தமிழ்நாடு முழுவதும் அட்சய திரிதியை நாளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகைகள் விற்பனையானது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

‘கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது இது அதிகம் என்கின்றனர். ஆனால், கோவிட் காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்ததால் இந்த ஒப்பீடு சரியானதல்ல’ என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

30 சதவீத விற்பனை அதிகரிப்பு

ஒவ்வோர் ஆண்டும் அட்சய திருதியை தினத்தில் மக்கள் தங்க நகை வாங்குவதற்கு அலைமோதுவது வழக்கம்.

‘இந்த நாளில் தங்கம் வாங்குவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்’ என்பது சிலரது நம்பிக்கையாக உள்ளது.

அதேநேரம், ‘வியாபாரத்துக்காக இப்படியொரு யுக்தியைக் கொண்டு வந்துள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அட்சய திரிதியை என்ற ஒன்று இல்லை’ என எதிர் விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் பூட்டிய நிலையிலேயே இருந்தன.

தற்போது கோவிட் தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதால் அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல இயங்குகின்றன.

இந்தநிலையில், ‘அட்சய திரிதியை நாள்’ வந்த மே 3ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்கம் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர்.

தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் காலை 5 மணி முதல் மதியம் 12 வரையில் என்ற தகவல் பரவியதால், அதிகாலை 4 மணிக்கே நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளைத் திறந்துவிட்டனர்.

இதன் காரணமாக காலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிட்டது. அதற்கேற்ப தங்க நகை விற்பனையாளர்களும பல்வேறு கவர்ச்சியூட்டும் தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தனர்.

”அட்சய திரிதியை நாளில் ஒரு சவரன் தங்க நகை 38,528 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 4,816 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

அதேநேரம் மாலையில் ஒரு சவரன் தங்க நகை 38,368 ரூபாய்க்கு விற்பனையானது. மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்ததால் நள்ளிரவு வரையில் வியாபாரம் நடந்தது.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது 30 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது’ என்கிறார்,

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி. மேலும், ‘ஒரேநாளில் 18 டன் தங்கம் அளவுக்கு விற்பனையானது, இதன் மதிப்பு ஒன்பதாயிரம் கோடி ரூபாய்,” எனவும் அவர் தெரிவித்தார்.

விற்பனை அதிகரித்தது ஏன்?

”தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதை எப்படிப் பார்ப்பது?” என பொருளாதார ஆலோசகர் நாகப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். ” தங்கக் கவுன்சிலின் புள்ளிவிபரப்படி,

கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி என்பது 36 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பார்த்தால் இறக்குமதி என்பது 18 சதவீதம் குறைந்துவிட்டது.

கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு வளர்ச்சி இருந்தாலும் இறக்குமதி குறைந்துள்ளது” என்கிறார்.

தொடர்ந்து பேசிய நாகப்பன், ” தங்கம் விலை இறங்கும்போதெல்லாம் சீனா நிறைய வாங்குகிறது. தங்கம் விலை ஏறும்போது அவர்கள் வாங்குவதில்லை.

அந்தக் காலகட்டத்தில் தங்கம் விலை என்பது சற்று இறங்குகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து இதுபோன்று நடந்து வருகிறது.

அதேநேரம், தங்கம் விலை பெரிதாக சரிந்துவிடாது. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அதிகமாக நடக்கிறது. டாலரை நம்பியிருக்க வேண்டிய சூழல் வரக்கூடாது என்பதால் அதனை தங்கத்துக்கு ஈடாக சீனா மாற்றி விடுகிறது. ”

”உலகளவில் சீனாவும் இந்தியாவும்தான் அதிகப்படியாக தங்கத்தைக் கொள்முதல் செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தங்கம் வாங்குவதைவிட கோல்டு பாண்டுகளில் இளம் வயதினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

நகையாக வாங்கினால் அது விலை ஏறினாலும் இறங்கினாலும் விற்க மாட்டார்கள். கோல்டு பாண்டுகளை வாங்குகிறவர்கள், அது சற்று ஏறினால் விற்றுவிடுவார்கள். அந்தவகையில், தங்கத்தை முதலீட்டுக்கான ஒன்றாகப் பார்ப்பதும் நல்லதுதான்” என்கிறார்.

”கடந்த ஆண்டுகளைவிட தங்கம் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்களே?” என்றோம்.

”கடந்த ஆண்டு மே மாதம் கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தது. அதுவும் ஆஸ்பத்திரிகளில் அறை கிடைக்காமல் மக்கள் பெரும் துன்பத்தில் இருந்தனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூறியும்கூட சென்னையில் பலருக்கும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடைகளே திறக்கப்படவில்லை. எனவே, இந்த ஒப்பீடு செய்வது சரியானதல்ல” என்கிறார்.

 

மூன்று மாவட்டங்களில் அதிகம்

” 2020-2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து கோவிட் இருந்ததால் மக்களுக்கு வருவாய் இருந்தும் செலவு செய்ய முடியவில்லை.

இலங்கையின் பொருளாதார நிலை கடும் பாதிப்பில் உள்ளது. அங்கு இருப்பவர்களிடம் பணம் இருந்தும் மதிப்பு இல்லை. அவர்களுக்கு தங்கம்தான் கை கொடுக்கிறது.

அங்குள்ள பணத்தின் மதிப்புக்கு ஒரு சவரன் தங்கம் என்பது 1,20,000 ரூபாய் என இருந்தது. தற்போது 2,60,000 ரூபாயாக மாறிவிட்டது.

அதனால் எப்போதும் தங்கம்தான் கை கொடுக்கும். யுக்ரேன் போரால் 5 மில்லியன் மக்கள் வெளியே சென்றுவிட்டனர்.

அவர்கள் தங்கள் கைகளில் தங்கத்தைக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் எங்கு சென்றாலும் அவர்கள் மாற்றிக் கொள்ளலாம்” என்கிறார், சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.

தொடர்ந்து பேசியவர், ” இந்தியாவில் ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. மறுசுழற்சிக்கு என 400 முதல் 500 டன் தங்கம் உள்ளது.

மக்களின் பயன்பாடு என்பது ஆண்டுக்கு 1,300 முதல் 1,500 டன் வரையில் உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் என்பது அதிகரித்துள்ளது.

கோல்டு பாண்டுகளை பேப்பராக வாங்கும்போது ஓர் அச்சம் உள்ளது. அதுவே நகையாகப் பார்க்கும்போது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது” என்கிறார்.

மேலும், ” அட்சய திரிதியை நாளில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் தங்க நகை விற்பனை அதிகம் நடந்துள்ளது. அதேநேரம், குறைவான விற்பனை என எந்த மாவட்டத்திலும் பதிவாகவில்லை” என்கிறார் ஜெயந்திலால் சலானி.

Share.
Leave A Reply