புதிய ஆண்டில் நாடு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதை விட, மின்சாரக் கட்டண அதிகரிப்பில் தான் அரசாங்கத்தின் முழுக் கவனமும் காணப்படுகிறது.

நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை 60 தொடக்கம் 65 சதவீதத்தினால் அதிகரிப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

மின்கட்டண அதிகரிப்பு விடயத்தில் அவர் உறுதியாக இருக்கிறார். இல்லாவிட்டால் ஆறு தொடக்கம் எட்டு மணி நேரம் மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று மக்களை அச்சுறுத்தி வருகிறார்.

நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மட்டுமல்ல, 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகவே மின்வெட்டைச் சந்தித்த அனுபவம் மக்களுக்கு இருக்கிறது.

அந்தச் சூழலின் விளைவுகளை நேரில் கண்டவர் – அதன் விளைவுகளை அனுபவித்தவர்களில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் ஒருவர்.

8 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்தினால், மின் கட்டண அதிகரிப்பை தடுத்து விடலாமா? நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை.

ஏனென்றால், மின்சார அலகு ஒன்றின் உற்பத்திச் செலவை விட, அதனை விநியோகிக்கும் போது ஏற்படும், செலவினங்கள் தான் அதிகம்.

2020ஆம் ஆண்டு தரவுகளின்படி, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சராசரி உற்பத்திச் செலவு, 9.90 ரூபாவாக இருந்தது.

ஆனால், அதே ஆண்டில் ஒரு அலகு மின்சாரத்தை விநியோகிப்பதற்கு ஏற்பட்ட மொத்த செலவு, 21.67 ரூபாவாகும்.

எனினும், சராசரியாக அலகு ஒன்றை 16.72 ரூபாவுக்கு விற்பனை செய்ததால், மின்சார சபைக்கு, 4.95 ரூபா நட்டம் ஏற்பட்டது. இதன்படி, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவை விட, அதனை விநியோகிக்கும் போது ஏற்படும் செலவு அதிகமாகும்.

அதேவேளை, 2021இல், ஒரு அலகு மின்சாரத்தை விநியோகிக்க ஏற்பட்ட செலவு 18.63 ரூபாவாக குறைந்ததுடன், ஒரு அலகுக்கான நட்டம், 2.26 ரூபாவாக குறைந்தது.

தற்போது, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகிக்க, 59 ரூபா செலவு ஏற்படுவதாகவும், அதனால் 1 அலகு தொடக்கம் எத்தனை அலகு மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் சீரானமுறையில் ஒரே கட்டணத்தை அறவிட வேண்டும் என்றும் மின்சார சபை தரப்பில் கோரப்படுகிறது.

2020 தரவுகளின்படி பார்த்தால், இந்த விநியோகச் செலவில் பாதி மட்டும் தான் மின் உற்பத்திக்கான செலவாக இருக்கும், மிகுதி அதனை விநியோகிப்பதற்கு ஏற்படும் செலவாகும்.

மின்வெட்டை அமுல்படுத்தி- குறிப்பிட்ட நேரம் மின் உற்பத்தியை இடைநிறுத்தினாலும், விநியோக செலவுகள் குறையாது.

ஏனென்றால், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, பராமரிப்பது, ஆளணியை முகாமைத்துவம் செய்வது, அவர்களுக்கான கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் முறைகேடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் இந்த விநியோகச் செலவு.

இலங்கையில் மோசமாக நிர்வகிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மின்சார சபை என்பன முக்கியமானவை.

இவற்றுக்கு ஏற்பட்ட கடன்களுக்கு மின்கட்டணத்தை குறைத்து அறவிட்டது மட்டும் காரணம் அல்ல.

தேவையற்ற செலவினங்கள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், மோசடிகள் என்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.

அண்மையில் மின்கட்டணத்தை செலுத்துவதாக ஒருவர் 100 மில்லியன் ரூபாவை மோசடி செய்திருக்கிறார். அவர் அந்தப் பணத்தை சூதாட்டத்தில் இழந்திருக்கிறார்.

அந்தப் பணம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. போதிய பாதுகாப்பற்ற இணையவழி கொடுப்பனவு முறையை பேணியது தான் அந்த மோசடிக்கு காரணம்.

அது மின்சார சபையின் நிர்வாக முறைகேடு தான் இதற்கு வழிவகுத்தது. இப்படி ஏற்பட்ட செலவினங்கள், இழப்புகளையெல்லாம் அப்பாவி மக்களின் தலையில் கட்டுவதற்கு முயற்சிக்கிறது மின்சார சபை.

அண்மையில், பாடசாலைகள் பலவற்றில் மாணவர்களுக்கு இலங்கை மின்சார சபையினால், அப்பியாசக் கொப்பிகள் கொடையாக வழங்கப்பட்டன.

இலங்கை மின்சார சபையே, நட்டத்தில் இயங்குகின்ற போது, ஏன் மாணவர்களுக்கு அதனை கொடையாக வழங்க வேண்டும்?

அதுபோல மின்சாரசபையில் அதிகளவு ஊழியர்கள் பணியாற்றுவதும், அவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகபட்சமாக இருப்பதும், அரசியல் தலையீடுகளும் மின்சார விநியோக செலவை தாறுமாறாக அதிகரிக்கச் செய்திருக்கிறது.

மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அவ்வப்போது தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி, அச்சுறுத்தி, தங்களுக்கான அதிகபட்ச கொடுப்பனவுகள், வசதிகள்,தேவைகளை நிறைவேற்றி வந்தன என்பதும் முக்கியமானதொரு பிரச்சினை.

உலகச் சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்து விட்டது, எரிபொருள் விலை அதிகரித்து விட்டது, மழை பெய்யாது என்றெல்லாம் காரணத்தைக் கூறி மின்கட்டணத்தை அதிகரிப்பதை விட, மின்விநியோகத்துக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தான், முதல் வேலையாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கமும் மின்சார சபையும் அதற்கு மாறாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு அரசாங்கம் எல்லாச் சுமைகளையும் மக்களின் தலையில் கட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

மக்களுக்கான வசதிகள், சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.

இந்தியாவில், தமிழகத்தில் முதல் 100 அலகுகளை மாநில அரசு இலவசமாகவே வழங்குகிறது.

விவசாயத்துக்கு மின்சாரக் கட்டணம் அறவிடப்படுவதில்லை.  அதுபோல டில்லி அரசாங்கம் 200 அலகுகள் வரை இலவசமாக வழங்குகிறது. பஞ்சாப் அரசாங்கமும் அவ்வாறு தான் கொடுக்கிறது.

ஆனால் இலங்கை அரசாங்கம், மின்சாரக் கட்டணத்தையும், அரச நிர்வாக சீர்கேடுகளால் இழக்கப்படும் நிதியையும் முழுமையாகவே மக்களின் தலையில் கட்ட முனைகிறது.

இந்தளவுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஆண்டில், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு மின்திட்டங்கள் செயற்பாட்டுக்கு வரப் போகின்றன.

அதற்கும் அப்பால், போதிய மழை பெய்யாது என்பதும் வெறும் கணிப்புத் தான்.  இந்த மின்கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கம் குறுக்குவழியைப் பின்பற்றப் பார்க்கிறது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோராமல், மின்கட்டணத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கு பெரிதும் உதவியாக அமைந்தது.

பெற்றோலிய விநியோகம் மற்றும் மின் விநியோகத்தில் காணப்பட்ட குறைபாடுகளை சீர்படுத்தியது.

ஆனால் அந்த ஆணைக்குழு மின்கட்டண அதிகரிப்பு தேவையில்லை என்று கூறுவதால், அரசாங்கம் அதனுடன் முரண்படுகிறது.

இந்த ஆணைக்குழுவை உருவாக்கும் சட்டத்தை தானே தயாரித்ததாகவும், அதனை எப்படி சமாளிப்பது என்பது தனக்குத் தெரியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தில் அவர் தலையிடத் தயாராகிறார் என்பதையே இது காட்டுகிறது.

மின்கட்டண அதிகரிப்பு என்பது எல்லா மக்களின் தலையிலும் இடி விழும் ஒரு செய்தியாக இருக்கும்.

அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஆனாலும் அரசாங்கம் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், எல்லா கட்டணங்களும், விலைகளும் உயரும். அது பணவீக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

தற்போதே நாட்டு மக்கள் பெரும் சுமையில் இருக்கின்ற போது, மின்கட்டணத்தை அதிகரித்தால் அது அவர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்.

அது மீண்டும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களையே தோற்றுவிக்கும். அத்தகையதொரு நிலைமைக்குத் தான் தற்போதைய அரசாங்கம் நாட்டைத் தள்ளிச்செல்கிறது.

-கார்வண்ணன்-

Share.
Leave A Reply