தற்காப்புக் கலையை திரைப்படங்களின் வாயிலாக உலகளவில் கொண்டுபோய்ச் சேர்த்ததில் புரூஸ் லீக்கு தனி பங்குண்டு. லட்சக்கணக்கானவர்கள் அவருடைய திரைப்படங்களின் மூலம் தற்காப்புக் கலை மீது ஈர்ப்பு கொண்டனர்.

அவர் மர்மமான முறையில் 32 வயதில் உயிரிழந்தபோது, அவருடைய இறப்புக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

மாஃபியா கும்பல்கள் கொலை செய்து விட்டன என்பது முதல் 2018ஆம் ஆண்டில் சொல்லப்பட்ட வெப்ப அதிர்ச்சி வரை அந்தக் காரணங்களை தனித் தனியாகப் பட்டியலிடும் அளவுக்கு நீளமானது.

ஐரோப்பிய சிறுநீரக சங்கத்தின் அதிகாரபூர்வ ஆய்விதழான கிளினிக்கல் ஜர்னல் ஆஃப் கிட்னியின் இந்த ஆண்டுக்கான டிசம்பர் மாத பதிப்பு வெளியாகியுள்ளது.

அதில், புரூஸ் லீயின் இறப்பு மற்றும் அது குறித்த ஆய்வுகள் என்று கிடைக்கக்கூடிய தகவல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர் செரபிரல் ஒடிமா எனப்படும் மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியா என்ற பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறுகிறது.

ஹைபோநெட்ரீமியா இருந்ததற்கான பல காரணிகள் ப்ரூஸ் லீயிடம் இருந்ததாகவும் அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

அதில் “நாள்பட்ட அதிக திரவ உட்கொள்ளலைத் தூண்டக்க்கூடிய வகையில், தாகத்தை கடுமையாக அதிகரிக்கும் காரணிகள்(கஞ்சா பயன்பாடு), ஆன்டிடியூரிக் ஹார்மோன் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலம் சிறுநீரகத்துடைய நீரை வெளியேற்றும் திறனைக் குறைப்பது அல்லது சிறுநீரகக் குழாய்களின் நீர் வெளியேற்ற வழிமுறைகளில் குறுக்கிடக்கூடிய மருந்துகளை உட்கொள்ளுதல் (ஸ்டெராய்ட், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஓபியாய்டுகள்), மது அருந்துதல், கடுமையான சிறுநீரக காயம், கடந்த காலத்தில் கடுமையான சிறுநீரக காயம்” போன்றவை இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
புரூஸ் லீ உயிரிழந்த நாளில் என்ன நடந்தது

புரூஸ் லீ உயிரிழந்த நாளன்று என்ன நடந்தது என்பதைக் குறித்து பொதுவெளியில் இருக்கக்கூடிய தகவல்களை இந்த ஆய்வுக்கட்டுரை விவரிக்கிறது. அந்த விவரங்கள்:

அவர் உயிரிழந்த நாளன்று, புரூஸ் லீயும் அவரது படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்த ரேமண்ட் சோவும் லீயின் காதலி என்று கருதப்பட்ட பெட்டி டிங் பெயின் வீட்டிற்கு காரில் சென்றனர்.

டிங் பெய் உடன் லீ சில மணிநேரத்தைத் தனியாகக் கழித்தார். பிறகு அங்கு தன்னுடைய வரவிருந்த திரைப்படத்தின் சில காட்சிகளைத் தீவிரமாக நடித்துப் பார்த்தார். அவர் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக கஞ்சாவை பயன்படுத்தியிருந்தார்.

இரவு 7:30 மணியளவில் தண்ணீர் குடித்த அவருக்கு, தலைவலியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. டிங் பெய் அவருக்கு ஒரு ‘எக்வாஜெசிக்’ மாத்திரையைக் (அவர் முன்பே எடுத்துள்ள மெப்ரோபாமேட் மற்றும் ஆஸ்பிரின் கலவை) கொடுத்தார். லீ ஓய்வெடுப்பதற்காகப் படுக்கையறைக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் ரேமண்ட் சோவ் அங்கிருந்து கிளம்பினார். இரவு 9:30 மணியளவில், லீ மயங்கிய நிலையில் இருப்பதை டிங் பெய் கண்டார். அவரை எழுப்ப முயன்றும் எந்தப் பலனும் இல்லை.

