சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது தந்தையும் உயிரிழந்தார்.

முதலில், அவரது தந்தை அதிர்ச்சியில் இறந்தார் என்று கருதப்பட்டது. இப்போது அவர், தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?

சென்னை ஆலந்தூரில் வாழ்ந்துவரும் மாணிக்கம் – ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யப்ரியா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

ராமலட்சுமி, தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டிற்கு எதிரே, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் சதீஷ் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.

சத்யப்ரியாவும் சதீஷும் காதலித்து வந்த நிலையில், சத்யப்ரியாவின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.

சதீஷ் எந்த வேலையும் செய்யாமல் திரிவதால், சதீஷை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என பெற்றோர் கூறினர். இதையடுத்து சதீஷைவிட்டு சத்யப்ரியா விலகத் துவங்கினார். இருந்தாலும் காதலை தொடரும்படி சதீஷ் வற்புறுத்தி வந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று கல்லூரி செல்வதற்காக பிற்பகல் 1.30 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்தார் சத்யப்ரியா.

அப்போது அங்கு வந்த சதீஷ் மறுபடியும் சத்யப்ரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஏற்கெனவே காதலித்து வந்ததைச் சொல்லி சண்டை போட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தபோது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில் நடைமேடைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ஆத்திரத்தில் இருந்த சதீஷ் ரயில் முன்பாக சத்யப்ரியாவைத் தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ரயில் சத்யப்ரியா மீது ஏறி இறங்கியது. இதற்குப் பிறகு சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்யப்ரியா

சத்யப்ரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சத்யப்ரியாவின் தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சதீஷ் பிடிபட்டது எப்படி?

சதீஷின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்தபோது அவர் துரைப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிவது தெரிந்தது. இதையடுத்து நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை மரணம் எப்படி நடந்தது?

இந்த நிலையில், மாணவி சத்யாவின் தந்தை இரவு திடீரென உயிரிழந்தார். மகள் இறந்த அதிர்ச்சியில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் கருதப்பட்டது.

அவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே கடும் நோயோடு போராடி வரும் சத்யாவின் தாய் ராமலட்சுமியை சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஒரே நாளில் மகளையும், கணவரையும் இழந்து தவிக்கும் ராமலட்சுமி இன்னும் மகள் உடலைக்கூட பார்க்கவில்லை.

தொடரும் ரயில் நிலைய கொலைகள்

சந்தேக நபரை அடையாளம் காட்டிய சிசிடிவி காட்சி

காதலிக்க மறுப்பதால், சென்னை மின்சார ரயில் நிலையங்களில் பெண்கள் கொல்லப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த 2016ஆம் ஆண்டும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற வாலிபர், சிறையிலேயே உயிரிழந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்தது. எனினும், இந்த மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

 

2021ஆம் ஆண்டில் தாம்பரம் ரயில் நிலையத்தில் சுவேதா என்ற நர்சிங் கல்லூரி மாணவி, காதல் விவகாரம் தொடர்பாக கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன் என்பவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Share.
Leave A Reply