ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.வரி அதிகரிப்பால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி அதிகரிப்பை தவிர மாற்று திட்டம் ஏதும் கிடையாது என குறிப்பிடும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயமானது.38 இராஜாங்க அமைச்சுக்களுக்கான செலவை குறைத்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரச தலைவர்களுக்கு மனமில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போதைய மின் கட்டண அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரையை இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவுள்ளது.

தற்போதைய மின்கட்டண திருத்தத்திற்கமைய 30 அலகுக்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் 360 ரூபா குறைந்தபட்ச மின்கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாவாகவும்,60 அலகுக்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் நுகவோரிடமிருந்து அறவிடப்படும் 780 ரூபா குறைந்தபட்ச கட்டணத்தை 5000 ரூபாவாகவும்,90 அலகுக்கு குறைவான மின் அலகுக்கு அறவிடப்படும் 1800 ரூபாவை 7000 ரூபாவாகவும்,மத தலங்களிடமிருந்து அறவிடப்படும் 1280 ரூபாவை 5300 ரூபாவாகவும் அதிகரிக்க பரிந்துரைக்கப்படவுள்ளது.

Share.
Leave A Reply