அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர், தான் மிக அழகாக இருப்பதாலேயே தன்னை பொலிஸார் கைது செய்தனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
28 வயதான ஹென்ட் பஸ்டமி எனும் யுவதியே இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
லாஸ் வேகாஸ் நகரிலுள்ள ஹரி றீட் சர்வதேச விமானநிலையத்திலுள்ள உணவு விடுதியொன்றில், தனது உணவுக்கு பணம் செலுத்தாமல் வெளியேறியிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த யுவதி தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் ஹென்ட் பஸ்டமி என்பவர் என பொலிஸார் அடையாளம் கண்டனர்.
அவரை தேடிக் கொண்டிரந்தபோது விமான நிலைய சோதனைச்சாவடி சோதனைச் சாவடிக்கு அருகில் அவரைப் போன்ற பெண்ணொருவர் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் சோதனைநிலைய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
பஸ்டமியை கைது செய்வதற்கு பொலிஸார், ஏற்கெனவே பிடிவிறாந்து பெற்றிருந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்தனர்.
எனினும், தான் மிக அழகாக இருப்பதாலேயே தன்னை பொலிஸார் கைது செய்வதாகவும், தன்னைப் போன்ற அழகான ஒருவரை அப்பொலிஸார் கண்டதில்லை எனவும் அதிகாரிகளிடம் பஸ்டமி கூறியுள்ளார் என ‘8 நியூஸ் நவ்’ அலைவரிசை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹென்ட் பஸ்டமி, 1000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர் ஒக்டோபர் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டு என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.