நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் வெள்ளியப்பன். 32 வயது நிரம்பிய இவர், மும்பையில் கூலி வேலை செய்துவந்திருக்கிறார்.

மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு வரும்போது வெள்ளியப்பன், நெல்லை சி.என்.கிராமத்துக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதுவே கொலை நடக்க காரணமாக இருக்கும் என அவர் அப்போது நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

கொலையான வெள்ளியப்பன் உடல்
கொலையான வெள்ளியப்பன் உடல்

ஏற்கெனவே திருமணமான அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட தவறான தொடர்பு, அவருடைய கணவருக்குத் தெரியவந்ததால், அவர் வெள்ளியப்பனைக் கண்டித்திருக்கிறார்.

அதைக் கண்டுகொள்ளாத இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வெள்ளியப்பன் மும்பை சென்றுவிட்டார்.

தன்னுடைய மனைவி, வெள்ளியப்பனுடன் மும்பைக்குச் சென்ற தகவலைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் கணவர், இது குறித்து கடந்த நவம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவந்திருக்கிறார்கள். இதனிடையே, வெள்ளியப்பனைத் தொடர்புகொண்ட அந்தப் பெண்ணின் கணவர், தன் மனைவியுடனான தொடர்பைக் கைவிடுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அவர் அந்தப் பெண்ணுடனான தொடர்பைத் துண்டிக்கவில்லை.
Also Read
சென்னை: போதைத் தகராறில் நடந்த கொலை! – நெல்லை பட்டதாரிக்கு ஆயுள் தண்டனை
சென்னை: போதைத் தகராறில் நடந்த கொலை! – நெல்லை பட்டதாரிக்கு ஆயுள் தண்டனை

திருமணமான அந்தப் பெண்ணை தன்னுடன் அழைத்துக் கொண்டு மும்பை, கொடைக்கானல் என பல்வேறு இடங்களுக்கு வெள்ளியப்பன் சென்றிருக்கிறார்.

பெண்ணின் கணவரும் உறவினர்களும் இருவரையும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், சொந்த ஊரான குறிச்சிகுளத்திலுள்ள சந்தன மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக வெள்ளியப்பனும், அந்தப் பெண்ணும் சில தினங்களுக்கு முன்பு வந்திருக்கிறார்கள்.

வெள்ளியப்பன் சொந்த ஊருக்கு வந்ததை அறிந்த அந்தப் பெண்ணின் கணவரும் உறவினர்களும் அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்கள். இன்று அவர் தனியாக குறிச்சிகுளம் – தாழையூத்து பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை எதிர்நோக்கியிருந்த கும்பல் வழிமறித்திருக்கிறது.

கொலை நடந்த இடம்

சுதாரித்துத் தப்பிச் செல்ல முயன்ற வெள்ளியப்பனைச் சுற்றி வளைத்த கும்பல், அவரை ஆத்திரத்துடன் அரிவாளால் வெட்டியிருக்கிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரைக் கொடூரமாக வெட்டி தலையைத் துண்டித்துக் கொலைசெய்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்தக் கொலை நடந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஏழு பேரைக் கைதுசெய்திருக்கின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் கணவர் உட்பட இன்னும் சிலரை தேடிவருகின்றனர்.

Share.
Leave A Reply