– பொம்மைகள், உணவு டின்களுக்குள் சூட்சுமமாக அனுப்பி வைப்பு

ரூ. 165.9 மில்லியன் ரூ. (16.59 கோடி) பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் குஷ் (Kush) போதைப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் உணவு டின்களுக்குள் மறைத்து தபால் மூலம் சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட நிலையில், மத்திய தபால் பரிமாற்றகத்தில் மீட்கப்பட்டுள்ளன.

சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பணிப்பாளருமான சுதத்த சில்வா இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில், ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தபால் சேவை ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 07 சந்தேகத்திற்கிடமான பொதிகள் இலங்கை சுங்கத்தின் தபால் மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்றையதினம் (22) வரை, அப்பொதிகளை பெற பெறுநர்கள் முன்வராததால், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள், தபால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஊழியர்கள், இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் முன்னிலையில் பொதிகளை பரிசோதித்தனர்.

இச்சோதனையின் போது, ​7 பொதிகளில் இருந்த பொம்மைகள், உணவுகள் அடங்கிய டின்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிகளவான் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த போதைப்பொருட்களில் 4,673 கிராம் குஷ் எனும் போதைப்பொருள் மற்றும் ஐஸ் எனப்படும் Methamphetamine 9,586 போதைப்பொருள் மாத்திரைகள் (4,009 கிராம்) ஆகியன மீட்கப்பட்டதோடு, இவற்றின்  மதிப்பு முறையே ரூ. 70,095,000 மற்றும் ரூ.95,860,000 என மதிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் மொத்த தெரு மதிப்பு ரூ. 165,955,000 ரூபாவாகும்.

முதற்கட்ட சுங்க விசாரணையின் முடிவில், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருள் பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை தபால் திணைக்களத்தின் மத்திய தபால் அலுவலக ஊழியர்கள் வழங்கிய பெரும் ஆதரவின் காரணமாக இலங்கை தபால் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பெருமளவான சோதனைகளைள மேற்கொள்ள முடிந்துள்ளதாகவும், இது தொடர்பில் தபால் திணைக்களத்திற்கு சுங்கத் திணைக்களம் நன்றி தெரிவிப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply