“2013இல் 13 வாக்குகளையும், 2014இல் 12 வாக்குகளையும், 2021இல் 11 வாக்குகளையும் திரட்டிக் கொள்ளக் கூடிய நிலையில் இருந்த இலங்கைக்கு இம்முறைவெறும் ஏழு வாக்குகளே கிடைத்துள்ளன”
சர்வதேச அரங்கில் இலங்கையின் இராஜதந்திரம் தோல்வியை நோக்கிப் பயணம் செய்கின்றமையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவயின் 51ஆவது அமர்வில் இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிவு துலாம்பரமாக காட்டியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானம், பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
51/1என அழைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகளும், எதிராக 7 நாடுகளும், வாக்களிக்க, 20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.
இலங்கைக்கு மிககுறைந்த வாக்குகளே கிடைத்திருப்பது முக்கியமானதொரு இராஜதந்திரப் பின்னடைவு.
அதேவேளை, இந்த தீர்மானத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதிய விடயங்கள் உள்ளடக்கப்படாமல் அல்லது அதனை விரைவுபடுத்தும் பொறிமுறையைப் பரிந்துரைக்காமல் நழுவியிருப்பதும்,
இலங்கைக்கு மேலதிகமாக 2 வருட காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதும், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் தமிழர் தரப்பின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருப்பதானது, இந்த தீர்மானம், இலங்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலும், தமிழர் தரப்புக்கு வெற்றியாக கொண்டாட முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது.
ஏற்கனவே 2021 மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட, 46/1 தீர்மானத்தை அடியொற்றியதாக உள்ள 51/1 தீர்மானத்தில், பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும், அதனைச் சார்ந்த விடயங்களும் மாத்திரம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
தீர்மான வரைவை பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றிய, பிரித்தானியாவின் வதிவிடப் பிரதிநிதி, சைமன் மான்லி செயற்பாட்டுப் பந்திகள் 8 மற்றும் 18 என்பனவே முக்கியமானவை என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
செயற்பாட்டுப் பந்தி 8, எதிர்கால நீதிமன்ற செயற்பாடுகளுக்கு உதவும் வகையில், மீறல்களுக்கான ஆதாரங்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தும் விடயங்களை உள்ளடக்கியது.
செயற்பாட்டுப் பத்தி 18, இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்குகின்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது.
பொருளாதாரக் குற்றங்கள் குறித்து இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதற்குப் பொறுப்புக்கூறுவதற்கு வலியுறுத்தியுள்ள போதும், அதனை முக்கியமானதொரு விடயமாக, பிரித்தானிய பிரதிநிதி சைமன் மான்லி தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதனை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அமைதியை ஊக்குவிக்கும் தீர்மானம் என்றே, அதனை முன்வைத்த அனுசரணை நாடுகள் கூறுகின்றன.
ஆனால், இது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், இந்த தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்திருப்பதுடன் இதனை இலங்கைக்கு எதிரான தீர்மானமாகவும் அடையாளப்படுத்தியிருக்கிறது.
இந்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் ஏற்கனவே வெளிவந்த- அல்லது கடந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் நிலையில், இந்த தீர்மானத்தை எதிர்ப்பதில் இலங்கை ஏன் தோல்வியைச் சந்தித்தது என்பதே முக்கியமாக ஆராயப்பட வேண்டியது.
வாக்கெடுப்புக்கு முன்னரே, இம்முறை குறைந்தளவு நாடுகள் தான், இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்பதை அரசாங்கம் எதிர்பார்த்தது.
வாக்கெடுப்புக்கு முதல் நாள், ஜெனிவாவில் இருந்து இணையவழியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை ஒப்புக் கொண்டிருந்தார்.
வாக்கெடுப்புக்குப் பின்னர் அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதும், இது எதிர்பாராத முடிவு அல்ல என தெரிவித்திருந்தார்.
“தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தோம்.
அதைவிட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு மாறிவிட்டது. அங்கு எமது நட்பு நாடுகள் சில இல்லை. சில நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டன” என்று குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போது, பல்வேறு நாடுகள் பல்வேறு அழுத்தங்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்று தான்.
அது இந்த முறை புதிதாக நடந்த ஒரு விடயமல்ல.
2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக மிக குறைந்தளவு வாக்குகள் கிடைத்திருப்பது இம்முறை தான்.
2012இல் 15 நாடுகளின் ஆதரவைப் பெற்ற இலங்கை, 2013இல் 13 வாக்குகளையும், 2014இல் 12 வாக்குகளையும், 2021இல் 11 வாக்குகளையும் திரட்டிக் கொள்ளக் கூடிய நிலையில் இருந்தது.
ஆனால், இந்தமுறை அந்த ஆதரவு ஒற்றை இலக்கத்துக்கு, அதாவது 7 ஆக சுருங்கியிருக்கிறது.
அதேவேளை, தீர்மானத்துக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள், அதிகரித்திருப்பதாக கருத முடியாது.
