இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் உள்ள வலிமை மிக்க பொருளாதாரப் படைக்கலனாக இரசியாவின் எரிவாயு இருக்கின்றது.
மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் தேவையில் 43% இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது.
அமெரிக்கா இதை கடுமையாக எதிர்த்து வந்தது. இரசியாவில் இருந்து பெறுவது மலிவானது என்பதால் அதன் அயல்நாடுகள் அங்கிருந்து பெறுவதை தவிர்க்க விரும்பவில்லை.
படைக்கலனாக எரிபொருள் விநியோகம்
2014 பெப்ரவரி 20-ம் திகதி இரசியா உக்ரேனை மீது போர் தொடுத்த பின்னர் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் இரசியா மீது பொருளாதார தடைகளை செய்தன.
பின்னர் 2022 பெப்ரவை 24-ம் திகதி இரசியாவின் இரண்டாம் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் அந்த தடைகள் மேலும் விரிவாக்கப்பட்டன.
2022 பெப்ரவரி ஆக்கிரமிப்பின் பின்னர் நேட்டோ நாடுகளும் ஜப்பான் மற்றும் ஒஸ்ரேலியா போன்ற நாடுகளும் இரசியாவிற்கு எதிராக ஒற்றுமைப் பட்டன-.
இந்த ஒற்றுமையைக் குலைக்க புட்டீன் இரசியாவின் எரிபொருள் வளத்தை அரசுறவியல் பகடைக் காயாக பயன் படுத்தினார்.
இரசியா மீது பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு எதிராக தனது எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தினார். அதனால் உலகில் எரிபொருள் விலை ஏறியதுடன் இரசியாவின் ஏற்றுமதி வருமானமும் அதிகரித்தது.
புட்டீனின் பதிலடிகள்
உக்ரேனுக்கு எதிரான போரை இரண்டு வாரங்களில் முடிக்க புட்டீன் போட்ட திட்டம் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களால் தவிடு பொடியானது.
2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியா பெரும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியிருந்தது.
இதன் பின்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் பல நகர்வுகளைச் செய்து வருகின்றார். இரசியப் படையினருக்கு ஆட் சேர்ப்பு, இரசியா ஆக்கிரமித்த உக்ரேனின் பிரதேசங்களை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் இரசியாவுடன் இணைத்தல் உக்ரேனின் உட்-கட்டுமானங்கள் மீது தாக்குதல் என அவரது நடவடிக்கைகள் விரிகின்றன.
தனது எரிவாயு விநியோகத்தின் உக்ரேனூடாக செல்லும் நிலத்தடிக் குழாய்களில் தங்கியிருப்பதை விரும்பாத இரசியா 2011-ம் ஆண்டு Nord Stream – 1 என்னும் பெயரில் 2011-ம் ஆண்டு போல்ரிக் கடலினூடாக ஒரு எரிவாயு விநியோகிக்கும் 1222கிமீ (759 மைல்) நீள குழாயை உருவாக்கியது.
பின்னர் 2012 இல் Nord Stream – 1 குழாயையும் உருவாக்க தொடங்கியது. இத்திட்டங்களுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
புட்டீனின் எரிவாயுத் தாக்குதல்கள்
2022 ஜூலை 25-ம் திகதி இரசியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Gazprom ஜேர்மனிக்கு Nord Stream – 1இனூடாக் செல்லும் எர்வாயு விநியோகத்தை 20%ஆல் குறைத்தது.
பின்னர் 2022 ஓகஸ்ட் 31-ம் திகதி பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்காக எரிபொருள் விநியோகம் நடைபெற மாட்டாது என இரசியா அறிவித்தது.
2022/23 குளிர்காலத்திற்கு தேவையான எரிவாயுக் கையிருப்பை ஜேர்மனியும் மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சேமிக்காமல் பண்ணவே இரசியா இந்த எரிவாயு விநியோகத்தை அவ்வப்போது தடுத்தது எனக் குற்றம் சாட்டப்பட்டது.
உக்ரேன் போரில் 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை கடும் சினத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
அவருடைய ஆதரவாளர்கள் அவர் போர் நடத்தும் முறை பற்றி தமது அதிருப்தியை தெரிவிப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
புட்டீனின் குழாயடித் தாகுதல்களா?
2022 செப்டம்பர் 26-ம் திகதி நோர்வேயில் இருந்து டென்மார்க் ஊடாக போலாந்து வரை எரிவாயு விநியோகிக்கும் குழாய் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
அதே நாளில் Nord Stream – 1 மற்றும் Nord Stream – 2 குழாய் சேதப் படுத்தப்பட்டது. இது அமெரிக்காவினதும் உக்ரேனினதும் வேலை என இரசியா குற்றம் சாட்டுகின்றது.
அது இரசியாவின் வேலை என அமெரிக்காவும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன.
இலையுதிர் காலத்தின் முதலாம் வாரத்திலேயே இந்த எரிபொருள் விநியோகத்திற்கான தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களை யார் சேதப்படுத்தினார் என்பதற்கான ஆதாரம் எதையும் யாரும் முன் வைக்கவில்லை.
