“பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விகளைத் தாண்டி- அவர் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதிகம் பேருக்கு இருக்கிறது”

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நெடுமாறனின் அறிவிப்பின் பின்னால் இருப்பது முற்றிலும் உணர்வு சார்ந்த விடயமே, தவிர அறிவுசார்ந்த விடயம் அல்ல”

பிரபாகரன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை முதல்முதலாக எழுதிய நெடுமாறன் தற்போது அவர் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ள நிலையில், அவர் யாருக்காக இந்த தகவலை வெளியிட்டார் என் று கேள்விகள் எழுப்பப்படுகின்றன”

கடந்த சில நாட்களாக காட்சி, ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெருமளவில் விவாதிக்கப்படும் ஒரே விடயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றியது தான்.

துருக்கியில் பூகம்ப பேரழிவுகளை விட, தமிழ் ஊடகப் பரப்பில், மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கும் விவகாரம் இது.

பிரபாகரன் நந்திக்கடலில் இறந்து விட்டார் என அரசாங்கம் அறிவித்த போது, தலையில் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரது உடலைக் காண்பித்த போது- அது பொய் என்றும், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் தொடங்கிய பிரசாரம் இப்போது இன்னொரு வடிவத்தை அடைந்திருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார், விரைவில் வெளியே வருவார் என்று திடீரென பழ. நெடுமாறன், செய்தியாளர்களைக் கூட்டி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் ஏதோ ஒரு விதத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஏனென்றால் இது ஒரு உணர்வு சார்ந்த விடயம்.

பிரபாகரன் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் கடந்த காலங்களில் ஆயிரம் விமர்சனங்களை முன்வைத்திருந்தவர்கள் கூட, கடந்த 14 ஆண்டுகளில் தமிழர்களின் நிலையை பார்த்து, இதற்கெல்லாம் அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அவர்கள் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா என்று பகிரங்கமாக கூறுவதை நேரில் பார்க்க முடிகிறது.

அந்தளவுக்கு தமிழரின் அரசியல் சீர்கெட்டுப் போயிருக்கிறது, சீரழிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வியல் சீரழிக்கப்பட்டிருக்கிறது. சமூக கட்டமைப்புகள், ஒழுக்கம் என்பன சிதைக்கப்பட்டிருக்கின்றன.

போருக்குப் பின்னரான 14 ஆண்டுகளில் தமிழர் மத்தியில் சமூக ரீதியாக, குடும்ப ரீதியாக, ஒற்றுமையின்மை என்ற பெரும் பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது.

குடும்பங்களில் இருந்து தோன்றிய அந்த ஒற்றுமையின்மையின் உச்சக் கட்டம் தான், தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் பிளவாகும்.

இந்த நிலை விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலத்தில தான் உச்சம் பெற்றது என்பது மறுப்பதற்கில்லை.

இவ்வாறானதொரு நிலையிலும், சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் நலன்களும், உரிமைகளும் பறிக்கப்பட்டு வரும் நிலையிலும், இதற்கெல்லாம், முடிவுகட்ட பிரபாகரன் தான் வர வேண்டும் என்று பகிரங்கமாக மக்கள் கூறுகின்ற நிலை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த நிலையை ஏற்படுத்தியது சிங்கள ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் தான்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விகளைத் தாண்டி- அவர் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதிகம் பேருக்கு இருக்கிறது. ஏனென்றால் இது உணர்வு சார்ந்த விடயம்.

அறிவுசார்ந்த ரீதியாக இந்தக் கேள்வியை எழுப்பினால் கிடைக்கும் பதிலுக்கும், உணர்வு சார்ந்த ரீதியாக இந்தக் கேள்விக்கு கிடைக்கும் பதிலுக்கும், நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.

கடவுள் இருக்கிறாரா என எந்த மதத்தைப் பின்பற்றுபவரிடம் கேட்டாலும், அதற்கு அவர் ஆம் என்று கூறுவார். ஏனென்றால் அது உணர்வு சார்ந்த விடயம்.

அறிவியல் பூர்வமாக அதனை ஒப்புவிக்க முடியுமா என்றால், அங்கே எல்லா மதத்தினரும் சறுக்குவார்கள். ஏனென்றால் அவர்களால் கடவுளை நேரில் காண்பிக்க முடியாது.

பிரபாகரன் விடயத்திலும் அதுதான் உண்மை. அறிவுசார்ந்த ரீதியாக அவரைத் தேடினால், நேரில் முன்னிறுத்த முடியாது.  உணர்வு சார்ந்த ரீதியாக அவர் இருக்க வேண்டும் என்று நம்புகிறவர்கள் அதிகம்.

அந்த நம்பிக்கை நீடிப்பதால் தான், இன்று வரை அவரது மரணம் பலரால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன், இதனை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் வசதியான ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் நிலையும் அது தான். அவரை இப்போது உயிருடன் இருக்கிறார் என்று கூற முடியாது. ஏனென்றால் அவர் உயிருடன் இருந்தால் அவருக்கு வயது 126.

பிரபாகரனின் மரணத்தை அங்கீகரிக்கா விட்டாலும், அதனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தான் மறைத்து வைத்திருக்க முடியும்.  ஏனென்றால் அவரும் இப்போது உயிருடன் இருந்தால், 69 வயதை தொட்டிருப்பார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நெடுமாறனின் அறிவிப்பின் பின்னால் இருப்பது முற்றிலும் உணர்வு சார்ந்த விடயமே, தவிர அறிவுசார்ந்த விடயம் அல்ல.