பிறகு கிளம்பிச் சென்ற சோவை அழைத்தார். அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்தனர். மருத்துவர் 10 நிமிடத்திற்கு சிபிஆர் முறை மூலம் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயன்று தோல்வியுற்றார்.

லீ அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்களோ நாக்கைக் கடித்ததற்கான அறிகுறியோ எதுவும் இல்லை. கடுமையான பெருமூளை வீக்கத்தால் 1,400 கிராம் எடை இருக்க வேண்டிய மூளை 1,575 கிராம் எடைக்கு இருந்தது.

வயிற்றில் கஞ்சாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ப்ரூஸ் லீயின் மரணம் எக்வாஜெசிக் மாத்திரைக்கு அதிக உணர்திறன் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பெருமூளை வீக்கம் தான் காரணம் என்று அதிகாரபூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டது.

லீ மரணத்தின் மற்ற காரணங்களும் புதிய ஆய்வு சொல்லும் விளக்கங்களும்

“லீ அந்த மாத்திரையை முன்பும் பயன்படுத்தியுள்ளார். அவர் உயிரிழந்த நாளன்று கூட, உடல்நலம் சரியில்லாமல் போன ‘பிறகு தான்’ அதை எடுத்துள்ளார். ஆகவே அவருக்கு இந்த மாத்திரையை எடுக்கும் முன்னரே அறிகுறிகள் தென்பட்டன.

மேலும், எக்வாஜெசிக் மாத்திரை தான் காரணமாக இருந்திருந்தால், உடற்கூறாய்வில் மூளை வீக்கம் மட்டுமே ஒரு தடயமாகக் கிடைத்திருக்காது,” என்று கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு கூறுகிறது.

அவர் இறப்பதற்கு முந்தைய மாதமான மே 10ஆம் தேதியன்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆகவே அவருடைய மரணத்திற்கு ‘வலிப்பு’ காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.

ஆனால், “அது ஒரேயொரு நிகழ்வு தான்” எனக் கூறும் இந்த ஆய்வுக்கட்டுரை, அவர் மே 29, 30 ஆகிய தேதிகளில் நரம்பியல் மருத்துவர் டேவிட் ரெய்ஸ்போர்டிடம் முழு நரம்பியல் பரிசோதனையைச் செய்திருந்ததாகவும் அந்தப் பரிசோதனைகளில் அவருடைய மூளையின் செயல்பாட்டில் எந்தவொரு பிரச்னையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறுகிறது.

ப்ரூஸ் லீ

 

மேலும், “அவருக்கு ஃபெனிடோய்ன் என்ற மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதை அவர் உயிரிழந்த நாள் வரை எடுத்துள்ளார்.

ஒருவேளை வலிப்பு ஏற்பட்டு இறந்திருந்தால், அவருடைய நாக்கு கடிக்கப்பட்டிருக்க வேண்டும், மூளை வீக்கத்தோடு, நுரையீரலும் அதிக திரவம் சேர்ந்து வீங்கியிருக்க வேண்டும்.

இவை எதுவும் இல்லையென்று உடற்கூராய்வு பதிவுகள் கூறுகின்றன. அதனால் அவர் வலிப்பு நோயால் இறக்கவில்லை,” என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

1973ஆம் ஆண்டில், அவர் உயிரிழந்த ஜூலை 20ஆம் தேதியன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாகவும் அதில் ஏற்பட்ட வெப்ப அதிர்ச்சியால் (Heat stroke) அவர் உயிரிழந்ததாகவும் 2018ஆம் ஆண்டு கூறப்பட்டது.

