யாழ். கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டிப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரது மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றை நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவர் கடந்த 21ஆம் திகதி இரவு கராஜிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வழிமறித்து தாக்கி படுகொலை செய்ய முயற்சித்தது.
அவர்களிடமிருந்து தப்பியோடிய போதும், அவரை வீடு வரை துரத்திச் சென்று, வீட்டு வாசலில் வைத்து மூர்க்கத்தனமாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
இப்படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால், நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும், அதனால் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து வாகன திருத்தகத்தில் (கராஜ்) தங்கி இருந்துள்ளதாகவும் தெரிய வந்திருந்தது.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின்போது, அஜித் என்பவரின் மனைவியும், மனைவியின் தந்தையும் இணைந்து திட்டம் தீட்டி கூலிப்படையை பயன்படுத்தி இவரை படுகொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவியும், மனைவியின் தந்தையும் உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.