அரசியலில் வளரக்கூடாது என்று என் டிரைவருடன் தொடர்புபடுத்திப் பேசினார்கள். இதில் நிறைய பேருக்கு சம்பந்தம் இருக்கலாம்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தனது கணவர் மாதவன் தன்னை பிரிந்துவிடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ’கடந்த ஆறு மாதங்களாக மாதவன் என்னுடன் பிரச்னை செய்கிறார். திடீரென, அவரைவிட்டு பிரிந்துபோக சொல்கிறார்.

ஈவு இரக்கம் இல்லாமல் நள்ளிரவில் எழுப்பி சண்டையிடுகிறார்’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை ’வாட்ஸ்அப்‘ ஸ்டேட்டஸாக வைத்துள்ளார் ஜெ.தீபா. இதுகுறித்து, அவரை தொடர்புகொண்டு பேசினேன்.

”எல்லா கணவன், மனைவிக்குள் நடப்பதுபோல்தான் எங்க குடும்பத்திலும் பிரச்சனை. எங்களோடது லவ் மேரேஜ் கிடையாது. என் அம்மாவும் மாதவனோட அம்மாவும் பேசி திருமணம் செய்து வைத்தார்கள்.

11 வருடங்கள் வாழ்ந்துவிட்டு தற்போது, ’உன்னை பிடிக்கவில்லை. சேர்ந்து வாழமுடியாது’ என்கிறார் மாதவன். எதனால், இப்படி மாறினார் என்பது தெரியாது.

ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கடந்த ஆறு மாதமாகத்தான் என்னுடன் அதிகமாக சண்டைப் போடுகிறார்.

இந்த ஆறு மாதமாக, எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நரம்புப் பிரச்சனை உள்ளது. மருந்துகள் எடுப்பதால் அடிக்கடி சுயநினைவில்லாமல் போய்விடுகிறேன்.

இதற்காக, தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்றுகொண்டிருக்கிறேன். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து, என் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்களைக் காட்டவும் தயாரா இருக்கேன்.

நரம்பு பிரச்சனை தவிர உடல்ரீதியான பெரிய பிரச்சனைகள் கிடையாது. ஆனால், மாதவன் என்னை விட்டுட்டுப் போயிடுவேன்னு சொல்றது மனரீதியாக பெரிய டார்ச்சராக உள்ளது. என் உடல்நிலையை இன்னும் மோசமாக்குகிறது.

உடம்பு சரியில்லாத சூழலில் மாதவனைத் தவிர்த்து, என்னைப் பார்த்துக்க யாருமே கிடையாது.

அதனால, மாதவன் இதையே அட்வான்டேஜா எடுத்துக்கிறார். இது தப்புன்னு ஊரும் உலகமும் அவருக்கு எடுத்துச் சொல்லணும்.

எனக்கு நியாயம் கிடைக்க வழி பண்ணனும். என் அம்மாவும் அவங்க அம்மாவும் இறந்தபிறகு, எங்க வாழ்க்கை சுமூகமா இல்லை. என்னைப் பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலைன்னு சொல்லி பைத்தியம் பிடிக்க வைக்கிறார்.

எல்லாத்துக்கும் டைவர்ஸ் என்கிறார். ப்ளாக்மெயில் பண்றார். சண்டைப் போட்டுட்டு ஒவ்வொரு தடவையும் அவங்க அக்கா வீட்டுக்குப் போய்டுவார்.

நான் அங்கப்போய் காலுல விழுந்து கெஞ்சிக் கூப்டுட்டு வருவேன். அப்படித்தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்கேன்.

சின்ன விஷயத்துக்குக்கூட கோபப்பட்டு கார் எடுத்துட்டுப் போய்டுவார். உடனே, என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லி அழுவேன். ரெண்டு பேரையும் கூப்ட்டு அட்வைஸ் பண்ணுவாங்க. இதுதான் தொடர்ந்து நடக்குது.
ஜெயலலிதா

நான் தனியா இருக்கேங்கிறது முதல் பிரச்சனை. பாதுகாப்பில்லைங்கிறது ரெண்டாவது பிரச்சனை.

இதனையெல்லாம் சாதகமாக்கிக்கிறார். எவ்வளவு நாள்தான் இந்தக் கொடுமைகளைப் பொறுத்துக்க முடியும்? அதனாலதான், நாலு பேரு கேட்கட்டுமேன்னு வாட்ஸ்அப்ல அப்படி ஸ்டேட்டஸ் வச்சேன். இந்தச் சண்டை நாலு நாளா நடக்குது. விடிய விடிய நடக்குது. நான் சரியா சாப்பிட்டு ரெண்டு நாளாகுது.

இவ்ளோ கஷ்டங்களை அனுபவிச்சியும் வெளியுலகத்துக்கு, நாங்க நல்லா இருக்கோம்னுதான் காமிச்சிட்டிருக்கேன்.

ஆனா, உள்ளுக்குள்ள கொடுமையை அனுபவிக்கிறேன். என்னை மூலையில கொண்டுவந்து உட்கார வச்சிட்டு, இப்போ வேணாம்னு சொன்னா வேற வழியில்லாம காலுல விழுந்துதான் கெஞ்சணும்.

முன்கூட்டியே சொல்லியிருந்தா, என் வழியைப் பார்த்துட்டுப் போயிருப்பேன். திருமணமே வேணாம்னு இருந்தவளுக்கு இப்படியொரு திருமணத்தைப் பண்ணி வச்சி வாழ்க்கையை மொத்தமா நாசம் பண்ணிட்டாங்க. இந்தத் திருமணத்துக்கு என்ன அர்த்தம்?”.

உங்கள் அத்தை உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

”என் அத்தையோட அரசியல் வாழ்க்கை வேற. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேற. அத்தை அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது.

நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தப் பொண்ணு. அம்மா விஜயலட்சுமி நான் கும்பிடுற தெய்வம். என்னை கைக்குள்ள வச்சிப் பார்த்துக்கிட்டாங்க.

எனக்கு இருந்த ஒரே சப்போர்ட் அம்மாதான். அவங்க இறந்தவுடன் எனக்கு டார்ச்சர் அதிகமாகிடுச்சி”.

உங்கள் தம்பி தீபக் என்ன செய்கிறார்?

”தீபக் சப்போர்ட்டிவா இருந்தா நான் ஏன் இப்படி இருக்கப்போறேன். எனக்கு ஏன் இந்த நிலைமை வரப்போகுது? ஆனால், அவனே ‘உன்னை போலீஸில் பார்த்துக்கிறேன்.. கோர்ட்டில் பார்த்துகிறேன்.. உன்னை ஜெயில்ல வச்சிட்டுதான் மறுவேலை’ன்னு சொல்லி மிரட்டுறான்.

அத்தையின் போயஸ் கார்டன் வீட்டிற்குச் சென்றால், அந்த வீட்டில் இருந்து பொருட்களை எடுத்து வருகிறேன் என்று பிரச்னை செய்கிறான். அப்படி எதுவும் நான் எடுத்து வரவில்லை.

எங்களுக்கு அந்த வீடு கிடைத்தது ரொம்ப சந்தோஷம். அத்தையின் வாழ்க்கையே, அந்த வீடு முழுக்க நிரம்பியிருக்கு.

அதனால, வீட்டை நல்லா பராமரிக்க 11 பேரை வேலைக்கு வச்சி சுத்தம் பண்றேன். இதுக்கே, லாக்கர் சாவி தீபக்கிட்டத்தான் இருக்கு.

ஆனால், தீபக் வேற மாதிரி நினைக்கிறான். அவன் பிரச்சனை பண்றதாலதான் நான் போயஸ் கார்டனில் இல்லை.

ஆனால், பராமரிப்பு பணிகள் மட்டும் தொடர்ந்து போய்ட்டிருக்கு. அத்தை தனியாவே வாழ்ந்து இறந்துப் போனாங்க. இப்போ, அதே நிலைமை எனக்கும் வந்திருக்கு.

