யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது.
இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் பாடசாலையிலுள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளான்.
எனினும், பாடசாலைக்கான மின்மார்க்க வயர்களில் சிக்குண்டதன் காரணமாக மாணவன் நேரடியாக நிலத்தில் விழாததால் உயிராபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
சக மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் மீட்கப்பட்ட மாணவன் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனின் புத்தகப் பையிலிருந்து தன்னுடைய உயிர் மாயப்பினை நியாயப்படுத்தும் வகையிலான 7 பக்கங்களைக் கொண்ட மிக நீண்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை மற்றும் கணினி விளையாட்டுகளில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகக் குறித்த மாணவன் அண்மைக் காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தினால் காயமேற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்