கோவிட் பெருந்தொற்றின் பரவல் காரணமாக சீனாவில் தீவிரமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உலகமுழுவதும் கோவிட் பெருந்தொற்றின் பரவல் தற்போது குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக சீனாவில் உள்ள ஷாங்காய் (Shanghai) நகரில் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது சீன அரசு. அண்மையில் கூட ஷாங்காய் நகரின் தெருக்களில் ரோபோட்களைப் பயன்படுத்தி ஊடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீவிரமான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் ஷாங்காய் நகர மக்கள் வெளியில் வராமல் வீட்டிலையே தங்களை தனிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகளை மீறுவோரை டிரோன்கள் (Drone) மூலம் கண்காணித்து வருகிறது சீன அரசு.

இவ்வாறு கண்காணிப்பிற்காக வானத்தில் பறக்கும் டிரோன்களிடம் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்து வீட்டின் ஜன்னல், பால்கனிகளில் நின்று பாடல்பாடி கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் இந்த கோரிக்கைகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அலிஸ் சு (Alice Su) என்ற மூத்த சீன நிருபர் ஒருவர், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மக்கள் தங்களின் சுதந்திர உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதள பயனர் ஒருவர் ஷாங்காய் நகரத் தெருக்களில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் ‘இன்றிரவு முதல், தம்பதியர் தனித்தனியாக தூங்க வேண்டும், முத்தமிட வேண்டாம், கட்டிப்பிடிக்க அனுமதி இல்லை, தனித்தனியாக சாப்பிட வேண்டும்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.


இதற்கு முன் வந்த கோவிட் பெருந்தொற்று அலையில் அதிக பதிப்பிற்குள்ளான நகரம் இந்த ஷாங்காய். இந்நிலையில் மீண்டும் கோவிட் பெருந்தொற்று அதிகரித்துள்ளது உலகில் உள்ள அனைவரையும் அச்சப்படுத்துவதாக உள்ளது.

 

Share.
Leave A Reply