வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. நள்ளிரவில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 130 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

 

நள்ளிரவில் மாமல்லபுரத்தில் கரை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

 

Share.
Leave A Reply