பொலிஸாரால் கைப்பற்றப்படும் கஞ்சாவை ஆயுர்வேத மருத்துவ பொருட்களை தயாரிப்பதற்காக  இலங்கை  ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கும் வகையிலான சட்ட திட்டங்களை இயற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் கஞ்சா தொகையைத் தவிர, எஞ்சிய தொகையை இலங்கை ஆயுர்வேத கூட்டத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கஞ்சா மூலிகையைப் பயன்படுத்தி இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம் ஐந்து வகையான ஆயுர்வேத மருத்துவப் பொருட்களை தயாரித்து வருவதுடன், அவற்றை தயாரிப்பதற்கு வருடத்திற்கு  3000 கிலோ கிராம் கஞ்சா தேவைப்படுவதாகவும்  அவற்‍றை பெற்றுக்கொள்வதற்கு நாட்டில் காணப்படுகின்ற சட்டங்கள் தடையாக இருப்பதாகவும் இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம்  குறிப்பிடுகின்றது.

ஆகவே, அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாட்டில் காணப்படும் தடைச் சட்டங்களை நீக்குமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழு விடுத்த கோரிக்கைகளை அடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்படுகின்ற கஞ்சாவை, கூட்டுத்தாபனம் வரையில் கொண்டு சென்று கையளித்தல் மற்றும் பாதுகாப்பது உள்ளிட்ட சகல பொறுப்புகளையும் பொலிஸாரே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும், உரிய நடைமுறையின் கீழ் ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட தொகை மற்றும் அழிக்கப்பட்ட தொகை தொடர்பில் உரிய நீதிமன்றங்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் நீதி அமைச்சில் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில், நீதியமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா மற்றும் நீதியமைச்சு, நீதி ஆணைக்குழு, இலங்கை ஆயுர்வேத திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply