‘அவர் வியக்கத்தக்கவர், தலைசிறந்த ஆட்டக்காரர்’ என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியைப் புகழ்ந்திருப்பவர் அவரது ரசிகரோ, அவரது அணி வீரரோ அல்ல.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுடன் மோதித் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட்.

“அவர் தலைசிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதில் எங்களது வீரர்கள் சிறப்பாகச் செல்பட்டார்கள். ஆனால் முடியவில்லை. அவர் அற்புதமானவர் ” என்று கூறியிருக்கிறார் கிரஹாம்.

பந்தைக் காலால் கடத்தியபடி மெஸ்ஸி தொலைக்காட்சித் திரைகளில் தோன்றும்போது அவரை ‘மந்திரக்காரர்’ என்று வர்ணணையாளர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது.

“ஒரு அங்குல இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாகப் பந்தைக் கோலுக்குள் கொண்டு செல்லும் திறன் படைத்தவர் மெஸ்ஸி” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று கூறுகிறது.

ஆஸ்திரேலியா vs அர்ஜென்டினா

ஆஸ்திரேலியாவுடன் அர்ஜென்டினா முன்னிலை பெறுவதற்காக மெஸ்ஸி அடித்த முதல் கோல், ஒரு குறுகிய இடைவெளியில், ஆஸ்திரேலியாவின் பல கால்களுக்கு இடையே அடிக்கப்பட்டதுதான்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மெஸ்ஸிதான் அதிகமான ரேட்டிங் பெற்ற வீரர். அவ்வளவு ஏன், கிடைத்தற்கரிய பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட போலந்து அணியுடனான போட்டியில்கூட அவருக்குத்தான் அதிகப் புள்ளிகள் கொடுத்திருந்தார்கள்.

“நான் மாரடோனா ஆடியபோது அவருக்கு எதிராக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது மெஸ்ஸி ஆடும் அணிக்கு எதிராக பயிற்சியளிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இருவரும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களைப் பெற்றதற்காக அர்ஜென்டினா பெருமைப்பட வேண்டும்” என்று கூறுகிறார் கிரஹாம் அர்னால்ட்.

உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சௌதி அரேபிய அணியுடன் தோற்று நெருக்கடிக்கு உள்ளான அர்ஜென்டினா அணி அதன் பிறகு அடுத்தடுத்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும்.

மெஸ்ஸி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெஸ்ஸி செய்தது என்ன?

ஃபிபா தரவரிசையில் அர்ஜென்டினா அணி மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 38-ஆவது இடத்திலும் இருக்கின்றன.

அதனால் இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் கணிக்கப்பட்ட பலவும் நடக்காமல் போயிருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் திருப்பங்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தொடக்கத்தில் இருந்தே பந்தை அதிகமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அர்ஜென்டினா அணிக்கு அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன.

ஆனால் 35-ஆவது நிமிடத்தில் ப்ரீகிக் மூலம் கிடைத்த பந்து ஆஸ்திரேலிய கோலுக்கு அருகே சென்று மீண்டும் மெஸ்ஸியிடமே திரும்பி வந்தது.

அதை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கடத்திச் சென்ற மெஸ்ஸி, பல ஆஸ்திரேலிய வீரர்கள் சூழ்ந்து நிற்கும்போதே கோலுக்குள் அடித்தார்.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய கோல்கீப்பர் மிகவும் மோசமான ஒரு தவறைச் செய்தார். பாதுகாப்பு அரணில் நின்ற சக வீரர் அவருக்கு பந்தை அடித்தபோது, அதை கையால் பிடிக்காமல் காலால் தட்டிவிட முயன்றபோது, அது சற்று நழுவியது.

அப்போது பந்துடனேயே ஓடி வந்து கொண்டிருந்த ஜுலியன் ஆல்வரெஸ் கோல்கீப்பரிடமிருந்து பந்தைப் பறித்து கோலுக்குள் அடித்தார். இந்தக் கோல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.

64-ஆவது நிமிடத்தில் பாதியில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சில மீட்டர் தொலைவில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அதைத் தடுத்துவிட்டார்.

அர்ஜென்டினா இரண்டு கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் அவ்வளவு எளிமையாக விட்டுவிடவில்லை. 77-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கோலை நோக்கி அடித்த பந்து அர்ஜென்டினா வீரர் மார்டினஸின் காலில் பட்டுத் திரும்பி கோலுக்குள் சென்றுவிட்டது. இந்த கோல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை பிறந்தது.

80-ஆவது நிமிடத்துக்குப் பிறகு இரு அணிகளுக்கும் கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி கோலுக்குள் அடிக்க முயன்ற பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் அற்புதமாகத் தடுத்தார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலுறுதிக்குள் நுழைந்தது.

மெஸ்ஸிக்கு 1000-ஆவது போட்டி

நாட்டுக்காகவும் கிளப்புக்காகவும் மெஸ்ஸி ஆடிய ஆயிரமாவது போட்டி இது. ஆனால் இதில் பெருமைப்படுவதற்குப் பதிலாக நிம்மதி அடைந்திருப்பதாகவே மெஸ்ஸி கூறுகிறார்.

இரு நாள்களுக்கு முன்பு கடைசி லீக் போட்டியை ஆடிய நிலையில், நாக் அவுட் போட்டியில் ஆடியது உடலுக்கு வைத்த சோதனையாகவே கருதுவதாக அவர் கூறினார். போதுமான ஓய்வு எடுக்கவில்லை என்ற தகவலையும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு கோல் அடித்ததன் மூலம் மாரோடோனாவின் அதிக உலகக் கோப்பை கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இன்னும் ஒரு கோல் அடித்தால் 10 கோல் அடித்து முதல் இடத்தில் இருக்கும் கேப்ரியல் பாடிஸ்டுடாவின்வின் சாதனையை சமன் செய்ய முடியும்.

2006-ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பை போட்டிகளில் மெஸ்ஸி ஆடி வருகிறார். அந்தப் போட்டியிலேயே தனது கோல் எண்ணிக்கையை மெஸ்ஸி தொடங்கினார்.

2010-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.

2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 கோல்களையும், 2018-இல் ஒரு கோலையும் அடித்திருக்கிறார் மெஸ்ஸி. கத்தாரில் இதுவரை மூன்று கோல்களை அடித்திருக்கிறார்.

Share.
Leave A Reply