கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்துடன் மோதி பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியதில் சாரதி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 02 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த சொகுசு பஸ்ஸிற்கு பின்பாக வந்த மற்றுமொரு சொகுசு பஸ்ஸூம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்றது. இருப்பினும் அந்த பஸ்ஸில் பயணம் செய்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேவேளை, விபத்து இடம்பெற்ற பகுதியில் மழையுடனான வானிலை நிலவியதாகவும் இதனால் வீதி வழுக்கும் நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விபத்திற்கான காரணம் இயந்திரக் கோளாறா அல்லது சாரதியின் கவனயீனமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
32 வயதான வல்வெட்டித்துறையை சேர்ந்த பஸ்ஸின் சாரதியான எஸ்.சிவரூபன், பருத்தித்துறையை சேர்ந்த 24 வயதான இராமலிங்கம் நிதர்சன் மற்றும் 23 வயதான நாவலப்பிட்டியை சேர்ந்த ராமகிருஸ்ணன் சயஹரி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ராமகிருஸ்ணன் சயஹரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவம் பயிலும் 23 வயதான மாணவியாவார்.
விடுமுறையை தனது பெற்றோருடன் கழிப்பதற்காக தனது பயணத்தை ஆரம்பித்த சயஹரி இடைநடுவில் தனது கனவுகளை தொலைக்க நேரிடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
வாய்பேச முடியாத சயஹரியின் பெற்றோர் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் மகளை உயர்கல்வி கற்க யாழ். பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தனர்
இதேவேளை, புசல்லாவை – ஹெல்பொட , கட்டுகித்துல பகுதியில் எரிபொருள் பௌசர் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெல்பொட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டு, மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த பௌசர், பள்ளத்தில் வீழ்ந்து இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.