இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், காலை 5.30 மணியளவில் அங்குலான ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறிய சந்தேகநபர்களே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம்பதியினரிடம் வாளைக் காட்டி மிரட்டி, அப்பெண் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்துள்ளதுடன், அப்பெண்ணின் கணவரது பணப்பையையும் பறித்துள்ளனர்.
இதற்கு அந்த நபர் எதிர்ப்பை வெளியிட்ட போது, அவரை வாளால் கைகளில் வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த தம்பதியனரின் கூக்குரலையடுத்து, ஏனையவர்கள் வந்தபோது, சந்தேகநபர்கள் இருவரும் ஒடும் ரயிலிலிருந்து பாய்ந்துள்ளனர்.
லுனாவ பகுதியில்சந்தேகநபர்கள் பாய்ந்த போது, அது தொடர்பில் 119 என்ற அவசர பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயிலிலிருந்து பாய்ந்த சந்தேகநபர்களுள் ஒருவர் காயமடைந்து ரயில் பாதையில் விழுந்து கிடந்தபோது மொரட்டுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
மற்றைய சந்தேகநபர் தங்கநகைகள் மற்றும் 2 இலட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மொரட்டுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை கொள்ளையர்களின் தாக்குதலால் காயங்களுக்கு உள்ளான கணவனும் மனைவியும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், சந்தேகநபர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் சிறைக்கு சென்று வந்தவர்கள் என்றும் அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.