ஒருபக்கம் மாதவன், இன்னொரு பக்கம் தீபக்னு ரெண்டு பேரோட டார்ச்சர் தாங்க முடியலை. எப்படி சமாளிப்பேன்? மாதவன்தான் எனக்கு துணையா இருக்கார்னு வாழ்ந்திட்டிருக்கேன்.

ஆனா, அதோட ரியாலிட்டி இதுதான். என்னால் தனியா இருக்க முடியாது. உடம்பு சரியில்லாம போனதிலிருந்து விட்டுட்டுப் போறேன்னு சொல்றது பயம் வருது. பாதுகாப்பில்லாத சூழலா இருக்கு. என் உறவினர்களும் மாதவன் உறவினர்களும் எந்தச் சூழலிலும் உதவி செய்வதில்லை.

எனக்கு நாலே நாலு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஒரு அவசரம்னா உதவி செய்வாங்க. இப்போ அதுவும் மாதவன் கண்டிஷனால குறைஞ்சிப் போய்டுச்சி.

திட்டவட்டமா என்னை வேண்டாம்னு சொல்லி டைவர்ஸ் கேட்கிறார். இரவானால் சண்டையிட்டு என்னை தூங்கவிடுவதில்லை. 12 மணிக்குத்தான் சண்டையை தொடங்குவார். நள்ளிரவில் நான் எந்த ஃப்ரண்ட்ஸைக் கூப்பிடமுடியும்?

எனக்கு சப்போர்ட்டிவா யாரும் இல்லை. நல்லதோ கெட்டதோ வாழ்க்கையை மாதவனுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

உடலளவில் ரெண்டுப்பேருமே குழந்தைக்கு ஃபிட்டாதான் இருக்கோம். டாக்டரும் ரிப்போர்ட்ஸ் கொடுத்திருக்காங்க. நமக்குன்னு குழந்தை வேணும், குடும்பம் வேணும்னுதான் நான் நினைக்கிறேன். ஆனால்,மாதவன் என்னை டைவர்ஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்.

யூடியூபில் எல்லோரும் என்னை தவறாக, ’உன் புருஷன் எங்கே?’.. ’நீ டிரைவரை வச்சிருக்கியா’ என்றெல்லாம் அவதூறு பரப்பினார்கள்.

காவல்துறையில் புகார் எல்லாம் கொடுத்திருக்கேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அந்தக் கமெண்ட்ஸ்களைக்கூட நீக்க வைக்கவில்லை. அரசியலில் வளரக்கூடாது என்று என் டிரைவருடன் தொடர்புபடுத்திப் பேசினார்கள். இதற்கு நிறைய பேருக்கு சம்பந்தம் இருக்கலாம். டிரைவர் ராஜா என கட்சியில் இருந்த அனைவரும் எப்போதே போய்விட்டார்கள்.

இப்படி அவதூறு பரப்புவதால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படும்? என்பதை மீடியாக்கள் யோசிப்பதில்லை.

இதனாலேயே, எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை வந்திருக்கு. மீடியாக்களால் நான் அதிகம் பாதிக்கப்படுட்டுள்ளேன்.

என்னை அரசியலில் அசிங்கமாக பேசும்போது, ’என் மனைவியை இப்படி பேசாதீங்க’ன்னு மாதவன் சொல்லலை. ஒரு கணவராக போய் கேட்டிருக்கலாம்.

ஏனென்றால், மாதவனுக்கு என்னை பற்றி தெரியும். அது கடமைதானே? ஆனால், அதே மாதவனின் அக்காக்களைப் பேசினால் கோபம் கொப்பளித்துவிடும்.

அவங்க மட்டும்தான் பெண்கள். எங்கள் வாழ்க்கை இப்படி ஆனதற்கு அவர்களும் காரணம். எப்போதாவது மாதவன் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன்”.

Share.
Leave A Reply