ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடலாம் என்று விளாதிமிர் புதின் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

யுக்ரேனில் நடக்கும் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மறைமுக மிரட்டலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார்.

இந்தப் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ரஷ்யா ராணுவ அணிதிரட்டல் நடவடிக்கையிலும், யுக்ரேனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுவரும் நிலையில், இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

யுக்ரேனின் எதிர்த்தாக்குதல்களால் ரஷ்ய படைகள் பின்வாங்கிவரும் நிலையில், யுத்தக்களத்தில் புதின் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

“நிச்சயமாக இது ஓர் ஆபத்தான தருணம். ஏனெனில் ரஷ்ய ராணுவம் ஒரு மூலையில் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதாக புதின் விடுத்த மிரட்டல் மிகவும் மோசமானது” என்று பொரெல் கூறினார்.

 

யுக்ரேன் மீதான படையெடுப்பை ரஷ்யா தொடங்கி ஏழு மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், புதினின் படைகள் பின்தங்கிய நிலையில் இருப்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
‘நான் பொய் சொல்லவில்லை’

யுக்ரேனின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும் வகையில் ராஜதந்திர தீர்வு எட்டப்பட வேண்டும் எனக் கூறும் ஜோசப் பொரெல், இல்லையெனில் போரை நாம் முடித்தாலும் அமைதி இருக்காது என்கிறார்.

இந்த வார தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பல்வேறு அழிவுகரமான ஆயுதங்கள் தங்கள் நாட்டில் இருப்பதாகவும், தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தப் போவதாகவும் என்று புதின் கூறினார். அதோடு தான் பொய் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஒருவர் பொய் சொல்லவில்லை என்று கூறும்போது அதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் பொரெல்.

அதே உரையில், கட்டாய ராணுவ சேவையாற்ற மூன்று லட்சம் ரஷ்யர்களுக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டங்கள் நடந்துவரும் நிலையில், யுத்தக் களத்திற்கு செல்வதைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

8,000 சதுர கிமீ நிலத்தை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக யுக்ரேன் அறிவித்த பிறகு, இந்த அழைப்பை புதின் விடுத்திருந்தார்.

தற்போது ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான வாக்கெடுப்புகள் என்று கூறப்படும் நடவடிக்கையை, ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளில் ரஷ்யாவே நடத்திவருகிறது.

யுக்ரேன் பகுதிகளை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான முயற்சி இது எனக் குற்றம்சாட்டியுள்ள யுக்ரேன், ஆயுதமேந்திய ரஷ்ய வீரர்கள் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பகுப்பாய்வு
லைஸ் டௌசெட்
முதன்மை சர்வதேச செய்தியாளர்

இந்தப் போர் தெளிவான முடிவின்றி நடந்துவருவதால், இந்த ஆண்டின் ஐநா பொதுச்சபையில் யுக்ரேன் குறித்த விவாதம் ஆதிக்கம் செலுத்தியது. ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் வியக்கத்தக்க வகையில் தெளிவின்றியும், வேதனையோடும் இருந்தார்.

அவர் சென்ற இடங்களிலெல்லாம் இதுபற்றிக் கேட்டதைப் பகிர்ந்துகொண்டார்.

விடுமுறையில் நண்பர்களுடன் செல்வது தொடங்கி, இந்த வாரம் ஐநா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுடன் அவர் கலந்து கொண்டதுவரை பட இடங்களிலும் பலரும் இந்தப் போர் எப்போது முடிவடையும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

இந்தப் போரை நிறுத்துங்கள், “என்னால் மின்சாரக் கட்டணம் செலுத்த முடியவில்லை” என்று பலரும் திரும்ப திரும்ப கூறியது அவருக்கு வருத்ததைத் தந்திருக்கிறது.

ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடைகள்தான் இந்தத் துன்பத்திற்குக் காரணம் என்ற கருத்தை ரஷ்யா ஏற்படுத்தியுள்ளதால் இந்தப் போர் தொடர்பான உரையாடலில் ஆதிக்கம் செலுத்த ஐரோப்பாவும் அதன் நட்பு நாடுகளும் திணறிவருவதாக பலர் தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததைப் பொதுவில் பகிர பொரெல் தயாராக இருந்தார்.

அணு ஆயுதம் உட்பட மாஸ்கோவின் புதிய மற்றும் கவலையளிக்கும் அச்சுறுத்தல்கள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

பொரெல் உட்பட பெரும்பாலான மேற்கத்திய தலைவர்கள் யுக்ரேன் மற்றும் பிறநாடுகளுக்கு ஏற்படும் தொலைநோக்கு விளைவுகளைக் கவனத்தில் எடுத்து, இந்தப் போரில் தொடர்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தில் திட்டவட்டமாக உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத விநியோகம் குறைவாக உள்ளது என்ற கவலையை பொரெல் நிராகரித்தார், மேலும், யுக்ரேனுக்கு தொடர்ந்து ராணுவ ஆதரவை வழங்க வேண்டும் என்றும், அதிபர் புதின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றும், ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“எங்கள் நாட்டில் உள்ள மக்கள் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்தால் தங்களால் வேலை செய்ய முடியாது, தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது” எனத் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறும் அவர், இதே மாதிரியான கவலை ஆப்ரிக்க, தென் அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய தலைவர்களிடமும் வெளிப்பட்டதாக கூறுகிறார்.

‘டேங்கோ நடனமாட, உங்களுக்கு இரண்டு தேவை’என்று கூறி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தனது பங்கை ஆற்றுமாறு புதினுக்கு பொரெல் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மாஸ்கோவிற்கும், கிரெம்ளினுக்கும் புதினுடன் பேசச் சென்ற அனைவரும், எனக்கு இராணுவ நோக்கம் உள்ளது.

அந்த நோக்கங்களை அடையவில்லை என்றால் நான் போராட்டத்தைத் தொடர்வேன் என்ற புதினின் ஒரே பதிலுடன் திரும்பி வந்தனர். இது நிச்சயமாக கவலைக்குரிய போக்கு எனக் கூறும் பெரொல் தாம் தொடர்ந்து யுக்ரேனை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.

Share.
Leave A Reply