இலங்கை தற்போது  எதிர்கொண்டிருக்கின்ற    டொலர்  பற்றாக்குறை , பொருளாதார  நெருக்கடி  உள்ளிட்ட  சிக்கல்களை  தீர்ப்பதற்கான  நடவடிக்கைகள்   தொடர்ந்து  முன்னெடுக்கப்பட்டு  வருகின்ற போதிலும்  கூட இதுவரை பிரச்சினை  மிக தீவிரமான நிலைமையை நோக்கி  சென்று கொண்டிருக்கின்றது.

முக்கியமாக  தற்போது  மீண்டும்  எரிபொருள்,  எரிவாயுவுக்கு  கடுமையான  தட்டுப்பாடு   ஏற்பட்டுள்ளதுடன்  எதிர்வரும்  ஒக்டோபர் மாதமளவில்  பாரியதொரு   உணவு நெருக்கடியை   எதிர்கொள்ளவிருப்பதாகவும்   அபாயகரமான  தகவல்கள்  வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டிக்கின்றன    .

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான  அரசாங்கம்    இந்தியா, சீனா, ஜப்பான் ,  மற்றும்  ஐரோப்பிய  நாடுகளுடன்   டொலர்  கடன்  உதவிகளைப்  பெற்றுகெொள்வதற்காக  பேச்சுவார்த்தைகளை  நடத்திக் கொண்டிருக்கின்றது .

எனினும் இந்தப்  பேச்சுவார்த்தைகள்   இன்னும்  தொடர்ந்து  கொண்டிருக்கின்றனவே  தவிர  இந்தியா  தவிர ஏனைய  நாடுகளிடம்   இருந்தான  உதவிகள்  இன்னும்  இறுதி  செய்யப்படாமல்  உள்ளன.

தற்போதைய நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஆறு மாதங்களுக்கு நாடு வீழாமல் இருக்க  6 பில்லியன் டொலர்களை நாம் தேடிக்கொள்ள வேண்டும்.மேலும்  அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும்.

நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டும்.

அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பின்னர், எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சிப்போம்   என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பின்னணியிலேயே  அரசாங்கம்  சர்வதேச நாணய நிதியத்திடம்  நீண்டகால  டொலர்  கடன் உதவியை  எதிர்பார்த்திருப்பதுடன்   அந்த நிதியத்துடன்  பேச்சுவார்த்தைகளை    நடத்தி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம்  அமெரிக்காவின்  வொஷிங்டன்  நகரில்  இலங்கை பிரதிநிதிகளும்  சர்வதேச நாணய  நிதியத்தின்   பிரதிநிதிகளும்  பேச்சுவார்த்தை  நடத்தியிருந்தனர் .

இலங்கையிலிருந்து  முன்னாள்  நிதி அமைச்சர்  அலி  சப்ரி,  மற்றும்   மத்திய வங்கியின்    ஆளுநர் நந்தலால் வீரசிங்க , திறைசேரியின்  செயலாளர்  மஹிந்த  சிறிவர்த்தன   உள்ளிட்டோர்  பங்கேற்றிருந்தனர்.

இதன்போது  இலங்கைக்கு   உதவி வழங்குவது என்றும்  அதற்கான  ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை  முன்னெடுப்பது  என்றும்  நாண நிதியத்தின் அதிகாரிகள் மத்தியில்  தீர்மானிக்கப்பட்டது.

அதாவது  இதன்போது  இலங்கைக்கு   உதவி வழங்க வேண்டும்  என்ற  அடிப்படை  தீர்மானம்  சர்வதேச  நாணய நிதியத்தினால்  எடுக்கப்பட்டிருந்தது.  இதற்கான  அடுத்த கட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்ளவும்  தீர்மானிக்கப்பட்டது .

அந்தவகையிலேயே  தொடர்ந்து  தொழில்நுட்ப  ரீதியான   உத்தியோகஸ்தர்  மட்டத்திலான  பேச்சுவார்த்தைகள்  இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இலங்கையானது  சர்வதேச  நாணய நிதியத்திடம்   4 அல்லது  3 பில்லியன் டொலர் கடன் உதவிகளை   கோரியிருக்கிறது.

அது தொடர்பாக   சர்வதேச நாயண நிதியம்  பச்சை  சமிக்ஞை  காட்டினாலும்  அதற்கான  அடுத்த கட்ட நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன.

முக்கியமாக  சர்வதேச நாணய நிதியம்  இலங்கையுடன்  நடத்துகின்ற  பேச்சவார்த்தைகள்   சாதகமாக  நிறைவுபெற்று  இலங்கைக்கு    கடன் வழங்க  தீர்மானிக்குமாயின்  எதிர்வரும்  ஒக்டோபர்  மாதமளவில்  இலங்கைக்கு   3 பில்லியன்  டொலர்  கடன் உதவியை  கட்டம்  கட்டமாக   நீண்ட கால திட்டத்தின்  அடிப்படையில்   வழங்குவதற்கு  முன்வரும்.

அதற்கிடையில்  இலங்கைக்கும்   சர்வதே  நாணய நிதியத்துக்குமிடையில்  பல்வேறு  பேச்சுவார்த்தைகள்  நடத்தப்பட  வேண்டும்.   ஒக்டோபர்  மாதத்திலேயே   இலங்கைக்கு    உணவு நெருக்கடி  ஏற்படும்  என்று   தொடர்ந்து  எதிர்வு கூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எப்படியிருப்பினும்   சர்வதேச  நாணய நிதியம்  இலங்கைக்கு  வெறுமனே  கடனுதவியை  வழங்கிவிடாது.

மாறாக   இலங்கைக்கு  விஜயம் செய்து  திறைசேரி  அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தை  நடத்தி நிபந்தனைகளை  முன்வைக்கும் .

அவ்வாறு   நிபந்தனைகள்  இலங்கையினால்  ஏற்றுக்கொள்ளும்  பட்சத்தில்  நாணய நிதியத்தின  கடன் வழங்கப்படும்.

இந்நிலையில்  சர்வதேச நாணய நிதியம்  எவ்வாறான நிபந்தனைகளை  விதிக்கும்  என்பது  இங்கு  மிக முக்கியமானதாக  இருக்கின்றது .  ஒவ்வொரு   நாடுகளின் பொருளாதார    நிலைமைகளுக்கு  ஏற்பவே  சர்வதேச  நாயண  நிதியத்தின் நிபந்தனைகள்   விதிக்கப்படும் . இலங்கையைப்  பொறுத்தவரையில்  பின்வரும் நிபந்தனைகள்  விதிக்கப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகின்றது .

அரசாங்கத்தின் செலவை  குறைத்தல்,    அரச வருவாயை கூட்டுதல்,    ஊழல் வீண்விரயம் போன்றவற்றை தடுப்பதற்கு கடுமையான  நடவடிக்கை எடுத்தல்,  ரூபாவின் பெறுமதியை   சந்தையே     நிர்ணயிக்கும் விதமான ஏற்பாடுகளுக்கு செல்லல்,    இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல்,   வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை குறைத்தல், பொது படுகடனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்,  நட்டஈட்டும் அரச துறை நிறுவனங்களை மீள்கட்டமைப்புக்கு உட்படுத்தல்  அல்லது அரச தனியார் கூட்டாண்மை முயற்சிக்கு உட்படுத்துதல்  ஆகியவற்றுடன்   குறிப்பிட்ட நாடுகளின் தனித்துவ நிலைக்கு ஏற்ப சில பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியவற்றை  நிபந்தனைகளாக முன்வைக்கலாம்.

நெருக்கடி காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது ஒரு நாட்டுக்கு இரண்டு பக்கங்களில் தாக்கத்தை செலுத்தும்.

முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டுக்குள் வந்தவுடன் அந்த நாடு மீதான நம்பகத்தன்மை ஏனைய நாடுகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் ஏற்பட்டு விடும்.

எனவே சர்வதேச நாணய நிதியமும் சம்பந்தப்பட்ட நாடும் ஒரு நீண்ட கால கடன்திட்டத்தை மேற்கொள்ளும்போது ஏனைய நாடுகளும் கடன் வழங்கும் நிறுவனங்களும் அந்த நாட்டுக்கு கடன்கள் பிணைமுறி உள்ளிட்ட நிதிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தயாராக இருக்கும்.

காரணம் சர்வதேச நாணய நிதியத்தை நாடும்போது சர்சதேச நிறுவனங்களுடன் இலங்கை கடன் மறுசீரமைப்புக்களை செய்யும்.

அதுமட்டுமன்றி கடன்  வழங்கிய நாடுகளும் அந்த நாட்டின் மீது சந்தேகம் கொள்ளாமல் கடன்களை மீள செலுத்த கால அவகாசம் வழங்கும். அத்துடன் இலங்கையின் தற்போதைய டொலர் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண முடியும்.

இந்நிலையில்  சர்வதேச நாணய நிதியம்  இலங்கைக்கு விதிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகின்ற    நிபந்தனைகளில்   மூன்று விடயங்கள் ஏற்கனவே   இலங்கையினால்  நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றன.

அதாவது வரிசீரமைப்பு , வட்டிவீத மாற்றம்,   ரூபாவின்  பெறுமதியை  சந்தை நிர்ணயத்தல் போன்ற விடயங்களை     நடைமுறைப்படுத்த  இலங்கை ஆரம்பித்து விட்டது.

இதேவேளை  நாணய நியத்தன்  கடன்   ஒக்டோபர் மாதமளவிலேயே  கிடைக்கும்  என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவரையான  காலப்பகுதியில்  இலங்கை  கடுமையான   நெருக்கடியை  சந்திக்கும்  என்று எதிர்வுகூறப்படுகின்றது..

இந்த நான்கு மாதகாலப்பகுதியில்  எரிபொருள், எரிவாயு,    உரம், உணவு மற்றும்  தனியார் துறையினரின் உற்பத்திகளுக்கான  மூலப் பொருள்  என்பவற்றை    இறக்குமதி  செய்வதற்கு   இலங்கையிடம்  டொலர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே இந்த நெருக்கடியை  தீர்ப்பதற்கு  அரசாங்கம்  என்ன செய்யப்   போகின்றது என்பதே தற்போது முக்கியமானதாக  இருக்கின்றது. ஒருபுறம்  பிரதமர்  தலைமையிலான  அரசாங்கம்   சர்வதேச நாடுகளிடம்  உதவிகளைப் பெறுவதற்காக  பேச்சுவார்த்தைகளை  நடத்திக் கொண்டிருக்கின்றது.

மறுபுறம்  21 ஆவது திருத்த சட்டத்தை  நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கைகள்   தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார  நெருக்கடியும்  நீடித்துக்கொண்டிருக்கின்றது.  எரிபொருளுக்காகவும்  எரிவாயுவுக்காகவும்  மக்கள் வரிசைகளில்  காத்துக்கொண்டு  நிற்கின்றனர்.

ரொபட் அன்டனி

 

Share.
Leave A Reply