ஆனால், “வெப்ப அதிர்ச்சியின்போது உடலுறுப்புகளின் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸுக்கும் மேலே இருக்கும். தோல் வெப்பம் மிகுந்து, வறண்டு காணப்படும். மத்திய நரம்பு மண்டலத்தில் அசாதாரணங்கள் தென்பட்டிருக்கும்.”

“2018ஆம் ஆண்டில் வெப்ப அதிர்ச்சியே காரணமென்று கூறிய மேத்யூ போல்லி, மே 10ஆம் தேதியன்று ப்ரூஸ் லீக்கு வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டதாகவும் அது அவர் வெப்ப அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்,” எனக் கூறும் புதிய ஆய்வு, வெப்ப அதிர்ச்சிக்கான வாய்ப்புகளை இது அதிகரிக்காது என்று வாதிடுகிறது.

அதுமட்டுமின்றி, அவர் உயிரிழந்த நாளன்று ஹாங்காங்கில் 25 முதல் 32 டிகிரி செல்ஷியஸ் வரை இருந்ததாகவும் இது அங்கு வழக்கமான வெப்பநிலையே என்றும் குறிப்பிட்டதோடு, அவருடைய உடற்கூறாய்வு அறிக்கையில் உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் கூறுகிறது.

இறப்புக்கு சொல்லப்படும் புதிய காரணம்

ஹைபோநெட்ரீமியா இருந்ததற்கான பல காரணிகள் புரூஸ் லீயிடம் இருந்ததாகவும் அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

அதில் “நாள்பட்ட அதிக திரவ உட்கொள்ளலைத் தூண்டக்கூடிய வகையில், தாகத்தை கடுமையாக அதிகரிக்கும் காரணிகள்(கஞ்சா பயன்பாடு), ஆன்டிடியூரிக் ஹார்மோன் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலம் சிறுநீரகத்துடைய நீரை வெளியேற்றும் திறனைக் குறைப்பது அல்லது சிறுநீரகக் குழாய்களின் நீர் வெளியேற்ற வழிமுறைகளில் குறுக்கிடக்கூடிய மருந்துகளை உட்கொள்ளுதல் (ஸ்டீராய்ட், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஓபியாய்டுகள்), மது அருந்துதல், கடுமையான சிறுநீரக காயம், கடந்த காலத்தில் கடுமையான சிறுநீரக காயம்” போன்றவை இருந்ததாகக் குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் சியாட்டிலின் லேக் வியூ புதைவிடத்தில் ப்ரூஸ் லீ மற்றும் அவருடைய மகன் பிராண்டன் லீயின் சமாதி

அத்துடன், “லீ மே 10ஆம் தேதியன்றே மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவர் ஹாங்காங்கில் ஒரு டப்பிங் வேலையில் இருக்கும்போது, தலை வலியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மதியம் சாப்பிட்டதையும் வாந்தியெடுத்துள்ளார். அவரால் நிற்க முடியாமல் தடுமாறியுள்ளார்.

அவரை அருகிலிருந்த பாப்டிஸ்ட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மூளை வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதன்பிறகு அவர் அமெரிக்காவில் மருத்துவர் ஹேரால்ட் எல்.கார்ப்மனிடம் மே 25ஆம் தேதியன்று மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது மே 10ஆம் தேதி பாப்டிஸ்ட் மருத்துவமனை பரிசோதனையில் அவருடைய ரத்த யூரியா நைட்ரஜன் அளவு அசாதாரணமாக இருந்ததாகவும் 25ஆம் தேதி இயல்பாக இருந்ததாகவும் தெரிகிறது. இது அவருக்கு முன்பே சிறுநீரக காயம் ஏற்பட்டிருந்ததைக் காட்டுகிறது,” என்று புதிய ஆய்வு கூறுகிறது.

தண்ணீரை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்கள் போக, “லீயின் மனைவி லிண்டா, அவருடைய அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுமுறை குறித்தும் கூறியுள்ளார்.

அவர் உயிரிழந்த நாளிலும் போல்லி, அவர் அதிகளவு தண்ணீர் அருந்தியதைப் பற்றி பேசினார்,” என்று குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரையில், புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply