இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் அக்கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இதில் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

பாஜக மற்றும் காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் காலை 11 மணிக்கு மேல் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

மதிய 12 மணி நிலவரப்படி 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 27 இடங்களில் வெற்றிமுகம் கண்டுள்ளது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஆம் ஆத்மி ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.

இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அடைய 35 இடங்களில் வெல்ல வேண்டும் என்கிற நிலையில் 38 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைவதை தற்போதைய நிலவரப்படி தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சிபுரிந்து வருகின்றன.

கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்த நிலையில் தற்போது காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களிலேயே வெற்றி பெற்றது.

தற்போது ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்து வருகிறது.

அந்த பட்டியலில் மேலும் ஒரு மாநிலம் சேர்வது காங்கிரஸ் கட்சியினிரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply