வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (ஜன 24) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – சிலாபம் பகுதியில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும் கல்முனை பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி வைத்தியசாலையில் வைத்தியராக கடமை புரியும் 30 வயதுடைய வைத்தியர் பாத்திமா முப்லிஹா என்பவர் தனது குடும்பத்துடன் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மகப்பேற்று விடுமுறையில் நின்ற வைத்தியர் தனது சொந்த ஊரான புத்தளம் – சிலாபத்தில் இருந்து கடமையினை பொறுப்பேற்க காத்தான்குடி வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், வைத்தியரின் நான்கு மாத ஆண் குழந்தை மஹ்தி கான் மற்றும் வைத்தியரின் மாமாவான 74 வயதுடைய ஏ.எம்.எம்.மவூசூப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இவ் விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர், அவரது தந்தை உட்பட ஐந்து பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நான்கு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியரின் ஒன்றரை வயது மகள் சிகிச்சையின் பின்னர் உறவினர்ககளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் மரணமடைந்த இருவரின் உடல்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.