2012இல் தீர்மானத்துக்கு ஆதரவாக, 24 வாக்குகள் கிடைத்திருந்தன. 2013இல் அது 25 ஆக அதிகரித்தது.
2014இல் 23 ஆக குறைந்து, 2021இல் 22 ஆக சரிந்து, தற்போது 20 என்ற நிலைக்கு வந்திருக்கிறது.
அதாவது கடந்த 11 ஆண்டுகளில், இலங்கைக்கு குறித்த தீர்மானத்துக்கு, ஆதரவாக அளிக்கப்பட்ட ஆக குறைந்த வாக்குகளும் இது தான்.
அதேவேளை, வாக்கெடுப்பை புறக்கணித்த நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.
2012 மற்றும் 2013 இல் 8 நாடுகளும், 2014இல் 12 நாடுகளும், 2021இல் 14 நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்து, தற்போது, அந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது.
2021 மார்ச்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், வாக்கெடுப்பில் தோல்வியடைந்த போதும், தீர்மானத்தை எதிர்த்த 11 நாடுகள், புறக்கணித்த 14 நாடுகள் என, 25 நாடுகள் தங்களின் பக்கமே இருப்பதாகவும், 47 நாடுகள் அங்கம் வகிக்கும் பேரவையில் பெரும்பாலான நாடுகள் தங்களின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாகவும் அப்போதைய வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய பிரதமருமான தினேஸ் குணவர்த்தன கூறியிருந்தார்.
ஆனால், இந்தமுறை அரசாங்கம் அவ்வாறு பிரசாரம் செய்யாது. ஏனென்றால், தங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று முன்னரே கூறி விட்டது.
கடந்த முறையை விட இலங்கைக்கு 4 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளன. இதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு மாறியுள்ளதை ஒரு காரணமாக குறிப்பிட்டிருக்கிறார் அலி சப்ரி.
இலங்கைக்கு வழக்கமான ஆதரவை வழங்கும், ரஷ்யாவும், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இந்த ஆண்டு பேரவையில் அங்கத்துவ நாடுகளாக இல்லை.
அடுத்து கடந்த முறை இலங்கையை ஆதரித்த சோமாலியா இந்த முறை, வாக்கெடுப்பை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்து விட்டது.
இதனால் தான், பொலிவியா, சீனா, கியூபா, எரித்ரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா என, இலங்கைக்கு ஆதரவான வாக்குகள் 7 ஆக குறைந்தன.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் நேபாளம் இந்தியாவின் அழுத்தங்களை அடுத்து வாக்கெடுப்பை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த ஆண்டு புதிய உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்ட நாடுகள் இலங்கைக்கு கை கொடுப்பவையாகவும் இருக்கவில்லை.
ஆர்ஜென்ரீனா, பெனின், கமரூன், எரித்திரியா, பின்லாந்து, கம்பியா, ஹொண்டுராஸ், இந்தியா, கசகஸ்தான், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, மொன்ரெனீக்ரோ, பரகுவே, கட்டார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியனவே 2022 – 2024 காலப்பகுதிக்கான புதிய உறுப்பு நாடுகளாக இணைந்தவை.
அவற்றில் எரித்ரியா மட்டும், இலங்கைக்கு ஆதரவளித்தது. பெனின், கமரூன், போன்ற நாடுகள் முன்னர் இலங்கைக்கு எதிராக வாக்களித்த போதும், இம்முறை நடுநிலை வகித்தன.
அத்துடன், கம்பியா, இந்தியா, கசகஸ்தான், மலேசியா, கட்டார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன, வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தன.
இவற்றுடன் வழக்கமாகவே வாக்கெடுப்பை புறக்கணிக்கும், ஜப்பான், இந்தோனேசியா, பெனின், பிரேசில், ஐவரிகோஸ்ட், காபோன், லிபியா, நமீபியா, செனகல், சூடான் ஆகிய நாடுகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவான வாக்குகள், 20 ஆக குறைந்தாலும், பெரும்பான்மை பலத்துடன் அதனை நிறைவேற்றியிருக்கின்றன அனுசரணை நாடுகள்.
இந்த முறை இலங்கைக்கு ஆபிரிக்க நாடுகள் கைகொடுக்கவில்லை. இஸ்லாமிய நாடுகளும் வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டன.
இவற்றின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் இலங்கை தோல்வியடைந்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் தவிர, வேறெந்த இஸ்லாமிய நாடும் இலங்கையை ஆதரிக்கவில்லை.
சர்வதேச அரங்கில் இலங்கையின் இராஜதந்திரம் தோல்வியை நோக்கிப் பயணம் செய்கிறது. இதனை இந்த வாக்கெடுப்பு துலாம்பரமாக காட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் குறிப்பிட்டது போல, இதனை சர்வதேச சதித் திட்டம் என்று கூற முடியாது, இந்த நிலைமையை ஏற்படுத்தியது ராஜபக்ஷவினர் உள்ளிட்ட இலங்கையின் ஆட்சியாளர்கள் தான்.
-ஹரிகரன்-