எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை – பயாகல பகுதியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வரிசையில் காத்திருந்தபோது திடீரென சுகயீனமடைந்த நிலையில், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கு மக்கள் நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் அண்மைய நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மக்களை நீண்டநேரம் வரிசைகளில் காத்திருக்கச்செய்து, உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் வலுவிழக்கச்செய்து மேற்கொள்ளப்படுகின்ற படுகொலைகள் எனவும், இந்த மரணங்களுக்கும், இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ள இழப்பீடு என்ன? என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நேற்றையதினம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply