கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார்.
காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்ததாக கோவை மாநகர காவல்துறை கூறுகிறது. காரை ஓட்டி வந்தவரின் உடல் முழுவதுமாக கருகியதால் அவரின் அடையாளம் தெரியவில்லை.
இந்த நிகழ்வுக்குப் பின் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன், உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன், சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி ஸ்டீபன் ஜேசு பாதம் ஆகியோர் கோவை விரைந்தனர்.
இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு இரண்டு சிலிண்டர்களில் ஒரு சிலிண்டர் வெடித்தாகவும், சிலிண்டர் வெடிப்பு நடந்த மாருதி 800 காரின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளர்களை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ”பால்ரஸ் இல்லை; வேறு சில விஷயங்கள் உள்ளன” என்று மட்டும் அவர் கூறினார்.
கோவையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் இருந்து கோவைக்கு வரவுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.
சைலேந்திர பாபு
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநர் கோவை வந்துள்ளார் என்றும் தற்போது தடயங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
முதல்கட்ட விசாரணை மூலம் தெரிந்த தகவல்கள் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ”சதிச் செயலா என்று விசாரணையின் கடைசியில்தான் சொல்ல முடியும், எல்லா கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று டிஜிபி தெரிவித்தார்.
கார் வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் சுமார் காவல் துறையினர் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமல்லாது கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சைலேந்திர பாபு நிகழ்விடத்துக்கு வருவதற்கு சற்று முன்னர் அங்கு வந்து பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன் ”சிசிடிவி காட்சிகளை வைத்தும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காரை ஓட்டிச் சென்றவரின் உடல் முழுமையாக சிதைந்துள்ளதால் அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.காவல்துறை மற்றும் தடயவியல் துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.