை நோக்கி திரும்பி விட்டது. அதாவது வைரஸிலிருந்து அரசியல் வாதிகளை நோக்கி கவனம் திருப்பப்பட்டது.

அதற்கு முன்பு பெருமளவிற்கு மருத்துவ அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள் என்பதைத்தான் சனங்களும் கவனித்தார்கள் ஊடகங்களும் பெரிதாக்கிக் காட்டின. ஆனால் இப்பொழுது மறுபடியும் தேர்தல் களம் திறக்கப்பட்டுள்ளது. வைரஸை குறித்த செய்திகளிலிருந்து முழுமையாக விடுபடா விட்டாலும் ஓரளவுக்கு அரசியல் கட்சிகளின் மீது கவனம் திருப்பப்பட்டு விட்டது

இவ்வாறான ஒரு பின்னணியில் தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாத கால இடைவெளி உண்டு. இந்த ஒன்றரை மாத காலத்துக்குள் கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி முரண்பாடுகளை வெற்றிகரமாக கையாண்டு தமிழ் மக்களின் கவனத்தை அதை நோக்கி குவித்து கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும். அதற்கு வேண்டிய வியூகம் அவர்களிடம் உண்டா ? அதற்கு ஒன்றரை மாத கால அவகாசம் போதுமா? இது ஒரு பிரச்சினை.

ஸ்தாபிக்கப்;பட்ட வாக்கு வங்கியைக் கொண்ட கட்சிகள் இதனால் லாபம் அடையும். ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட வாக்கு வங்கிகளை உடைக்க வேண்டிய நிலையிருக்கும் கட்சிகளுக்கு கால அவகாசம் போதாது. இப்படிப் பார்த்தால் கொரோனாவுக்குப் பின்னரான தமிழ் அரசியலில் மறுபடியும் ஒரு தடவை துலக்கமான மாற்றங்களைக் காண முடியாது என்றே தோன்றுகிறது. வைரஸ் தொற்று காலத்தில் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் சிந்தித்து வாக்களித்தால் கூட அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா?

ஏனெனில் வைரசுக்கு முன்னிருந்த அதே கட்சிகளும் அரசியல்வாதிகளும் தான் வைரசுக்கு பின்னரும் வருகிறார்கள். வைரசுக்கு முன்னிருந்த அதே கட்சி சுலோகங்களும் கோஷங்களும் தான் மறுபடியும் சுவர்களில் ஒட்டப்படுகின்றன.

வைரசுக்கு முன்னிருந்த அதே விரோதமும் ஒற்றுமையற்ற தன்மையும் தீர்க்கதரிசனமற்ற தன்மையும்தான் வைரசுக்கு பின்னரும் காணப்படுகிறது. எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரவிருக்கும் தேர்தலில் தமிழ் வாக்குகள் வெற்றிகரமாக திரட்சியுயுறும் வாய்ப்புக்கள் குறைவாகவே தெரிகின்றன.

அதேசமயம் வைரஸை வெற்றி கொண்ட ராஜபக்ஷக்கள் சிங்கள பௌத்த வாக்குகளையும் சிங்களக் கிறிஸ்தவ வாக்குகளையும் தங்களை நோக்கித் திரட்ட முடியும். அதை எதிர்த்து நிற்க யு.என்.பிக்குச் சக்தி காணாது. ஆக மொத்தம் சிங்கள வாக்குகள் திரளும் தமிழ் வாக்குகள்?

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

Share.
Leave A Reply