திருகோணமலை நகரம் கொழும்பு நகரைப் போல இல்லை. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறவில்லை. வன்முறைகளும் பதற்றமும் கிடையாது. பொதுவாக அமைதியாகவே இருக்கிறது.

ஆயினும் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படை படைப்பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததும் கொழும்பு நகரின் பரபரப்பு இங்கும் ஒருநாள் தொற்றியிருந்தது. அது கடந்த மே 9-ஆம் தேதி திங்கள்கிழமை.

கொழும்பு காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டக்காரர்கள் மீதும், கூடாரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் நாட்டின் பல இடங்களிலும் ஆளுங்கட்சியினரைக் குறிவைத்து தாக்குதல்கள் நடந்தன. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையும் தப்பவில்லை.

போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பாதுகாப்பு கருதி அவர் திருகோணமலைக்கு வந்துவிட்டதாக அப்போதே தகவல் பரவிக் கொண்டிருந்தது.

“சத்தம் கேட்டு நான் இங்கு வந்தேன். இருந்தபோதிலும் முன்கூட்டியே மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினர் கடற்படை தளத்தினுள் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இங்கே வந்து பார்த்த போது மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது,” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஹாஷி ஹெட்டியாராச்சி.

“மஹிந்த மற்றும் அவர்களின் குடும்பத்தை இங்கு தங்க விடாமல் வெளியேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு பாதுகாப்பு பலமாக இருந்ததாலும் பிரச்னைகள் இன்றி மாலை நான்கு மணியளவில் கூட்டம் கலைந்து சென்றது” என்றார் அவர்.

கூட்டம் அதிகமாக வந்ததும் பாதுகாப்புப் படையினர் கடற்படைத் தளத்தின் முன்பக்கச் சுவர்களில் இருந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதாக அருகே வசிக்கும் ஹுசைன் தெரிவித்தார்.

“முதலில் தடுப்புகள் ஏதுமில்லை. போராட்டக்காரர்கள் அதிகமானதும் வாசலைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டன” என்றார் அவர்.

போராட்டம் நடந்த அந்த ஒருநாள் மட்டும்தான் திருகோணமலையில் பதற்றம் இருந்தது. அந்தத் தருணத்தில் மஹிந்த குடும்பத்தினர் அங்குதான் இருக்கின்றனர் என்று யாரும் உறுதி செய்யவில்லை. சமூக ஊடகங்களில்தான் இந்தத் தகவல் அதிகமாகப் பரவியது.

ஹாஷி ஹெட்டியாராச்சி

10-ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத் துறைச் செயலாளர் குணரத்ன, பாதுகாப்பு கருதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தபோதுதான் இந்தத் தகவல் உறுதியானது.

ஆனால், அதன் பிறகு திருகோணமலையில் போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. காவல்துறையும் பாதுகாப்புப் படைகளும் கடற்படைத் தளத்துக்குச் செல்லும் வழியில் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர்.

அடையாள அட்டைகளைக் காண்பித்த பிறகே கடற்படைத் தளத்துக்கு அருகே செல்ல முடிகிறது.

வியாழக்கிழமையன்று அந்தப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்றதுமே காவல்துறையின் உயர் அதிகாரிகள், காவலர்கள், காவல்துறையின் ஊடகப் பிரிவினர் என பலரும் அங்கே வரத் தொடங்கினர்.

காவல்துறையினரின் வாகனங்கள் வந்து சேர்ந்தன. பிபிசி தமிழ் குழுவிடம் அவர்கள் விவரங்களைக் கேட்டுக் கொண்டனர். எனினும் கடற்படைத் தளத்தைச் சுற்றி செய்தி சேகரிப்பதைத் தடுக்கவில்லை.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களிலும் கடற்படைத் தளம் அருகேயுள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே இந்தப் பகுதியைக் கடந்து சென்றன.

கடற்படைத் தளத்துக்குள் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மட்டும் அதற்குள் சென்று வருவதைக் காண முடிகிறது.

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இது இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

திருகோணமலையில் இருக்கும் இயற்கைத் துறைமுகத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தளம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்கது. இதன் அருகிலேயே விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்ட நிலையில், அவரும் அவர் தொடர்புடைய 16 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மே 9-ஆம் தேதி காலி முகத்திடலில் தொடங்கிய வன்முறை தொடர்பான வழக்கில் இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. அவர்களது பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

திருகோணமலையில் அதிஉயர் பாதுகாப்பில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் அதே வேளையில் அதிபர் மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

திருகோணமலையில் இருந்தபடியே அவருக்கு வாழ்த்துச் செய்தியையும் ராஜபக்ஷ பதிவு செய்திருக்கிறார்.

Share.
Leave A Reply