இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் கலாநிதி எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

 

யாழ்.கலாசார நிலையத்தில் இன்றையதினம் நிகழ்வுகள் இடம்பெற்ற மண்டபத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சரஸ்வதி மஹால் என்று பெயர் சூட்டப்பட்டது.

யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாகன பேரணியும் இடம்பெற்றது.

 

யாழ் கலாசார நிலைய நிர்மாணப்பணிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

பின்னர் அதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய் ஷங்கர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

 

11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம் , நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply