ரஷ்ய விமான விவகாரத்தில் அரசாங்கம் தலையிட முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை குறித்து ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்ய Aeroflot விமான நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய Aeroflot எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கும் மற்றுமொரு நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கையில் அரசாங்கம் தலையிட முடியாது என தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய நிலைமை குறித்து ரஷ்ய தூதரகம் தௌிவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் நாளை(06) நீதிமன்றத்தில் அறிக்கையிட்டு விமானத்தை விடுவிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ரஷ்ய Aeroflot எயார்லைன்ஸ் நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக குறித்த விமானத்தின் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அமைச்சர் தமது கவலையை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்ய Aeroflot விமான நிறுவனம், கொழும்புக்கான தனது வணிக விமானங்களை நிறுத்தியது.

இலங்கையில் தமது விமானம் தடையின்றி பறக்க முடியும் என்பதை உறுதி செய்வதில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானங்களுக்கான விமானச்சீட்டு விற்பனையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக Aeroflot நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், ரஷ்யா நேற்று(04) தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஜனிதா லியனகே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு எதிர்ப்பு வௌியிடப்பட்டதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய Aeroflot விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.

அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

Share.
Leave A Reply