நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன. வைப்புக்களுக்கான வட்டி 14.5 சதவீதமாகவும் கடன்களுக்கான வட்டி வீதம் 15.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஆனால் பொதுவாக வங்கி கட்டமைப்பில் இந்த வட்டி வீதம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 20 வீதத்தையும் தாண்டி வைப்புக்களுக்கு வட்டி வழங்கப்படுகின்றது. அதேபோன்று கடன்களுக்கான வட்டி வீதம் 27 வீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த மாதங்களில் திறைசேறி முறிகள் 30 வீதத்துக்கும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த வகையில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அதிக அளவில் இந்த வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்ற வட்டி வீதங்களை விட பாரியளவில் வங்கி கட்டமைப்பில் வட்டி வீதங்கள் அதிகரித்திருக்கின்றன.
வர்த்தகங்கள் பாதிப்பு
இந்த அதிகரிப்பானது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை கடுமையாக பாதித்திருக்கிறது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் வங்கி கடன்களை பெற்று தமது வர்த்தகங்களை முன்னெடுத்து செல்கின்றன.
வங்கிக்கு மாதா மாதம் கடன் தவணையை செலுத்த வேண்டி இருக்கின்றது. ஆனால் வங்கி வட்டி வீதம் அதிகரிக்கும் போது வர்த்தகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழலில் மேலும் வட்டி வீதத்தை 2.5 வீதத்தினால் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்த இருப்பதாகவும் எனினும் அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.
இது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. மேலும் 2.5 வீதத்தால் வட்டி வீதங்கள் அதிகரித்தால் அது மக்களை கடுமையாக பாதித்து விடும். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் வட்டி விகிதம் மேலும் அதிகரித்தால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வார்கள்.
தொழில் இழப்புகள் ஏற்படும்
அதன் காரணமாக தொழில் இழப்புகள் ஏற்படும். சிறிய நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களே நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றனர். அவர்கள் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் இயந்திரமாக செயற்படுகின்றனர்.
வட்டி வீத அதிகரிப்பினால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டால் அது தொழில் வாய்ப்புக்களை இழப்பதற்கு காரணமாக அமைந்துவிடும்.
ஏன் வட்டி வீதம் அதிகரிக்கிறது ?
மத்திய வங்கியின் வட்டி வீத அதிகரிப்பு என்பது மிக மிக தீர்க்கமானதாகும். நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் போது பொதுவாக மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்கும்.
அதாவது வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது பொருளாதார கோட்பாடாக அமைந்திருக்கின்றது.
அதாவது எப்படி வட்டி வீதங்களை அதிகரிக்கும்போது பணவீக்கம் குறைவடையும் என்பதை பார்க்க வேண்டும்.
முதலில் பணவீக்கம் என்பது நாட்டின் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்ற வேகத்தைக் காட்டுகின்றது.
பணவீக்கம் அதிகமாக காணப்படும் பட்சத்தில் அந்த நாட்டின் பொருட்கள் சேவைகளின் விலைகள் மிக அதிகமான வேகத்தில் அதிகரிக்கின்றன என்பது அர்த்தமாகும்.
பொருட்களின் விலை உயர்வு
கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுவான பணவீக்கம் 80 வீதமாகவும் உணவு பணவீக்கம் 90 வீதமாகவும் அதிகரித்தன.
இதன்மூலம் எந்த அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் வங்கி வட்டி வீதங்கள் அதிகரிப்பதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய வங்கி கருதுகிறது.
அது எப்படி என்றால் வங்கிகளின் வட்டி வீதங்கள் அதிகரிக்கும் போது மக்கள் கடன்களை வங்கிகளில் பெறமாட்டார்கள்.
அதாவது வங்கி கடன்களுக்கான வட்டி அதிகம் என்பதால் மக்கள் கடன்களை பெற மாட்டார்கள். அதற்கு மாறாக வட்டி அதிகம் கிடைப்பதால் மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கி யில் வைப்பு செய்து விடுவார்கள்.
அதன் ஊடாக அதிகளவில் வட்டியை பெறமுடியும் என்ற மக்கள் கருதுவார்கள். இவ்வாறு கடன்களை பெற்றுக் கொள்ளாமலும் தங்களிடமுள்ள நிதியை வங்கிகளில் வைப்பு செய்யும்போது மக்களின் கைகளில் பணம் அதிகம் இருக்காது.
அதனால் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் காட்டமாட்டார்கள்.
பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி குறைவடையும் போது பொருட்களின் விலைகள் குறைவடையும். அதனூடாக பணவீக்கம் குறையும் என்பதே மத்திய வங்கியின் பொருளாதார ரீதியான கோட்பாடாக அமைந்திருக்கிறது.
குறைவடையும் பணவீக்கம்
எனவே பாரியளவில் அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவே மத்திய வங்கி கடந்த 2022 ஆம் ஆண்டு வட்டி வீதங்களை அதிகரித்தது. அது தற்போது பலன் கொடுத்திருக்கின்றமையையும் காணமுடிகிறது.
பணவீக்கம் தற்போது குறைவடைந்து வருகிறது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், ஜனவரியில் 54.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்தை கொண்டுவர வேண்டுமென்பதே மத்திய வங்கியின் நோக்கமாகும். இந்த பின்னணியில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு நிபந்தனையாகவே காணப்படுகிறது.
வட்டி வீதத்தை அதிகரிக்கும் போது தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும் தற்போது மேலும் 2.5 வீதத்தினால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்திருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதே குறையாது
அதனால் வட்டிவீதம் தற்போது இருக்கின்ற வகையிலேயே சில காலத்துக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு கிடைத்ததும் வட்டி வீதம் குறைவடையும் என்ற மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் வட்டி வீதத்தை மேலும் அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை மக்களுக்கு அதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது.
வட்டி வீதங்கள் இதனை விட அதிகரிக்கப்படாது என்றும் விரைவில் குறைவடையும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதே யதார்த்தமாகும்.
-ரொபட் அன்டனி–