ஆனால் ஐரோப்பிய நாடுகள் குளிர்கால எர்பொருள் தேவைக்கான பாதுகாப்பின் வலிமை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.
Nord Stream குழாய்களுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சேதங்களால் மூன்று இடங்களை எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வாயு போல்ரிக் கடற்பரப்பில் இருப்பதால் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகுப் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன.
மாறி மாறிக் குற்றச் சாட்டுகள்
உக்ரேனும் போலந்தும் இரசியாவே Nord Stream குழாய்களை சேதப்படுத்தியது என்கின்றன. டென்மார்க் தலைமை அமைச்சர் Mette Frederiksen குழாய்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் ஒரு விபத்தி என நம்ப முடியாது என்றார்.
Nord Stream – 2 இனூடாக விநியோகம் செய்ய முன்னரே உக்ரேன் மீதான இரசியாவின் இரண்டாவது ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டபடியால் அதுனூடாக ஒரு போதும் எரிவாயு விநியோகம் செய்யவில்லை.
இரசியாவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் Nord Stream – 1 உருவாக்கும் போது செய்த ஒப்பத்தத்தின் படி இரசியா எரிவாயுவை விநியோகிக்கும் கடப்பாடு கொண்டுள்ளது.
அதை மீறினால் பன்னாட்டு சட்ட நடவடிக்கை மேலும் பொருளாதாரத் தடை போன்றவற்றை மேற்கு நாடுகள் செய்யலாம்.
சேதப்படுத்தப் பட்ட குழாயால் விநியோக செய்ய முடியாது என்னும்போது இரசியாவிற்கு எதிரான நகர்வுகளைச் செய்ய முடியாது.
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கன் ஆரம்ப தகவல்களின் படி வேண்டுமென்றே Nord Stream குழாய்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்றார்.
உக்ரேனுடான எரிவாயு விநியோகத்தை தடுக்க சதியா?
2019-ம் ஆண்டு இரசியாவும் உக்ரேனும் 40பில்லியன் கன மீற்றர் எரிவாயு உக்ரேனூடாக நிலத்தடி குழாய்கள் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம் உக்ரேன் 2024-ம் ஆண்டு வரை $7பில்லியன் வருமானத்தைப் பெற அவ் ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
இரசியாவின் Gazprom நிறுவனம் தற்போது நாளொன்றிற்கு 42.4 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவை உக்ரேனூடாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகின்றது.
இது உக்ரேனூடாக செல்லும் குழாய்கள் மூலம் அனுப்பக் கூடிய எரிவாயுவின் அளவின் 17% மட்டுமே!
இந்த எரிவாயு அனுப்புதலுக்கு உக்ரேனின் Naftogaz என்னும் நிறுவனம் இரசியாவின் Gazprom நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வில்லை என தீர்ப்பாயம் ஒன்றில் முறையிட்டுள்ளது.
இரசிய Gazprom மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு எரிபொருள் விநியோகம் செய்யாமல் இருப்பதற்கே வேண்டுமென்றே திட்டமிட்டு செய்வதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றது.
குளிர்காலப் போட்டி நகர்வுகள்
குளிர் காலத்தின் முன்னர் இரசியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் முயல்கின்றன.
155-மில்லி மீட்டர் Howitzers பல்குழல் ஏவூர்தி செலுத்திகள், GMLR ஏவூர்திகள், M-31 HIMARS மற்றும் M-142 HIMARS பல்குழல் ஏவூர்தி செலுத்திகள் போன்ற இரசியப் படையினருக்கும் அவர்களின் படைக்கலன் களஞ்சியங்களுக்கும் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய படைக்கலன்கள் அமெரிக்கா உக்ரேனியப் படைகளுக்கு வழங்குகின்றது.
ஜேர்மனியும் உக்ரேனுக்கான தனது படைக்கல விநியோகத்தை அதிகரித்துள்ளது. இவை இரசியப் படையினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டன.
மேற்கு ஐரோப்பாவை குளிரில் நடுங்க வைக்க எரிவாயுப் போரை புட்டீன் ஆரம்பித்து விட்டாரா என்ற கேள்வி எழுகின்றது.
உக்ரேனுடன் பிணக்கு Nord Stream குழாய் சேதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இரசிய அதிபர் புட்டீன் ஒரு குழாயடிச் சண்டையை தொடக்கி விட்டார் என்றே தோன்றுகின்றது.
இப்போது வலுவாக இருக்கும் புட்டீனின் எரிவாயுப் படைக்கலன் வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கான குழாய்மூலமான எரிபொருள் விநியோகம், அமெரிக்காவில் இருந்து திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு விநியோகம் ஆகியவற்றால் இன்னும் 3 ஆண்டுகளில் வலிமை இழந்து போகும்.
பின்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எரிபொருள் விநியோகத்தில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.
-வேல்தா்மா-