வீட்டில் கோழிக்கறி சமைக்க மறுத்த மனைவியை கணவன் தாக்கினார். கணவன் மனைவி சண்டையை தடுக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
கணவன் மனைவி இடையே எதற்கு சண்டை வருகிறது என்றே தெரியாது. திடீரென சண்டை வந்துவிடும். ஆனால் இந்த சண்டையை விலக்கிவிடுவதாக வந்து சிலர் மாட்டிக்கொள்வதுண்டு.
அதுபோன்ற ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகிலுள்ள சவானி பதார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு அஹிர்வார்.
இவர் தன் மனைவியிடம் வீட்டில் கோழிக்கறி சமைக்கும்படி தெரிவித்தார். ஆனால் அவர் மனைவி கோழிக்கறி சமைக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட சண்டையில் பப்பு தன் மனைவியை அடித்து உதைத்தார்.
கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஓடி வந்து அவர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட்டனர்.
ஆனால் தனது குடும்ப சண்டையில் தலையிட்ட தன் உறவினர் பப்லு வீட்டிற்கு பப்பு கம்புடன் சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த பப்லுவை பப்பு சரமாறியாக அடித்தார். இதில் பப்லு பலத்த காயமடைந்தார்.
உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்துபோனார்.
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து பப்புவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி கிரண் லதா கூறுகையில், “வீட்டில் கோழிக்கறி சமைப்பது தொடர்பாக தம்பதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவி சண்டையை பக்கத்து வீட்டுக்காரர்கள் தீர்த்து வைத்துள்ளனர். பப்பு தனது உறவினர் பப்லு வீட்டிற்கு சென்று அவரை கம்பால் அடித்துள்ளார்.
இதில் காயம் அடைந்த பப்லு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் பப்பு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.”