நாமக்கலில் தாய், மகனை கட்டி போட்டு விட்டு 10 வயது சிறுமியை முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் கடத்தி சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து அந்த சிறுமியை தேடி வந்த நிலையில், சிறுமியை கடத்தியவர்கள் இன்று அதிகாலை விட்டு சென்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.

இவர், லாரி டிரைவராக இருக்கிறார். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஜோனின் (14) என்ற மகனும், மவுலீசா (10) என்ற மகளும் உள்ளனர். மவுலீசா அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5 – ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரவணன், அங்கு ஒரு வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

சரவணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கவுசல்யா, ஜோனின் மற்றும் மவுலீசா ஆகிய 3 பேரும் வீட்டு மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, இரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் ஜன்னல் சிலாப் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்றனர்.

பின்னர், அங்கு தூங்கி கொண்டிருந்த கவுசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். மேலும், கவுசல்யா மற்றும் தூங்கி கொண்டிருந்த ஜோனின் வாய்களில் பிளாஸ்டிக் பேண்டேஜ் ஒட்டினர்.

நாமக்கல்

நா.ராஜமுருகன்

இதையடுத்து, 2 பேரின் கைகளையும் பின்னால் கட்டி போட்டு விட்டு, 2 பேரும் சத்தம் போட்டால் மகளை கொன்று விடுவதாக மிரட்டினர்.

இதையடுத்து, சிறுமி மவுலீசாவை மிரட்டி அங்கிருந்து கடத்தி சென்று விட்டனர். மேலும் கவுசல்யா அணிந்திருந்த நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதன்பிறகு, கவுசல்யா அங்கிருந்த கத்தியை சிரமப்பட்டு எடுத்து, 2 பேர் கைகளில் கட்டப்பட்ட கயிற்றை அறுத்ததுடன், வாயில் இருந்த பேண்டேஜை எடுத்து விட்டு சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அவர்கள் மூலமாக உடனடியாக எருமப்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, துணை சூப்பிரண்டு சுரேஷ், எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவுசல்யா மற்றும் அவரின் மகன் ஜோனினிடம் விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் வரவழைபட்டும், பெரிதாக பலனில்லாமல் போனது. அதோடு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் மொட்டை மாடியில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

சிறுமியை அவரின் உறவினர்கள் கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், சிறுமியை கடத்திய மர்ம நபர்கள் கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்து சென்றதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு, கவுசல்யாவின் சிம் எண்ணில் இருந்து போன் வந்துள்ளது.

அப்போது போனில் பேசிய மர்மநபர்கள், சிறுமி மவுலீசா உயிருடன் வேண்டும் என்றால், தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியான முருகேசன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதனால், மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டதோடு, சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு, `சிறுமியை பார்த்தவர்கள் உடனே தகவல் தெரிவிக்கவும்’ என்று காவல்துறை சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இதையடுத்து, கடத்தப்பட்ட சிறுமியை மீட்க, காவல்துறை தனிப்படையினர் இன்னும் தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள காளிசெட்டிப்பட்டி பிரிவுசாலையில் பெட்ரோல் பங்க் அருகே சிறுமி மவுலீசாவை மர்மநபர்கள் விட்டு சென்றுள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து, சிறுமியை மீட்ட போலீஸார், சிறுமியை கடத்தியவர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply