உக்ரேனில் நடைபெற்று போர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெருந்தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இத்தாக்கம், உருவாகிவரும் உலக ஒழுங்கில் முக்கியமாக செல்வாக்கு செலுத்தவுள்ளது.

மேற்குலகம் இந்த நிலைமை ரஷ்யப் படையெடுப்பினால் உருவாகியது என்று கூற விளைந்தாலும் கிழக்கு, மத்திய கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மத்தியில் நிலவும் பொதுவான பார்வை அவ்வாறில்லை என்பதே யதார்த்தமானதாகும்.

மேற்கூறிய நாடுகளின் பார்வையில் உக்ரேனிய போர்ச்சூழல் உருவாகுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலத்தின் நகர்வுகளே ஆகும்.

அதாவது, அத்தரப்புக்கள் படிப்படியாக ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு சவால் விடும் வகையில் நகர்வுகளைச் செய்து நேட்டோவிற்குள் உக்ரேனை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டமையினாலாகும்.

ஆனால் தற்பொழுது உக்ரேன் இறையாண்மை கொண்ட ஜனநாயக சுதந்திர நாடாக இருக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.  ரஷ்யாவை தொடர்ந்து யுத்த சூழலில் வைத்திருக்கும் நோக்கம் மேற்கு நாடுகளுக்கு உள்ளது.

ரஷ்யாவின் செலவுகளை அதிகதரிப்பதன் மூலம் அதன் பொருளாதார வளர்ச்சிகளை மழுங்கடிப்பது தான் மேற்குலகத்தின் இப்போருக்கான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்குவதற்கான அடிப்படை நோக்கமாகும்.

ஆனால் இந்த போர்ச் சூழல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது சர்வதே நாடுகள் பலவற்றிலும் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள்  அமெரிக்க தரப்பிற்கு ஆதரவளிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் அமெரிக்காவும் தோழமை நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் சேதங்களை விளைவித்துவிட்டமையே ஆகும்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அனைத்து நிருவாகக் கட்டமைப்புகளையும் அமெரிக்கா கைவிட்டு பின் வாங்கியதை மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை.

மேலும் அமெரிக்காவினால் ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட அணுவாயுத ஒப்பந்தம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையை எதிர்த்தன.

தற்பொழுது ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக்கு வந்துவிட்ட போதிலும் எந்தவித காரணங்களையும் இன்னமும் வெளிப்படுத்தாது, ஈரான் மீதான தடையை தொடர்வதும், ஈரானுடன் பொருளாதார உறவுகளை வைத்துக்கொள்ள கூடிய பல நாடுகளிற்கு அமெரிக்காவின் தலைமைத்துவத்தில் பெரும் சலிப்புத் தன்மை ஏற்பட்டுள்ளது.

உலக ஒழுங்கு இதுதான் என்று திட்டவட்டமாக கூறி கொள்வதற்கு முடியாத நிலைமையே தற்போதுள்ளது.

ஆனால் பல நாடுகளின் நகர்வுகளில் உள்ள பொதுவான போக்கின் தன்மைகளை கொண்டு  இவ்வாறு தான் இடம் பெறுகிறது என்று உலக ஒழுங்கு கணிப்பிடப்படுகிறது.

அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் போன்றவை மேலைநாடுகளுடன் மிகவும் நெருங்கிய உறவுகொண்ட நாடுகளாக பார்க்கப்பட்டவை. இவ்விரு நாடுகளும் கூட சீன உறவை முறித்துக் கொள்ள முடியாதென்று இறுக்கமான நிலைப்பாட்டிலிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அத்துடன் சர்வதேசத்தில்  பொருளாதார ரீதியாக பண்டங்களுக்கான பரிமாற்றத்திற்கு வழமையாகப் பாயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க டொலருக்கு பதிலீடாக தமது சொந்த நாணயங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதானது அமெரிக்க டொலரை மையமாக கொண்ட உலக வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கிலிருந்து அகற்றுவதாகும்.

ஒரு காலத்தில் இரும்புத்திரை நாடு என்ற பெயரை கொண்ட சோவியத் ரஷ்யாவை தற்போது அதன் வளர்ச்சியை சிதைக்கும் விதமாக  மேற்குலகம் இரும்புத்திரைக்குள் போட்டு மூடி விடும் நிலையை உருவாக்கியுள்ளது.

அதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யா மீது மேற்குலகம் பலத்த பொருளாதார தடைகளை விதித்து வந்தது.

முழு நாடுகளும், உலக மயமாக்கல் வியாபாரத்தில் திளைத்து வந்தாலும் ரஷ்யா பெருமளவில் அதனை அனுபவிக்க முடியாத நிலையை மேற்கலகம் உருவாக்கியே வந்தது.

குறிப்பாக தொழில்நுட்ப வசதிகளை பெருக்கி கொள்ளுதல், அபிவிருத்தி குறித்த விவகாரங்களிற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு குறித்த விவகாரங்களை தடைகள் மூலம் கட்டுபடுத்துதல், உற்பத்தியையும் அதற்கான வியாபாரத்தையும் கட்டுபடுத்துதல் ஆகியவற்றுடன் சர்வதேச அளவில் ரஷ்யா செய்த முதலீடுகளையும், ரஷ்ய மத்திய வங்கியின் வெளிநாட்டு சேமிப்பகளையும் முடக்கும் வேலையை அமெரிக்க தலைமையிலான மேற்குலக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

மேலும் அதிவிரைவாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ளகூடிய வசதிகளை ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ள முடியாதவாறு முட்டுக்கட்டைகளை மேற்குலகம் ஏற்படுத்தியிருந்தது.

இதனால் சர்வதேச நாணயநிதியத்துடனோ அல்லது சர்வதேச நாணய சந்தையிலோ எந்தவிதமான பரிமாற்றமும் செய்து கொள்ள முடியாத நிலையை ரஷ்யாவுக்கு அமெரிக்கா உருவாக்கிவிட்டது.

இவை அனைத்துக்கும் பதிலாக தற்பொழுது சீன, ரஷ்ய கூட்டு தனது சொந்த ‘கடுகதி நாணய பரிமாற்ற முறை’ ஒன்றை உருவாக்கி விட்டது.

எல்லைகளைக் கடந்த நாணய பரிமாற்ற திட்டம் ,  நாணய பரிமாற்ற செய்தி பரிவர்த்தனை என்று இருநாடுகளும் தமக்கென உலக நாடுகளுடன் நிதி முதலீடுகளை கையாளும் வகைகளை உருவாக்கி விட்டன.

இது வரை காலமும் டொலரிலேயே மதிப்பிடப்பட்டு பரிமாறப்பட்ட சவூதி அரேபிய எண்ணை வியாபாரமும், ஈரானிய எண்ணை வியாபாரமும் கூட சீன, ரஷ்ய நாணயங்களிலேயே மதிப்பிடப்பட்டு விற்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டு விட்டது.

இதனால் சீன, ரஷ்ய கூட்டு டொலரின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடும் நிலையை எட்டி விடலாம் என்ற அச்சம் சர்வதேச வர்த்தக களத்தில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அமெரிக்கா பெரும் படையெடுப்புகளைக் கண்டு வந்த மத்திய கிழக்கு நாடுகள் உக்ரேனில் நடைபெறும் யுத்தத்தை பார்வையாளர்களாக கவனித்து வருகின்றன.

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உக்ரேனில் இருந்து பின் வாங்கினால் அது சீன, ரஷ்ய கூட்டின் எழுச்சியை அறிவுறுத்துவதாக அமைந்து விடும்.

உலகில் தற்போது எழுந்து வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கெல்லாம் இந்த உக்ரேன், ரஷ்ய போர் பெரும் காரணியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவிலும், மேற்கு நாடுகளிலும் பணவீக்கம் பத்து சதவீதம் முதல் பதின்னான்கு சதவீதம் வழரையில் அதிகரித்துள்ளது.

தவிர்க்க முடியாத வகையில் நிலைமையை கையாளும் தேவைக்கு உலக பொருளாதார வளம் கொண்ட பெருநாடுகளின் மத்திய வங்கிகள் உள்ளாகிவிட்டன.

தனது இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும்  சவால் விடக்கூடிய மேற்கத்தேய நகர்வை எதிர்ப்பதில் ரஷ்யா விட்டு கொடுக்கப்போவதில்லை.

இடையில் அகப்பட்ட உக்ரேன் சின்னாபின்மாக சிதறிக்கிடக்கிறது.  இதன் காரணமாகவே உக்ரேனில் இடம்பெறும் போர் உலகில் புதிய வரை முறைகளை உருவாக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply