ஸ்கொட்லாந்தில் உயிரிழந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பூதவுடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மகாராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவர் தனது 96 ஆவது வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
2 ஆம் எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11 ஆம் திகதி, ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் எலிசபெத்தின் உடல் விமானம் மூலம் இலங்கிலாந்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், ஸ்கொகாட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வைக்கப்படுகிறது.
பூதவுடல் தாங்கிய பேழையின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன.