பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர்.
அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார் லிஸ்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் தோற்றது எப்படி?
போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் பிரிட்டனின் நிதி அமைச்சராக ரிஷி சுனக்கின் திறமை பிரபலம் பெற்றிருந்தாலும், நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.
அவரது போட்டியாளரும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான லிஸ் டிரஸ், வாக்கெடுப்பில் அவரை விட மிகவும் முன்னிலை பெற்று புதிய பிரதமர் ஆகவுள்ளார்.
ரிஷி சுனக் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இருந்திருக்கும். அவர் பிரிட்டனின் வெள்ளையர் இனம் அல்லாத முதல் பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் ஆகிய பெருமைகளைப் பெற்றிருப்பார்.
2008இல் பராக் ஒபாமா அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது உருவாக்கிய வரலாற்றுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்திருக்கும்.
அவருக்கு முன் பிரிட்டனில் தெற்காசியாவைச் சேர்ந்த பல தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கு வந்துள்ளனர்.
பிரீத்தி படேல் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் சாதிக் கான் லண்டன் மேயராகவும் இருந்துள்ளனர். ரிஷி சுனக் 2020ல் நிதியமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டபோது அவரே நாட்டின் இரண்டாவது மிக முக்கியமான தலைவர் ஆனார். ஆனால் இது வரை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டதில்லை.
டாக்டர் நீலம் ரெய்னா மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், “இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்தியாவை விட மத மற்றும் இனச் சிறுபான்மை சமூகங்கள் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
ஆனால் ரிஷி பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அந்த வரலாறு, சிறப்புமிக்கதாக இருந்திருக்கும், ஏனெனில் அவர் வேறுபட்ட இன அடையாளத்தைக் கொண்டவர்,” என்றார்.
இங்கிலாந்துக்கு வெளியே, பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்களின் நீண்ட பட்டியலே உள்ளது. இந்த நாடுகளில் சில மொரிஷியஸ், கயானா, அயர்லாந்து, போர்ச்சுகல், ஃபிஜி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
உலகில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில், ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டுக்கு புலம்பெயர்ந்தோர், அவர்கள் குடியேறிய நாட்டை ஆளும் அல்லது ஆட்சி செய்த பெருமை இந்தியாவில் இருந்து குடியேறியவர்களைப் போல வேறு எந்த நாட்டுக்கும் இல்லை.
ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரூஸ்
“அவரது தோலின் நிறம் காரணமாக இருக்கலாம்”
அந்த பட்டியலில் 42 வயதான ரிஷி சுனக்கின் பெயரையும் சேர்த்திருக்கலாம். ரிஷி நிதியமைச்சராக இருந்தபோது, கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை வியக்கத்தக்க வகையில் கையாண்டு, மக்கள் மத்தியில் தனது நற்பெயரையும் பிரபலத்தையும் நிறுவினார்.
அவர் வெற்றி பெற்றிருந்தால், பிரித்தானிய சமூகம் பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணம் என்ற பரவலான பார்வையை வலுப்படுத்தியிருக்கும்.
ரிஷி சுனக் தன்னை ஒரு இந்து என்று கூறிக்கொண்டாலும், பொது வெளியில், பல்வேறு மதங்களின் சடங்குகளைப் பின்பற்றுகிறார்.
2015ல் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பகவத் கீதையின் மீது கைகளை வைத்து உறுதியேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் அவரது வெற்றிக்காக பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வந்தனர்.
அவர்களில் ஒருவர் ரிஷியின் சொந்த ஊரான சவுத்தாம்ப்டனில் வசிக்கும் 75 வயதான நரேஷ் சோன்சட்லா.
அவர் சிறுவயதிலிருந்தே ரிஷியை அறிந்தவர். நரேஷ் சோன்சட்லா கூறுகையில், “ரிஷி பிரதமராக வருவார் என்று நினைத்தேன். ஆனால் அவரால் முடியவில்லை.
இதற்கு காரணம் அவரது தோலின் நிறமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.
கடந்த மாதம், நரேஷ் சோன்சட்லா போன்ற ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இன அடையாளம் ரிஷியின் பிரதமர் கனவைச் சிதைக்கலாம் என்ற அச்சம் கொண்டிருந்ததை பிபிசி இந்தியா குழு, தனது கள ஆய்வில் கண்டறிந்தது.
கன்சர்வேடிவ் கட்சியின் அமைப்பு இந்த அச்சத்தின் பின்னணியில் இருப்பதாகத் தோன்றியது. ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரில் ஒருவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க, கட்சியின் 160,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது.
கட்சியின் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆண்கள்.
மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். கட்சியின் இளைய தலைமுறையினர் ரிஷிக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் மூத்த உறுப்பினர்கள் லிஸ் டிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். கடந்த மாதம், சில பழைய உறுப்பினர்கள் பிபிசி இந்தியா குழுவிடம், ரிஷியை அவர்கள் விரும்பினாலும், அவர்களின் வாக்கு லிஸ் டிரஸுக்குத் தான் என்றும் கூறினர்.
தேர்தல் முடிவு உணர்த்தியது என்ன?
வெள்ளையரல்லாத பிரதமரை தெரிவு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி இன்னும் தயாராகவில்லை என்பதை இத்தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அவரது தோல்விக்கு இனப் பின்னணி மட்டும் காரணமாக இருக்க முடியாது. லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியின் மூத்த அதிகாரியான சஞ்சய் சக்சேனா, இரு தலைவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பார்த்துதான் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்.
அவர் “கடந்த 20 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறேன். பன்முகத்தன்மையைப் பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பெரிய பதவிகளுக்குச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். ரிஷியின் தோல்விக்கு அவருடைய தோலின் நிறமே காரணம் என்று நான் நினைக்கவில்லை.” என்றார்.
உடனடி வரி குறைப்பு பற்றிய லிஸின் வாக்குறுதி பொதுமக்களைக் கவர்ந்ததுடன் கட்சியின் வாக்காளர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டனர்,” என்கிறார் அவர்.
ரிஷி சுனக்
தேசியக் காப்பீட்டுக்கான கட்டணத்தைக் குறைப்பது போன்ற டிரஸ் அளித்த வாக்குறுதிகள் பொதுமக்களைக் கவர்ந்தவை என்று சில நிபுணர்கள் ஏற்கெனவே கூறியிருந்தனர்.
நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் இருக்கும் லிஸ் டிரஸ், குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்துடன் நிறுவனங்களுக்கான வரியில் திட்டமிட்ட அதிகரிப்பை ரத்து செய்வதாக உறுதியளித்தார்.
ரிஷி சுனக் நிதி அமைச்சராக ஏப்ரல் மாதம் தேசிய காப்பீட்டு தொகையை அதிகரித்தார். இந்த உயர்வை திரும்பப் பெறுவதாக லிஸ் உறுதியளித்திருந்தார். அதிக வரிகள் “பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும்” என்பது அவரது வாதம்.
ரிஷி சுனக்கின் வாக்குறுதி என்னவென்றால், ‘உடனடி நிவாரணம்’ வழங்குவதற்குப் பதிலாக முதலில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன், இதன் காரணமாக வரியை உடனடியாகக் குறைக்க முடியாது.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்த விரும்பவில்லை என்று ரிஷி சுனக் கூறினார்.
தோல்வியை ஏற்றுக்கொள்வேன் ஆனால் பொதுமக்களிடம் நேர்மையற்றவனாக இருக்க மாட்டேன் என்று பலமுறை கூறினார்.
பிரிட்டனின் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், ரிஷி சுனக் மிகவும் பணக்காரர் என்பதால், சாதாரண மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அவர் பிரிட்டனில் உள்ள 250 பணக்காரர்களில் ஒருவர். ஆனால் அவர் பணக்காரராக பிறந்தாரா? இல்லை. அவர் சவுத்தாம்ப்டனில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தந்தை ஒரு மருத்துவர், தாய் ஒரு வேதியியலாளர். சிறுவயதில், அவர் சவுத்தாம்ப்டனில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அங்கு மக்களைச் சந்தித்த பிபிசியிடம், கல்வியில் அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு எளிய குடும்பத்தில் இருந்து அவர் வந்ததாகவும் அவர் பணக்காரரானார் என்றால் அது அவருடைய கடின உழைப்பால்தான் என்றும் கருத்து கூறினர்.
ரிஷி தனது இணையதளத்தில், “நான் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் நிறைய தியாகங்கள் செய்தார்கள்.
வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை பெங்களூரில் 2009இல் திருமணம் செய்துகொண்டார்.
இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அவரது அறிவிக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை அவரது மனைவிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
ரிஷி சுயமாக முன்னேறியவர். அவர் தனது இணையதளத்தில், “வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெங்களூர் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினேன். அது பலன் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சனை முதுகில் குத்தியதற்காக ரிஷி மீது கட்சியினர் பலர் கோபமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிஷி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் பல அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு வெளியேறினர், அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
இதற்குப் பிறகு, புதிய பிரதமருக்கான முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். கடைசி சுற்றுக்கு முன், கட்சி எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், கட்சி உறுப்பினர்களுக்கு அந்த உரிமை இல்லை. எம்.பி.க்கள் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோரை கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்தனர்.
கடைசிச் சுற்றில் எம்.பி.க்கள் அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ரிஷியின் அரசியல் வாழ்க்கையை முன்னேற்ற போரிஸ் ஜான்சன் பெரிதும் உதவியதாக மக்கள் கூறுகின்றனர். ரிஷி மீது அவர் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், ரிஷி செய்தியாளர்களிடம், போரிஸ் ஜான்சனை அணுகுவதற்குத் தாம் பல முறை முயன்றும் அவை செவிசாய்க்கபடவில்லை என்று ஒப்புக்கொண்டார்.
கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் ரிஷி சுனக்கின் புகழ் லிஸ் டிரஸ்ஸுடன் ஒப்பிடும்போது மிகவும் வலுவாக உணரப்படுகிறது.
பொதுத் தேர்தலாக இருந்திருந்தால் ரிஷி சுனக் எளிதாக வெற்றி பெற்றிருப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அவரும் அவரது ஆதரவாளர்களும் 2024 பொதுத் தேர்தலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.