பெங்களூரில், விபத்து ஏற்படாமலேயே ஏற்பட்டதாகக் கூறி கார் உரிமையாளரிடம் ரூ.15,000 பணத்தை மிரட்டிப் பறித்த இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

திரைப்பட பாணியில் விபத்து ஏற்படாமலேயே விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, கார் உரிமையாளரிடம் ரூ.15,000 மிரட்டிப் பறித்த இருவரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

பெங்களூர் காவல்துறை அதிகாரியான டி.சி.பி பி.கிருஷ்ணகாந்த் தன்னுடைய ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில் இரு சக்கர வாகனம் ஒன்று, ஒரு வெள்ளை நிற காருக்கு அருகில் செல்கிறது. அந்த இரு சக்கர வாகனம் வேண்டுமென்றே வலதுபுறம் திரும்பியதால் கார்,

இரு சக்கர வாகனத்தின் மீது லேசாக மோதுகிறது. அதன் பிறகு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கார் ஓட்டுநரைப் பார்த்து கூச்சலிடுகின்றனர்.

பின்னர் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை விரட்டிப் பிடித்து கார் ஓட்டுநரை மிரட்டி அவரிடம் சண்டையிடுகிறார்கள்.

அதைத் தொடர்ந்து கார் ஓட்டுநரிடம் இரு சக்கர வாகனம் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், காலில் அடிப்பட்டிருப்பதாகவும் கூறி ரூ.15,000 கேட்டு மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி, “இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் மிரட்டிப் பறித்த பணம் ரூ.15,000, அவர்களின் இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Share.
Leave A Reply