அவர் உயிருடன் இருந்தால், ஏன் இதுவரை காலமும் மௌனமாக இருந்தார் என்ற கேள்விக்கு எவராலும் பதிலளிக்க முடியாது.

இப்போது ஏன் அந்த மௌனத்தை அவர் நெடுமாறன் மூலம் கலைக்க விரும்புகிறார் என்ற கேள்விக்கும் பதிலளிக்க முடியாது.

நெடுமாறன் குறிப்பிடுவது போல, ராஜபக்ஷவினர் அரசியலில் பலமிழந்து விட்டனர் என்பதும் பொய்.  அவ்வாறு பலமிழந்து போனாலும், நெடுமாறனின் இந்த தகவல் ஒன்றே அவர்களை உயிர்ப்பிக்கப் போதுமானதாக இருக்கும்.

சிங்கள அரசியல் என்பது வித்தியாசமானது. தமிழ்  அரசியல் பரப்பில் இருந்து வேறுபட்டது. நெருக்கடியான காலகட்டங்களில் கூட, தமிழ் அரசியலில் பிளவுகள் காணப்பட்டன. தமிழரின் போராட்டத்தை தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டவர்கள் பலர்.

சிங்கள அரசியலில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. இறுதிக்கட்டப் போரில், சிங்கள அரசியல் ஒட்டுமொத்தமாக போருக்குப் பின்னால் நின்றது. போரை நிறுத்த வேண்டும் என்று யாரும் குரல் கொடுக்கவில்லை.

எல்லோருமே தமிழரை அழித்தேனும், புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தனர்.

மஹிந்த, ரணில், சஜித், அனுரகுமார திசநாயக்க என்று எல்லாத் தரப்பினரும் போரில் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றே கருதினர். சிங்கள முற்போக்கு சக்திகளும் கூட, அவ்வாறே சிந்தித்தன. இதுதான் சிங்கள அரசியல்.

அவர்கள் தமிழருக்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நின்றனர். மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அவர்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், திரும்பி வந்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பார் என்றால், இப்போது சிதறிக் கிடக்கும், சிங்களத் தரப்பினர் எல்லோரும் ஒன்றாக கூடி அவரை எதிர்க்க முற்படுவார்கள்.

இதனைத் தான் இப்போது நெடுமாறன் செய்திருக்கிறார். நெடுமாறனின் இந்த அறிவிப்பு சிங்கள அரசியலுக்கு மட்டுமே கைகொடுக்க கூடியது.

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. தேர்தலை நடத்தக் கூட நிதியில்லாமல் திண்டாடுகிறது. அதனைக் காட்டி தேர்தலை நிறுத்த அரசாங்கம் கங்கணம் கட்டிச் செயற்படுகிறது.

மின்சாரக் கட்டணத்தை படுமோசமாக உயர்த்தியிருக்கிறது. வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, மோசமடைந்து சத்திர சிகிச்சைகளை இடைநிறுத்தும் நிலை தோன்றியிருக்கிறது.

மீண்டும் கடைகளில் இருந்து பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில், சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கிறது நெடுமாறனின் அறிவிப்பு.

இந்த அறிவிப்பின் மூலமாக நெடுமாறன் எதனைச் சாதிக்க முயன்றிருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரபாகரன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை முதல்முதலாக எழுதியவர் நெடுமாறன். அந்தளவுக்கு அவர் பிரபாகரனுடன் நெருங்கியவராக இருந்தார்.

அவர் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ள நிலையில், அவர் யாருக்காக இந்த தகவலை வெளியிட்டார் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஏனென்றால் இந்த அறிவிப்புக்குப் பின்னால் யாரெல்லாம் உள்ளனர் என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தச் சொல்கிறது இந்தியா. அதனை அமுல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கள பௌத்த பேரினவாதிகளின் எதிர்ப்பினால் அடங்கிப் போகத் தொடங்கியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில், 13ஐ நிறைவேற்ற முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் அவருக்கு பிரபாகரன் விவகாரம் கைகொடுக்கும்.  இந்தப் பிரச்சினையில் இருந்து திசை திருப்ப வழிவகுக்கும்.

அதுபோலத் தான், உயர்பாதுகாப்பு வலயக் காணிகள், விடுவிப்பு, படைக்குறைப்பு அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவும் அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும். அதற்குத் துணைபோகும் வகையில் தான் நெடுமாறனின் தகவல் அமைந்திருக்கிறது.

நெடுமாறன் இதனை யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளியிட்டிருக்கிறார் என்ற கேள்வி பரவலாக உள்ளது. நெடுமாறானின் அறிவிப்பின் உண்மையானதா என்பதை தெரிந்து வைத்திருக்கும் தங்களைத் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் என்று கூறுகின்றவர்கள் கூட நழுவலாகவே கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஏன் உண்மையைக் கூறும் துணிச்சல் வரவில்லை. அவற்றுக்கு அப்பால், இப்போது பிரபாகரன் திரும்பி வந்தாலும் கூட, தமிழ் மக்களை அவரால் காப்பாற்ற முடியாது.

ஏனென்றால், 14 ஆண்டுகளில் ஏராளம் மாற்றங்கள் நடந்து விட்டன. அரச படைக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் பிரபாகரன் மட்டும் தனித்து உயிருடன் திரும்பி வருவதால், ஒன்றையும் சாதிக்க முடியாது.

அவர், பழைய போர்த் திறனுடனும், படை பலத்துடனும் வந்தால் மட்டும் தான், அவரால் எதையும் செய்ய முடியும். அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களுக்கு, அது சாத்தியமா என்பதை கூற வேண்டியதில்லை.

-என்.கண்ணன்-

Share.
Leave A Reply