நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

கடும் மழை காரணமாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் 50 பேர்ச்சஸ் காணியில் அமைந்திருந்த 2 மாடி வீட்டில் ஜீ.பிரேமசிறியும் அவரது மனைவியும் மகன்மார் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நிலவிய அதிக மழையுடனான வானிலையினால் வீட்டின் மேற்புறத்தில் காணப்பட்ட மண்மேடு எவரும் எதிர்பாராத விதமாக சரிந்து வீழ்ந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது பிரேமசிறியும் அவரது மனைவியும் அவர்களது மூத்த மகனும் வீட்டிற்குள் இருந்துள்ளனர். 10 வயதான இளைய மகன் பகுதி நேர வகுப்பிற்காக வீட்டிலிருந்து சென்றிருந்தார்.

மண்மேடு சரிந்து வீழ்ந்தபோது, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அயலவர்கள் உடனடியாக தேட ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் பிரதிபலனாக வீட்டிற்கு முன்பாக காயங்களுடன் தந்தை மீட்கப்பட்டார். உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாயையும் மூத்த மகனையும் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. கடும் பிரயத்தனங்களுடன் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களையடுத்து, மண்ணில் புதையுண்ட நிலையில் 48 வயதான தாய் கண்டுபிடிக்கப்பட்டார். எனினும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிருடன் இருக்கவில்லை.

வீட்டிலிருந்த செல்லப் பிராணியான நாய் இடிபாடுகளுக்குள்ளிருந்து வௌியே வந்துள்ளது.

குறித்த வீட்டை அண்மித்து காணப்படும் பல வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன், 15 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஹொரணை – வகவத்த பகுதியில் நீர் நிறைந்த மாணிக்கக்கல் சுரங்கத்தில் தவறி வீழ்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று (14) பிற்பகல் பெய்த கனமழையால் சுரங்கத்தில் நீர் நிரம்பியதாகவும், உள்ளே இருந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வெளியே எடுக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த நபர் சுரங்கத்தில் வீழ்ந்து காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனிடையே களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டது.

கடும் மழை காரணமா குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சில பகுதிகள் நீரில் மூ்கின.

கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, ஹாலிஎல – கிஹீகல்கொல்ல பகுதியிலுள்ள வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

மழை காரணமாக கிண்ணியா – பூவரசன்தீவு, கல்லடி வெட்டுவான், மகாமார் ஆயிலியடி ஆகிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்க்கியுள்ளன.

அத்துடன், கிண்ணியா குறிஞ்சாக்கேணி , நடுத்தீவு ஆகிய பகுதிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply