மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நபர் ஒருவர், 7 வருடங்களின் பின்னர் அப்பெண்ணை உயிருடன் கண்டுபிடித்துள்ளார். அப்பெண் வேறு ஒரு ஊரில் மற்றொரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச்சேர்ந்த ஆரத்தி எனும் பெண், ராஜஸ்தானின் மாநிலத்தில் தவுசா நகரில் பணிபுரிந்து வந்தார்.

ஆரத்தியும் உத்தரப்பிரதேசத்தின் விரிந்தாவன் நகரைச் சேர்ந்த சோனு சைனி என்பவரும் 2015 செப்டெம்பரில் காதலித்து திருமணம் செய்துகொண்டிருந்தனர்.

இவர்களின் திருமணம் நடந்து சில நாட்களின் பின் ஆரத்தி காணாமல் போனார். அவர் காணாமல் போன சிலநாட்களின் பின் உத்தரப்பிரதேசத்தின் விரிந்தாவன் நகரிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சடலத்துக்குரிய பெண் அடையாளம் காணப்படவில்லை. அச்சடலத்தை பொலிஸார் அழித்துவிட தீர்மானித்தனர்.

எனினும் பின்னர், ஆரத்தியின் தந்தை பொலிஸ் நிலையம் சென்று, அச்சடலத்துக்குரியவர் தனது மகள் எனக் கூறினார். புகைப்படம் மற்றும் ஆடைகளின் அடிப்படையில் அது தனது மகள் என அறிந்துகொண்டதாக அவர் கூறினார்.

அதன்பின் ஆரத்தியின் கணவர் சோனு சைனி மற்றும் அவரின் நண்பர் கோபால் சைனி ஆகியோருக்கு எதிராக கொலை வழக்கும் தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வழக்கில் சோனு சைனி ஒன்றரை வருடங்களும் கோபால் சைனி 9 மாதங்களும் சிறையில் இருந்தனர்.

தாம் கொலை செய்யவில்லை எனக் கூறி வந்த இவ்விருவரும் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் ஆரத்தியை தேடும் முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் மேஹாந்திபூர் பாலாஜி பிரதேசத்திலுள்ள விஷாலா எனும் கிராமத்திலிருந்து வந்த ஒருவர் மூலம், அங்கு புதிதாக வந்த ஒரு பெண் குறித்த தகவலை கூறினார். அது ஆரத்தியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வியாபாரி போன்று அங்கு சென்றுள்ளார்.

இது குறித்து சோனு சைனி கூறுகையில், ஆரத்தி உயிருடன் உள்ளமை தொடர்பாக, மெஹந்திப்பூர் காவல் நிலையத்தில் கூறியபோது, ‘ஆரத்தியின் அடையாளம் தங்களுக்கு வேண்டும் என கூறி உதவி செய்ய மறுத்து விட்டனர்.

அடையாள அட்டை எனக்கு கிடைப்பதற்கு 2 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பின் பொலிஸார் விசாரணையில் இறங்கினர்’ என கூறியுள்ளார்.

ஆரத்தியின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, இளைஞர் ஒருவரை அரச ஊழியர் போன்று ஒரு குறித்த வீட்டுக்கு சோனு சைனி அனுப்பினார்

வீடுகளுக்கு கழிவறை நிர்மாணிக்கும் அரசாங்கத் திட்டம் குறித்து ஆரத்தி வீட்டிலுள்ளவர்களுடன் அந்த இளைஞர் உரையாடினார்.

பின்னர் குடும்பத் தலைவியின் விபரங்களைக் கேட்டபோது அனைத்து ஆவணங்களையும் அப்பெண் கையளித்தார்.

இதன் மூலம், அப்பெண் ஆரத்தி தான் என்பது தெரியவந்தது. இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

மெஹந்திப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலை தொடர்ந்து, உத்தர பிரதேச பொலிஸார் ஆரத்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி ஆரத்தியை கண்டுபிடித்தனர்.

ஆரத்தி தனது 2 ஆவது கணவரான பகவான் சிங் ரேபாரி என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஆரத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, ஆரத்தியின் தந்தையான சூரஜ் பிரசாத் குப்தா என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply