வாரணாசி: உடலுறவு கொள்ளாத, இரத்தம் ஏற்றாத உத்தரபிரதேச இளைஞர்கள் இருவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த 20 வயது ஆண் மற்றும் 25 வயது பெண் உட்பட 14 பேர் சமீபத்தில் காய்ச்சல் காரணமாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளித்த போதிலும் குணமாகவில்லை. வைரஸ், டைபாய்டு, மலேரியாவுக்கான சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும் அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் எதுவும் பலன் தரவில்லை, காய்ச்சலும் குறையவில்லை.
இதையடுத்து எச்.ஐ.வி பரிசோதனை செய்யுமாறு வைத்தியர்கள் இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர். முதலில் மறுத்த அவர்கள், நீண்ட ஆலோசனைக்கு பிறகு பரிசோதனைக்கு சம்மதித்துள்ளனர்.
சோதனை முடிவில் மருத்துவர்களும், அவர்களும் பயந்ததுபோலவே ஹெச்ஐவி பாதிப்பு உறுதியானது. பாதிப்பு உறுதியானதும் 20 வயது இளைஞர் மருத்துவமனையிலேயே உடைந்து அழுதுள்ளார்.
“எனக்கு 20 வயதே ஆகிறது. யாருடனும் உடலுறவு கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்டு இதுவரை மற்றவர்கள் இரத்தத்தைகூட ஏற்றவில்லை. அப்படி இருந்தும் எச்.ஐ.வி பாதிப்பு எப்படி வந்தது எனத் தெரியவில்லை” என அந்த இளைஞர் கண்ணீர் வடிக்க, பாதிப்பிற்கான காரணத்தை வைத்தியர்கள் ஆராயத் தொடங்கினர்.
அப்போது தான் பாதிக்கப்பட்ட இருவர் உடலிலும் பச்சை குத்தியிருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர். இருவருமே சமீபத்தில் தான் பச்சை குத்திக்கொண்டதும் ஒரு பொதுவான விஷயமாக இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரும் ஒரே நபரிடம், ஒரே ஊசியைப் பயன்படுத்தி பச்சை குத்தியிருப்பது தெரியவந்தது. இந்த தகவல்கள் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த இதேபோன்று மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் மேலும் சிலரையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் டாக்டர் ப்ரீத்தி அகர்வால் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில், “டாட்டூ ஊசிகள் விலை உயர்ந்தவை, எனவே பச்சை குத்தும் கலைஞர்கள் பணத்தை மிச்சப்படுத்த அதே ஊசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு ஊசி புத்தம் புதியதா என்பதை எப்போதும் சரிபார்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.