காணொளி: ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் தாயகத்தை விட்டு வெளியேற வாகனத்தில் காத்திருக்கும் ரஷ்யர்கள்

யுக்ரேனுடனான போரில் இணைய கூடுதலாக படையினர் அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராணுவ அழைப்பை மீறி அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனுடான போரைத் தொடரும் வகையில் ராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த போரில் பணியாற்ற மூன்று லட்சம் பேரை அழைக்க ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜார்ஜியாவின் எல்லையில், போரில் பங்கேற்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ரஷ்யர்கள் இடம்பெற்ற வாகனங்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.

தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர், அதிபர் புதினின் அறிவிப்புக்குப் பிறகு, தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, வேறு உடைமையை கூட எடுக்காமல் நேராக எல்லை நோக்கி புறப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ரேஹான் டெமிட்ரியிடம் கூறினார்.

காரணம், போருக்கு அனுப்பப்படும் தகுதி வாய்ந்தவர்களின் குழுவில் தமது பெயரும் இடம்பெற்றதை அறிந்ததாகக் கூறுகிறார் அவர்.

அப்பர் லார்ஸ் சோதனைச் சாவடியில் கார்களின் வரிசை சுமார் 5 கிமீ (3 மைல்கள்) தூரத்துக்கு இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

மற்றொரு குழு எல்லை தாண்டிச் செல்ல ஏழு மணி நேரம் எடுத்ததாகக் கூறியது.

சில ஓட்டுநர்கள் தங்கள் கார்கள் அல்லது டிரக்குகளை போக்குவரத்து நெரிசலில் தற்காலிகமாக விட்டுச் செல்லும் காட்சி காணொளியில் தெரிந்தது.

விசாவிற்கு விண்ணப்பிக்காமல் ரஷ்யர்கள் நுழையக்கூடிய சில அண்டை நாடுகளில் ஜார்ஜியாவும் ஒன்றாகும்.

ரஷ்யாவுடன் 1,300 கிமீ (800 மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஃபின்லாந்து செல்வதானால் ரஷ்யர்களுக்கு விசா தேவை. இந்த நிலையில், ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக ஃபின்லாந்து கூறுகிறது.

ஆனால், அது சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்தது.

ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு விமானம் மூலம் எளிதாக செல்லக் கூடிய இடங்களாக இஸ்தான்புல், பெல்கிரேட் அல்லது துபாய் கருதப்படுகின்றன.

ராணுவ அணி திரட்டல் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டு விலை உயர்ந்துள்ளது.

சில இடங்களுக்கு பயணச்சீட்டுகள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.

 

துருக்கிய ஊடகங்கள் ஒரு வழி பயணச்சீட்டு விற்பனை மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரத்தில் விசா இல்லாமல் செல்லக் கூடிய இடங்களுக்கு வெகு சில ஆயிரக்கணக்கான யூரோக்களே செலவாகிறது.

‘அழைப்பை புறக்கணிக்க வசதியாக எனது கை, கால்களை கூட உடைத்துக் கொள்வேன்’

ஒலேஸ்யா ஜெராசிமென்கோ & லிசா ஃபோக்ட், பிபிசி நியூஸ்

செர்கே – இது அவரது உண்மையான பெயர் அல்ல – ராணுவ பணிக்கு இவர் ஏற்கெனவே அழைக்கப்பட்டுள்ளார்.

பிஎச்டி மாணவரும் விரிவுரையாளருமான இந்த 26 வயது நபர், புதின் உரையாற்றுவதற்கு முந்தைய நாள் இரவு மளிகைப் பொருட்களை எதிர்பார்த்துக் கிடந்தார்.

அப்போது இரண்டு ஆண்கள் சிவில் உடையில் தோன்றி, ராணுவ ஆவணங்களில் கையெழுத்திட கொடுத்தனர்.

ராணுவ சேவையில் ஈடுபட்டவர்கள், சிறப்புத் திறன்கள் மற்றும் போர் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்று கிரெம்ளின் கூறியுள்ளது.

ஆனால், செர்கேவுக்கு ராணுவ முன்னனுபவம் இல்லை. இதனால் அவரிடம் கட்டாயமாக ஆவணங்களை திணிப்பது தொடர்பாக அவரது மாற்றுத்தந்தை கவலைப்படுகிறார்.

ஏனெனில் இத்தகைய வரைவை திணிப்பது ரஷ்யாவில் ஒரு கிரிமினல் குற்றமாகும்.

அதிபர் புதினின் ராணுவ அணி திரட்டல் அழைப்பு செவ்வாய்க்கிழமை மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய ரஷ்ய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. இதன் விளைவாக 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காவல் நிலையங்களில் காவலில் இருந்தபோது அவர்களிடம் ராணுவ பணியில் சேரும் வரைவு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து செய்திகள் வருகின்றன.

இது குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃபிடம் கேட்டபோது, அத்தகைய செயல்பாடு ஒன்றும் சட்டவிரோதம் இல்லை என்று கூறினார்.

ரஷ்யாவுக்கு ராணுவ அணிதிரட்டலுக்கான எதிர்வினை வழக்கத்திற்கு மாறாக வலுவாக உள்ளது.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், புதன்கிழமை காலையில் நடந்த மாநாட்டில் இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்தது. “அதிபரின் ராணுவ அணி திரட்டல் அழைப்பு “ரஷ்ய மக்களில் பலரிடமும் செல்வாக்கற்றதாக இருக்கும்” என்று அது குறிப்பிட்டது.

“மிகவும் தேவையான போர் சக்தியை உருவாக்கும் நம்பிக்கையில் புதின் கணிசமான அரசியல் ஆபத்தை ஏற்றுக்கொள்கிறார்.

இந்த நடவடிக்கையானது யுக்ரேனில் போராட தயாராக இருக்கும் தமது தன்னார்வலர்களின் எண்ணிக்கை நீர்த்துப் போய் வருவதை ரஷ்யாவே ஒப்புக் கொள்வதன் வெளிப்பாடாகும்” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை, இதில் வெற்றியடைந்தாலும், அதன் பிறகு பல சவால்கள் உள்ளன.மேலும் புதிய பிரிவுகள் போருக்கு தயாராக பல மாதங்களாகும் என்றும் பாதுகாப்பு உளவுத்துறை தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, ரஷ்ய அதிகாரிகள் ராணுவ சேவையை முடித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று மீண்டும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ரஷ்யாவுக்கு, ராணுவ அணி திரட்டல் முறையாக அறிவிக்கப்பட்டதை விட மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற ஊகம் உள்ளது.

போருக்குப் பிந்தைய ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மத்தியில் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு வெளியேறிய சுதந்திர நாளேடான நோவாயா கெஸட்டா வெளியிட்டுள்ள செய்தியில் ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்புடன் சேர்த்து கூடுதல் பிரகடன அழைப்பு உள்ளது என்றும், அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த நாளிதழ் செய்தியில், போருக்காக அணி திரட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் பேர் என்ற இலக்கு உண்மையல்ல என்றும் அந்த எண்ணிக்கை பத்து லட்சம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply